பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.