தழும்புகள் கூறும் கதைகள்
என்னுடைய அம்மா வளர்த்து வரும், பாண்டா முகம் கொண்ட பான்சி மலர்களை ஒரு வண்ணத்துப்பூச்சி சுற்றிச் சுற்றி வந்தது. நான் குழந்தை யாயிருந்த போது, அதைப் பிடித்து விட ஆவலாயிருந்தேன். நான், எங்களது பின் பக்க வளாகத்திலிருந்து, வேகமாக சமையலறைக்குள் வந்து, ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு திரும்பிய போது, பின்புற சிமென்ட் தளத்தில் வழுக்கி விழுந்தேன். என்னுடைய கரத்திருந்த கண்ணாடி குவளை உடைந்து, என்னுடைய கணுக்கையை வெட்டியது. அவ்விடத்தில் பதினெட்டு தையல்கள் போட வேண்டியதாகி விட்டது. இன்றும், என்னுடைய கணுக்கையில் கம்பளி பூச்சி போன்ற தழும்பு காணப்படுகின்றது. அந்த தழும்பு, இன்றைக்கும் நான் காயப்பட்டதையும், மீண்டும் சுகம் பெற்றதையும் கூறிக் கொண்டிருக்கிறது.
இயேசு, மரித்து, உயிர்தெழுந்து, சீடர்களுக்கு காட்சியளித்த போது, அவர் தன்னுடைய தழும்புகளைக் காண்பித்தார். தோமா, அவருடைய “கைகளில் ஆணிகளால் உண்டான காயத்தைத்’’ தான், காண வேண்டும் என்கின்றார், என யோவான் எழுதுகின்றார். இயேசு தோமாவை நோக்கி, நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார் (யோவா. 20:25,27). அவர் உயிர்த்தெழுந்த பின்பு, அவருடைய பாடுகளால் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை பார்க்க முடிகிறது, அது, அவர் அதே இயேசு தான் என்பதைக் காட்டுகிறது
இயேசுவின் தழும்புகள் அவர் இரட்சகர் என்பதையும், மீட்பின் கதையையும் நமக்குச் சொல்கின்றது. அவருடைய பாதங்களிலும், கரங்களிலும் ஏற்பட்ட துளைகளும், விலாவில் ஏற்பட்ட குழியும், அவர் நமக்காகப் பட்ட வேதனைகளையும், காயங்களையும், அதன் பின் சுகமடைந்ததையும் சொல்லுகின்றது. நம்மை முற்றிலும் மீட்டுக்கொள்ளவே அவர் இத்தனை பாடுகளையும் ஏற்றுக்கொண்டார்
இயேசுவின் தழும்புகள் கூறும் கதையை நீ எப்பொழுதாகிலும் நினைத்துப் பார்த்ததுண்டா?
இருளில் வந்த ஒளி
“தீஸ் ஆர் த ஜெனரேஷன்ஸ்” என்ற புத்தகத்தில் திரு.பியே என்பவர் தேவனுடைய உண்மையையும், இருளையும் ஊடுருவிச் செல்லும் அவருடைய சுவிசேஷத்தின் வல்லமையையும் பற்றி விளக்குகின்றார். அவருடைய தாத்தாவும், பெற்றோரும், மற்றும் அவருடைய சொந்த குடும்பமும், கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தை பரப்பியதற்காக பாடுப்பட்டனர். நண்பர் ஒருவருக்கு கிறிஸ்துவைப் பற்றி கூறியதற்காக திரு.பியே சிறையிலடைக்கப் பட்டார். ஆனால், அவருடைய விசுவாசம் வளர்ந்தது. இதே போலவே அவருடைய பெற்றோரும் அடைக்கப்பட்டிருந்த ஒரு கொடுமையான முகாமில் அவர்களும் கிறிஸ்துவின் அன்பைக்குறித்து பகிர்ந்து கொண்டனர். திரு.பியேவின் வாழ்விலும் யோவான் 1:5ல் கூறப்பட்டுள்ள “அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை” என்ற வார்த்தை உண்மையாயிருந்தது.
இயேசுவும் சிறை பிடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படும் முன்னர், சீடர்களிடம் ,அவர்கள் சந்திக்கவிருக்கின்ற பாடுகளைக் குறித்து எச்சரித்தார். மேலும் அவர்கள் எல்லாராலும் புறக்கணிக்கப்படுவர் எனவும் கூறினார். ‘‘அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்’’ என்றார் (16:3). இயேசு அவர்களுக்கு ஆறுதலின் வார்த்தைகளையும் கொடுத்தார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்றார் (வச. 33).
இயேசுவின் சீடர்களில் அநேகர், திரு.பியே குடும்பத்தினர் அநுபவித்ததைப் போன்று பாடுகளைச் சந்தித்திருக்க மாட்டார்கள். நாமும் பாடுகளைச் சந்திக்க நேரலாம். அதற்காக நாம் தைரியம் இழக்கவோ, ஆத்திரம் அடையவோ வேண்டாம். நமக்கு உதவி செய்வதற்காக பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்புவதாக வாக்களித்துள்ளார். நாம் வழிநடத்தப் படவும், தேற்றப்படவும், அவரை நோக்கிப் பார்ப்போம் (வச. 7). இருண்ட நேரங்களில், நாம் விழாத படி, தேவனுடைய வல்லமையுள்ள பிரசன்னம் நம்மைத் தாங்கிக் கொள்ளும்.
