என்னுடைய மனைவி சமையல் அறைக்குள் நுழைந்தவுடன், “ஓ, இல்லை!” என சத்தமிட்டாள், அதே நேரத்தில், 90 பவுண்டு எடை கொண்ட “மேக்ஸ்” என்று நாங்கள் அழைக்கும் லேப்ரடார் வகை நாய் சமையல் அறையை விட்டு வெளியேறியது.

சமையல் அறை மேசையின் விழிம்பில் வைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகள் காணாமல் போய் விட்டன. மேக்ஸ் அதைச் சாப்பிட்டு விட்டது, வெறும் பாத்திரம் மட்டுமேயுள்ளது. மேக்ஸ் கட்டிலின் அடியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றது, ஆனால் அதனுடைய தலையும், தோள் பகுதிமட்டும் தான் மறைக்கப்பட்டுள்ளது, நான் அதனைத் தேடிச் சென்ற போது, அதனுடைய உடலும், வாலும் வெளியே தெரிந்து அதனைக் காட்டிக் கொடுத்து விட்டது.

“ஓ, மேக்ஸ், உன்னுடைய பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்றேன். இஸ்ரவேலரின் இரண்டு கோத்திரத்தாரை, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வாக்கிற்குச் செவிகொடுக்குமாறு எச்சரித்த போது, மோசே பயன்படுத்திய வார்த்தைகள் இவை. அவன், “நீங்கள் இப்படிச் செய்யாமல் போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23) என்றான்.

ஒரு கணத்திற்குப் பாவம் இனிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றது. மோசே இஸ்ரவேலரிடம் தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை என எச்சரிக்கின்றார். வேதாகம எழுத்தாளர் ஒருவர், “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” (எபி. 4:13) என்கின்றார்.

எல்லாவற்றையும் காண்கின்ற பரிசுத்த தேவன், நாம் பாவங்களை அறிக்கை செய்யும்படி அன்போடு நம்மை அழைக்கின்றார், பாவத்திற்காக மனம் வருந்தி, அதை விட்டுவிடு, தேவனோடு கூட நட ( 1 யோவா.1:9). இந்நாளிலிருந்து அன்போடு நாம் அவரைப் பின்பற்றுவோம்.