
நீ செல்லும் பாதையில் நிலைத்திரு
மத்திய சீனாவில், நான் லீ போ வைப் பின்தொடர்ந்து, மலைகளுக்கிடையே போடப்பட்டிருந்த தளத்தின் வழியே நடந்து செல்கையில் பொழுது சாய்ந்து விட்டது. இதற்கு முன்பாக நான் இந்தப் பாதை வழியே சென்றதில்லை, எனக்கு முன்பாக ஒரு அடி தொலைவு தான் என்னால் பார்க்க முடிந்தது, என்னுடைய இடது புறத்தில் எவ்வளவு ஆழத்திற்கு பள்ளம் உள்ளது என்பதையும் என்னால் காணமுடியவில்லை. நான் மூச்சு வாங்கியவனாய், லீயோடு ஒட்டிக்கொண்டேன். நாங்கள் எங்கு செல்கின்றோம், அல்லது எவ்வளவு நேரம் ஆகும் என்பதையெல்லாம் அறியாதவனாய், என்னுடைய நண்பனையே நம்பிச் சென்றேன்.
எதிலும் சந்தேகப்படும் சீஷனான தோமாவின் நிலைமையில் நான் இருந்தேன். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் அவர்களுக்கு ஓர் இடத்தை ஆயத்தப்படுத்தப் போவதாகத் தெரிவித்தார். “நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்” (யோவா. 14:4) என்பதாகத் தெரிவித்தார். உடனே தோமா விவாதத்துக்குரிய ஒரு கேள்வியை எழுப்பினான். “ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை எப்படி நாங்கள் அறிவோம்?” என்றான்.
இயேசு உடனடியாக அவர்களை எங்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை அவனுக்கு விளக்கி, அவனுடைய சந்தேகத்தைத் தீர்க்க முற்படவில்லை. ஆனால் அவர் தன் சீஷர்களிடம், அவரே அவர்களுக்கு வழியாக இருப்பதாக உறுதியளித்தார். அதுவே அவர்களுக்குப் போதுமானது.
நமக்குள்ளும் எதிர்காலத்தைக் குறித்து கேள்விகள் எழலாம். நமது பிற்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஒருவரும் அறியோம். வாழ்க்கை முழுவதும் நெழிவுகளாகத்தான் உள்ளது, நமக்கு எதிரே வருவதை நம்மால் காணமுடியவில்லை. அது சரிதான், ஆனால் நாம் இயேசுவை அறிந்துகொண்டோமேயானால், அவரே நமக்கு “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்”(வ.6) என்கின்றார்.
அடுத்து என்ன வரும் என்பதை இயேசு அறிவார், அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருக்கு மிக நெருக்கமாக நடக்க வேண்டும் என்பதே.

எல்லாவற்றையும் விட விலையேறப்பெற்றவர் தேவன்
கடந்த காலத்தில், இயேசுவின் விசுவாசிகளால் காயப்படுத்தப்பட்ட என்னுடைய தாயார், நான் என்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தபோது, கோபமுற்றார், “ஆகவே நீ இப்பொழுது என்னை நியாயம் தீர்ப்பாயோ? அது உன்னால் முடியாது” என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார், ஓர் ஆண்டு முழுவதும் அவர் என்னிடம் பேசவே இல்லை. நான் மிகவும் வருந்தினேன், ஆனால் நான் தேவனோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டேன், அது எல்லா உறவுகளைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருந்தது. அவர் என்னுடைய அழைப்பை மறுக்கும் ஒவ்வொரு வேளையும் நான் தேவனிடம் ஜெபிப்பேன், நான் அவர்கள் மீது அன்பாயிருக்க எனக்கு உதவியருளும் என்று கேட்டேன்.
இறுதியில் நாங்கள் சமாதானமானோம். சில மாதங்களுக்குப் பின்னர் அவர், “நீ மாறிவிட்டாய், நான் உன்னிடமிருந்து இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார். சீக்கிரத்தில் அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டார், எஞ்சிய நாட்களில் தேவனையும் பிறரையும் நேசித்து வாழ்ந்தார்.
இயேசுவிடம் ஓடிச் சென்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஒரு மனிதன், துக்கத்தோடே திரும்பிச் சென்றான், ஏனெனில் அவன் தன்னுடைய ஆஸ்தியை விட்டு விட மனதில்லாதிருந்தான் (மாற். 10:17-22), அதேப் போன்று நானும் அவரைப் பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டு விட முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.
தேவனை விட, நாம் அதிகமாக நேசிக்கும் மக்களையும் பொருட்களையும் நம்மால் எளிதில் விட்டு விட முடியாது (வ.23-25). ஆனால் நாம் இவ்வுலகில் விட்டு விடுபவைகளின் அல்லது இழப்பவைகளின் மதிப்பு இயேசுவோடு நாம் அநுபவிக்கப்போகும் நித்திய வாழ்வை விட நிச்சயமாக அதிகமில்லை. நம் மீது அன்புள்ள தேவன், எல்லா ஜனங்களையும் மீட்பதற்காக தன்னையே பலியாகத் தந்தார், அவர் நம்மை தம்முடைய சமாதானத்தினால் மூடிக்கொள்கின்றார், தம்முடைய விலையேறப் பெற்ற, மாறாத அன்பினால் நம்மைத் தாங்குகின்றார்.

