வகை  |  odb

அதுவே அலுவலகமும் கூட

வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.

நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்,  தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும்  தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).

தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

விசுவாசத்தில் உறுதியாயிருத்தல்

டெஸ்மாண்ட் டாஸ் என்பவர் இரண்டாம் உலகப்போருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் யுத்தம் செய்பவனாக அல்ல. அவனுடைய மத நம்பிக்கை அவனை துப்பாக்கியேந்தி செல்வதை அனுமதியாததால், டாஸ், போர் வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்தான். ஒரு யுத்தத்தின் போது, எதிரிகளின் மும்முரமான துப்பாக்கி குண்டுகளையும்  தாண்டி, எழுபத்தைந்து காயமுற்ற வீரர்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றான். அவனுடைய கதை ஒரு செய்தி படமாக வெளியிடப்பட்டது. ஹேக்சா ரிட்ஜ் என்ற திரைப்படமாகவும் வெளியானது.

கிறிஸ்தவ விசுவாச வீரர்களின் பட்டியலில் இத்தகைய தைரியமான நபர்களானள் ஆபிரகாம், மோசே, தாவீது, எலியா, பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறுகின்றன. ஆனாலும் பாராட்டப்படாத விசுவாச வீரர்களானள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும், யூத மதத் தலைவர்களால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருந்த போதிலும், இவர்கள் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கி, யூதர்களின் முறைமையின் படியே அடக்கம் பண்ணினார்கள் (யோவா. 19:40-42). யூதருக்கு பயந்து இயேசுவின் அந்தரங்க சீடனாக இருந்த யோசேப்புக்கும், இரவு நேரத்தில் மட்டுமே இயேசுவைச் சந்தித்த நிக்கொதேமுவுக்கும், இது ஒரு தைரியமான செயல். (வச .38-39). இதில் இன்னும் நம்மைக் கவர்வது என்னவெனில், இயேசுகிறிஸ்து வெற்றியாக கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதற்கு முன்னரே இவர்கள் தங்கள் விசுவாசத்தை உறுதியாய் வெளிப்படுத்தினார்கள். ஏன் ?

இயேசுவின் மரணம் நேர்ந்த விதமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுமே (மத். 27:50-54) பயந்திருந்த இந்த சீடர்களின் விசுவாசத்தை முற்றிலும் உறுதிபடுத்தின. அவர்கள் மனிதனுக்கு பயப்படுவதைக் காட்டிலும், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க கற்றுக் கொண்டனர். நாமும் இவர்களைப் போன்று, தேவன் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு, நமக்கு ஆபத்து நேரிடுவதாயினும் ,தைரியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.

பாதுகாப்பானது எனக்கருதப்படும் தவறான இடங்கள்

எங்களுடைய நாய் ரூபெர்ட் சிறிய குட்டியாக இருந்த போது, வெளியிடங்களுக்குச் செல்வதற்கு மிகவும் பயப்படும். நான் அதனை வலுக் கட்டாயமாக அருகிலுள்ள பூங்காவிற்கு இழுத்துச் செல்வேன். அப்படிச் சென்றிருந்த போது ஒரு நாள், நான் அதனைக் கட்டி வைத்திருந்த கயிற்றை விட்டு விட்டேன். அது வேகமாக ஓடி, தான் பாதுகாப்பான இடமெனக்கருதும் எங்கள் வீட்டை அடைந்தது .

இந்த அனுபவம், எனக்கு ஒரு மனிதனை நினைவுக்கு கொண்டு வருகின்றது. நாங்கள் அமர்ந்திருந்த விமானம், ஓடுதளத்தில் ஓட ஆரம்பித்ததும், அருகிலிருந்த       மனிதன் என்னிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தான். “நான் இந்த       விமான பயணத்தின் போது மது அருந்தி விடுவேன்” என்றான்.” “குடிக்க விரும்பவில்லை என்பது போல தோன்றுகின்றதே” என்றேன். “ஆம்” என்றான். “ஆனால் நான் மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விடுகிறேன்” என்றான். அவன் குடித்து விட்டான். அவன் விமானத்திலிருந்து இறங்கிய போது, அவனுடைய மனைவி அவனை அணைத்துக் கொண்டாள். அவன் அருந்தியிருந்த மதுவின் நாற்றத்தை முகர்ந்ததும் அவனைத் தள்ளி விட்டாள். இதனைக் காண்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது. மது அருந்தினால் தான் ,பாதுகாப்பாக இருப்பதாக அவன் எண்ணுகின்றான். ஆனால் அப்படியல்ல.

