கண்களைப் பாதுகாக்கும் உபகரணத்தோடும், வீட்டில் செய்த சில தின்பண்டங்களோடும் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடிய இடத்திற்குச் சென்றேன். பல மில்லியன் மக்களோடு நானும் என்னுடைய குடும்பத்தினரும் மிக அரிதாக நடைபெறக் கூடிய முழு சூரிய கிரகணத்தைப் பார்த்தோம், சூரியனின் முழுபகுதியையும் நிலவு மறைத்தது.

கோடை காலத்தின், ஒரு பிரகாசமான மதிய வேளையில், இந்த கிரகணத்தின் காரணமாக இருள் சூழ்ந்தது. நமக்கு இந்த கிரகணம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவும் படைப்புகளின் மீது தேவன் கொண்டுள்ள வல்லமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது (சங். 135:6-7). ஆனால் சரித்திரம் முழுமையையும் பார்ப்போமாகில், பகல் வேளையில் இருள் சூழ்வதை பயத்தோடு, ஒரு விசித்திரமான நிகழ்வாகக் கருதுகின்றனர் (யாத். 10:21; மத். 27:45), இதனை, கெட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு ஓர் அடையாளமாகக் கருதுகின்றனர்.

இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்த போது, ஆமோஸ் தீர்க்கதரிசியும் இருளை குறித்து இவ்வாறு தான் எண்ணியிருப்பார். தேவனை அவர்கள் மறந்தால் அழிவு அவர்கள் மேல் வரும் என வடதேசத்தைக் குறித்து ஆமோஸ் தீர்க்கதரிசி எச்சரித்தார், தேவன் இதற்கு அடையாளமாக, “அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப் பகலிலே தேசத்தை அந்தகாரப் படுத்துவேன்” (ஆமோ. 8:9) என்றார்.

ஆனால் தேவனுடைய மேலான நோக்கமும், விருப்பமும் என்னவெனில், எல்லாவற்றையும் சரிப்படுத்துவதே, ஜனங்கள் அடிமைகளாக இரு ந்தாலும், ஒரு நாள், தேவன் அவர்களை மீட்டு, எருசலேமுக்குக் கொண்டு வருவார், “ அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்படுத்துவேன்” (9:12) என்கின்றார்.

இஸ்ரவேலரைப் போன்று, நம்முடைய வாழ்வு, மிகஇருண்ட வேளையில் இருந்தாலும், எல்லா ஜனத்திற்கும் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் படி தேவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு ஆறுதளிப்பதாக உள்ளது (அப். 15:14-18).