முழுமையாக வெளிப்படுத்தல்
“மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற அமெரிக்க நடிகையான எமிலி பிளன்ட்டினுடைய அழகிய குரலை திரைப் பட ரசிகர்கள் கேட்டிருப்பர். இவளுடைய திருமண வாழ்வின் நான்காவது ஆண்டில், வியத்தகு வகையில் அவளுடைய கணவன் அவளின் குரல் வளத்தைக் கண்டுபிடித்தார். ஒரு நேர்முக பேட்டியின் போது, அவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான், அவன் முதன் முறையாக அவள் பாடுவதைக் கேட்ட போது, “இதனைக் குறித்து எப்பொழுது என்னிடம் சொல்லலாம் என்றிருந்தாய்?” என்று நினைத்ததாகக் கூறினான்.
நம்முடைய உறவுகளிலும், அநேக நேரங்களில் நம்மை வியக்கச் செய்யும், புதியதும், எதிர் பாராததுமான விளக்கங்களைக் கற்றுக் கொள்வோம். மாற்கு சுவிசேஷத்தில், ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சீஷர்கள் இயேசுவைக் குறித்து ஒரு தெளிவற்ற காட்சியையே கொண்டிருந்தனர், அவர் யார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கலிலேயா கடலில் இயேசுவைச் சந்தித்தபோது, அவர் தன்னை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார், இம்முறை இயற்கையின் சக்திகளுக்கு மேலாக அவருக்கிருந்த வல்லமையைக் காண்பித்தார்.
ஐயாயிரத்திற்கும் மேலான ஜனங்களைப் போஷித்த பின்பு, இயேசு தன் சீஷர்களை கலிலேயா கடலின் வழியாக அனுப்புகின்றார், அங்கு அவர்கள் வலிமையான புயலில் சிக்கிக் கொள்கின்றனர். விடிவதற்கு சற்று முன்பு, தண்ணீரின் மேல் ஒருவர் நடந்து வருவதை சீஷர்கள் கண்டு பயந்தனர். அவர்களுக்குப் பழக்கமான குரலில், கிறிஸ்துவின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக் கேட்டனர், “திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” (மாற்.6:50) என்ற வார்த்தைகளைக் கேட்டனர். பின்பு அவர் சீற்றத்தோடிருந்த கடலை அமர்த்தினார். இந்த வல்லமையைக் கண்ட சீஷர்கள் “மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்” (6:51), ஆயினும் கிறிஸ்துவின் வல்லமையை முழுமையாக கிரகித்துக் கொள்ள போராடினர்.
நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்திலும், இயேசுவின் வல்லமையை நாம் அநுபவிக்கும் போது தான் அவர் யார் என்பதைப் பற்றிய முழு காட்சியை பெற்றுக் கொள்கின்றோம், அது நம்மை வியக்கச் செய்கின்றது.

உபத்திரவத்தில் பெலன்
1948 ஆம் ஆண்டு, ரஷ்யாவிலுள்ள ஓர் இரகசிய ஆலயத்தின் போதகராக இருந்த, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கார்லன் பாப்பவ் என்பவரை “விசாரணைக்காக,” அவருடைய வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். இரண்டு வாரங்கள் கழித்து, அவர் ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்யப் பட்டார், பத்து நாட்கள் அவருக்கு எந்த உணவும் வழங்கப் படவில்லை. ஒவ்வொரு முறையும், தான் ஒரு ஒற்றன் அல்ல என்பதையே தெரிவித்த போது அவரை அதிகமாக அடித்தனர், பாப்பவ் இந்த கடினமான நடத்துதலை தாங்கிக் கொண்டதோடு, தன்னோடுள்ள மற்ற கைதிகளையும் இயேசுவுக்குள் நடத்தினார். கடைசியாக பதினோரு ஆண்டுகள் கழித்து, அவர் விடுதலை பெற்றார். அவர் தொடர்ந்து தன்னுடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்தார். அவர் தொடர்ந்து போதனை செய்வதிலும், அடைபட்ட நாடுகளுக்கு வேதாகமத்தைக் கொடுப்பதற்காக பணம் திரட்டுவதிலும் தன் நாட்களைச் செலவிட்டு வருகின்றார்.
கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட அநேக இயேசுவின் விசுவாசிகளைப் போன்று, பாப்பவும் அவருடைய விசுவாசத்தின் நிமித்தம் உபத்திரவப்பட்டார். சிறையிலிரு ந்து விடுவிக்கப்பட்ட அவர் தன்னுடைய தேசத்திற்கு அனுப்பபட்டார், ஒரு மாதம் கழித்து அவர் மரித்துப் போனார். கிறிஸ்து பாடு பட்டு, மரணம் அடைந்த பின், அதனைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றிய அநேகர் கொலைசெய்யப் பட்டனர். இவை நடைபெறுவதற்கு, அநேக நாட்களுக்கு முன்பே, “நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” (மத்.5:10) என்று இயேசு கூறினார். இன்னும், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” (வ.11) என்றும் கூறினார்.
“பாக்கியவான்கள்” என்பதன் மூலம் இயேசு கருதியதென்ன? அவரோடு நாம் கொண்டுள்ள உறவின் முழுமையையும், மகிழ்ச்சியையும், ஆறுதலையும் குறிப்பிடுகின்றார் (வ.4, 8-10). துயரத்தின் மத்தியிலும் தேவனுடைய பிரசன்னம் அவரோடிருந்து அவரை பெலப் படுத்தியதால், பாப்பவ் உறுதியாயிருக்க முடிந்தது. நாம் எத்தகைய சூழலில் இருந்தாலும், நாம் தேவனோடு நடக்கும் போது அவருடைய சமாதானத்தை அநுபவிக்க முடியும். அவர் நம்மோடிருக்கின்றார்.
