நான் கல்லூரி படிப்பை முடித்த போது, ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் என்னை அங்கு பணிபுரியும் படி தேர்ந்தெடுத்தது. அப்பொழுது எனக்கு கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதுவதற்கு எதுவும் தெரியாது. தொழில்துறை அனுபவமும் இல்லை. அங்கு முதல் நிலை வேலைக்கான நேர்முகத் தேர்வின் போதுதான், அந்தக் கம்பெனி எந்தவொரு முன் அனுபவத்தையும் எதிர்பார்க்கவில்லையெனத் தெரிந்து கொண்டேன். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்கும் தனித்திறன், சரியான தீர்மானம் எடுத்தல், குழுவினரோடு இணைந்து பணி புரிதல் போன்ற தனி நபர் பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இத்தகைய பண்பு கொண்ட நபர்களுக்கு தேவையான திறமைகளைச் சொல்லிக் கொடுத்து விடலாமென அக்கம்பெனி நம்பியது.

நோவாவிற்கு ஒரு கப்பலைக் கட்டக் கூடிய எந்த ஒரு முன் அனுபவமும் இருந்ததில்லை.  அவன் ஒரு படகு செய்யும் தொழிலாளியுமல்ல, தச்சு வேலை செய்பவனுமல்ல. மாறாக, நோவா ஒரு விவசாயி. தன்னுடைய மேலாடையில் அழுக்குப் படும்படி வேலை செய்பவன். கலப்பையை தன் கைகளால் பிடிப்பவன். அந்நாட்களில் உலகில் நடந்து வந்த கொடுமைகளை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமென தேவன் தீர்மானித்தார். நோவா இந்த தீங்குகளுக்கெல்லாம் தன்னை விலக்கிக் காத்துக் கொண்டான். ஏனெனில், “அவன் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” (ஆதி. 6:9). நோவாவின் இருதயம் போதனைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததை தேவன் கண்டார். தன்னைச் சுற்றிலும் நடக்கும் ஊழல்களை எதிர்த்து நிற்கும் பெலத்தோடு நீதியாய் நடந்ததை தேவன் கண்டார்.

தேவனுக்குப் பணி செய்ய வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப் படும் போது, நான் இந்தப் பணி செய்ய தகுதியானவனல்ல என நாம் நினைக்கத் தேவையில்லை. தேவன் நம்முடைய திறன்களின் அடிப்படையில் நம்மைத் தேர்வு செய்யவில்லை. அவர் நம்முடைய குண நலன்களையே கனப் படுத்துகின்றார். நாம் அவர் மீது வைத்துள்ள அன்பையும், அவரை நம்புவதற்குத் தயாராக இருக்கின்றோமா என்பதையுமே பார்க்கின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இத்தகைய குணங்களை உருவாக்கி விட்ட பின்பு நாம் அவருடைய சித்தத்தை இப்புவியில் நிறைவேற்றுவதற்கு சிறிதும், பெரிதுமான வகைகளில் நம்மை பயன் படுத்துவார்.