இதுவரை பயணம் செய்யாத சாலை வழியே
ஐந்து வருடத் திட்டம் வைத்திருக்கின்றாயா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அறியாத ஒரு பாதை வழியே ஐந்து ஆண்டுகள் செல்ல, நான் எப்படி திட்டமிடமுடியும்?
1960 ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில், நான் மாணவர்களின் ஜெபக்குழு தலைவனாக இருந்தேன். நான் அங்கு உடற்பயிற்சி பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்ததால், அநேக விளையாட்டுகள் இருந்தன. நான் விளையாட்டில் மகிழ்ந்தேன். ஆனால், ஒரு நல்ல போதகனுக்குக் தேவையானதொன்றும் எனக்குப் போதுமானதாக இல்லை. அநேக நாட்கள், அந்த வளாகத்தினுள் ஒரு குருடனைப் போல அலைந்தேன், தேவனிடம், நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டேன். ஒரு நாள், எதிர்பாராத விதமாக, ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனுடைய நண்பர்களுக்கு ஒரு வேத பாட பயிற்சியை நடத்தித் தருமாறு என்னை அழைத்தான். அது தான் என் பணி வாழ்வின் ஆரம்பம்.
தேவன் ஒரு சந்தியில் நின்றுகொண்டு வழிகாட்டுபவரல்ல, அவர் வழி நடத்துபவர். அவர் நம்மோடு நடந்து வருபவர், இதுவரை நடக்காத, நினைத்துப் பார்க்காத, பாதை வழியே நம்மை நடத்திச் செல்பவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரோடு கூட நடப்பதே.
நாம் நடக்கும் பாதை எளிதானதாக இருக்காது. சில இடங்கள் கரடு முரடாக இருக்கும், “அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்” என்றும், “அவர்களைக் கைவிடா திருப்பேன்” எனவும் தேவன் வாக்களிக்கின்றார் (ஏசா. 42:16) அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன்.
“நாம் வேண்டிக்கொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவன்” (எபே. 3:20). என பவுல் குறிப்பிடுகின்றார். நாம் நமக்கென்று திட்டங்களையும், தரிசனங்களையும் காணலாம். ஆனால், தேவனுடைய திட்டங்கள் நாம் நினைப்பதற்கு மேலானவை. எனவே நாம் நம்முடைய திட்டங்களைப் பற்றிக் கொள்வதை விட்டுவிட்டு, தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை காணும்படி அவரை நோக்குவோம்.
போர் வீரனைப் போல நட
பதினெட்டே வயது நிரம்பிய எம்மா, சமுதாய ஊடகங்களில் இயேசுவைப் பற்றி பேசி வந்தாள். வம்பர்கள், அவள் கிறிஸ்துவின் மீது வைத்துள்ள ஆழ்ந்த அன்பினையும், மகிழ்ச்சியையும் விமர்சித்த போதிலும், சிலர் அவளுடைய புறத் தோற்றத்தைக் குறித்துக் கடுமையாகச் சாடியபோதும், அவள் உண்மையாய் இருந்தாள். வேறு சிலர், அவள் தன்னுடைய நேரத்தையெல்லாம் தேவனுக்கென்று அர்ப்பணித்திருப்பது, ஒரு அறிவில்லாத செயல் என்றனர். இந்த இரக்கமில்லாத வார்த்தைகள் எம்மாவின் இருதயத்தை ஆழமாக காயப்படுத்தியிருந்த போதிலும், இயேசுவின் மீதும், பிறர் மீதுமுள்ள அன்பினால், விசுவாசத்தின் தைரியத்தோடு சுவிசேஷத்தைப் பரப்புவதை விடவில்லை. பிறர் தரும் விமர்சனங்களின் மூலம் அவளுக்குக் கிடைத்த அடையாளத்தையும், அவமதிப்பையும் நம்பும்படி தூண்டப்படும் போது, அவள் தேவனுடைய உதவியை நாடினாள், தன்னை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபித்தாள், வேத வசனங்களைத் தியானித்தாள். பரிசுத்த ஆவியானவர் தந்த தைரியத் தோடும், பெலத்தோடும் தொடர்ந்து பணி செய்தாள்.
கிதியோன், மீதியானியரின் கையினால் மிகுந்த உபத்திரவத்தைச் சந்தித்தான் (நியா. 6:1-10) தேவன் அவனை “பராக்கிரமசாலி” என்று அழைத்தபோதும் அவன் தனக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட சந்தேகங்களையும், தாழ்வு மனப்பான்மையையும், பாதுகாப்பின்மையையும் விட்டு வெளிவரப் போராடினான் (வச. 11-15). தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கின்றதை பல முறை சந்தேகித்தான். தேவனுடைய பிரசன்னத்தைக் குறித்தும், தன்னுடைய தகுதியைக் குறித்தும் கேள்விகள் கேட்டான். கடைசியாக விசுவாசத்தில் தன்னை அர்ப்பணித்தான்.
நாம் தேவனை நம்பும் போது, நம்மைக் குறித்து அவர் சொல்வது உண்மையென விசுவாசித்து வாழ வேண்டும். துன்பங்கள், நமக்குள் சந்தேகங்களைக் கொண்டு வரலாம், நம் அன்புத் தந்தை நம்மோடிருந்து, நமக்காக யுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளார். எனவே நாம் வலிமையான போர் வீரனாக ,தேவனுடைய அன்பை ,ஆயுதமாகவும், அவருடைய முடிவில்லா கிருபை நம்மைப் பாதுகாக்க, அவருடைய உண்மையைப் பற்றிக் கொண்டு வாழ்வோம்