இயேசு தன்னுடைய பணிக்காலத்தை துவங்கியதும், “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்றார் (மாற். 1:15) மனந்திரும்புதல் என்பது எதிர் திசைக்குத் திரும்புதல். “தேவனுடைய ராஜ்யம்” என்பது நம்முடைய வாழ்க்கையை அவருடைய அன்பின் கட்டளைகளால் ஆளுகை செய்வதாகும். நம்மைச் சிக்க வைத்துவிடும் ஓரிடரத்திற்கு ஓடிச் செல்வதை விட ,அல்லது பயத்தாலும், அடிமைத்தனத்தாலும் ஆளுகை செய்யப் படுவதையும் விட, தேவன் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுப்போமானால், அவர் அன்போடு நம்மை ஒரு புதிய வாழ்விற்குள்ளும், விடுதலைக் குள்ளும் நடத்திச் செல்வார்.

இன்றைக்கு, ரூபெர்ட் பூங்காவினுள் குரைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு ஓடுகின்றது. நான் விமானத்தில் சந்தித்த அந்த  மனிதனும் தான் பாதுகாப்பானது என நம்பிக் கொண்டிருக்கும் மாய இடத்தை விட்டு விட்டு இதே மகிழ்ச்சியையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஜெபிக்கிறேன்.

தேவனுடைய பார்வையில் தகுதியைப் பெறுதல்

நான் கல்லூரி படிப்பை முடித்த போது, ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் என்னை அங்கு பணிபுரியும் படி தேர்ந்தெடுத்தது. அப்பொழுது எனக்கு கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதுவதற்கு எதுவும் தெரியாது. தொழில்துறை அனுபவமும் இல்லை. அங்கு முதல் நிலை வேலைக்கான நேர்முகத் தேர்வின் போதுதான், அந்தக் கம்பெனி எந்தவொரு முன் அனுபவத்தையும் எதிர்பார்க்கவில்லையெனத் தெரிந்து கொண்டேன். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்கும் தனித்திறன், சரியான தீர்மானம் எடுத்தல், குழுவினரோடு இணைந்து பணி புரிதல் போன்ற தனி நபர் பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இத்தகைய பண்பு கொண்ட நபர்களுக்கு தேவையான திறமைகளைச் சொல்லிக் கொடுத்து விடலாமென அக்கம்பெனி நம்பியது.

நோவாவிற்கு ஒரு கப்பலைக் கட்டக் கூடிய எந்த ஒரு முன் அனுபவமும் இருந்ததில்லை.  அவன் ஒரு படகு செய்யும் தொழிலாளியுமல்ல, தச்சு வேலை செய்பவனுமல்ல. மாறாக, நோவா ஒரு விவசாயி. தன்னுடைய மேலாடையில் அழுக்குப் படும்படி வேலை செய்பவன். கலப்பையை தன் கைகளால் பிடிப்பவன். அந்நாட்களில் உலகில் நடந்து வந்த கொடுமைகளை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமென தேவன் தீர்மானித்தார். நோவா இந்த தீங்குகளுக்கெல்லாம் தன்னை விலக்கிக் காத்துக் கொண்டான். ஏனெனில், “அவன் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” (ஆதி. 6:9). நோவாவின் இருதயம் போதனைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததை தேவன் கண்டார். தன்னைச் சுற்றிலும் நடக்கும் ஊழல்களை எதிர்த்து நிற்கும் பெலத்தோடு நீதியாய் நடந்ததை தேவன் கண்டார்.

தேவனுக்குப் பணி செய்ய வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப் படும் போது, நான் இந்தப் பணி செய்ய தகுதியானவனல்ல என நாம் நினைக்கத் தேவையில்லை. தேவன் நம்முடைய திறன்களின் அடிப்படையில் நம்மைத் தேர்வு செய்யவில்லை. அவர் நம்முடைய குண நலன்களையே கனப் படுத்துகின்றார். நாம் அவர் மீது வைத்துள்ள அன்பையும், அவரை நம்புவதற்குத் தயாராக இருக்கின்றோமா என்பதையுமே பார்க்கின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இத்தகைய குணங்களை உருவாக்கி விட்ட பின்பு நாம் அவருடைய சித்தத்தை இப்புவியில் நிறைவேற்றுவதற்கு சிறிதும், பெரிதுமான வகைகளில் நம்மை பயன் படுத்துவார்.