
நாம் இணைந்து வெற்றிபெறுவோம்
நடு இரவில், போதகர் சாமுவேல் என்பவருக்கு, அவருடைய சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர் அங்குச் சென்ற போது அவருடைய வீடு முழுவதும் பற்றி எரிவதைக் கண்டார். அந்த தந்தையின் மீது நெருப்பு பற்றிக் கொண்டபோதிலும், அதோடு தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றும்படி உள்ளே சென்று, மயங்கிய நிலையில் இருந்த தன் மகளை வெளியே கொண்டு வந்தார். அந்த கிராமப் பகுதியில், 10 கிலோமீட்டருக்கு அப்பால் தான் மருத்துவமனை இருந்தது. அவர்களுக்கு எந்த வாகன வசதியும் இல்லாதபடியால், அந்த போதகரும், தந்தையும் அக்குழந்தையோடு ஓடத்துவங்கினர், ஒருவர் அக்குழந்தையைச் சுமந்து களைத்துப் போனால், மற்றவர் அவளை சுமந்து கொண்டு ஓடுவார். இருவரும் சேர்ந்து அந்த பயணத்தைச் செய்தனர். தந்தையும் மகளும் சிகிச்சை பெற்று முழுவதும் குணமாயினர்.
யாத்திராகமம் 17:8-13ல், தேவன் யோசுவாவின் முயற்சியோடு, ஒரு திட்டமிட்ட வெற்றியை தருகின்றார். இங்கு யோசுவா யுத்தம் செய்யும் மனிதர்களை போர்களத்தில் வழி நடத்துகின்றான். மோசே தேவனுடைய கோலை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய கரங்கள் தளர்ந்த போது, ஆரோனும், ஊரும் அவனுடைய கரங்களை, சூரியன் மறையும் வரையும் தாங்கிப் பிடிக்கின்றனர், எதிரிகளைத் தோற்கடிக்கின்றனர்.
ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதின் மதிப்பை நாம் குறைவாக நினைக்கக் கூடாது. இரக்கமுள்ள தேவன், ஒருவருக்கொருவர் நன்மை செய்யும்படி, அவருடைய ஜனங்களைத் தன் சார்பாகத் தந்துள்ளார். நமக்கு செவிகொடுக்கும் காதுகளையும், உதவிசெய்யும் கரங்களையும், ஞானம், ஆறுதல் மற்றும் திருத்தும் வார்த்தைகளைத் தரக்கூடிய நபர்களை நம்மிடம் வரவும் நம்மூலமாக பிறருக்குக் கிடைக்கவும் செய்கின்றார். நாம் இணைந்து ஜெயிப்போம், தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.

பரத்திலிருந்து கொடுக்கப்படும் ஞானமுள்ள பார்வை
1970 ஆம் ஆண்டு, பீட்டர் வெல்ச் என்பவர் இளைஞனாக இருந்த போது, உலோகத்தைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை பொழுது போக்காக பயன் படுத்தினார். 1990 ஆம் ஆண்டு முதல், உலோகங்களைக் கண்டிபிடிக்கும் நோக்கோடு, உலகெங்கிலும் இருந்து வரும் மக்களை அழைத்துச் செல்வார். அவர்கள்- வாள்கள், பழங்கால ஆபரணங்கள், நாணயங்கள் என ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர். “கூக்குள் எயர்த்” என்ற கணினி முறையின் மூலம் துணைக் கோள் படங்களை பயன் படுத்தி, ஐக்கிய அரசாட்சியில் இருந்த நிலப்பரப்பின் பண்ணை நிலங்களின் வரைபடங்களை கண்டிபிடித்தனர். அதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த சாலைகள், கட்டடங்கள், பிற கட்டுமானங்களை கண்டறிந்தனர். “பரத்திலிருந்து தேவன், நம் கண்களைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகையும் திறந்து காண்பிக்கின்றார்” என்கின்றார் பேதுரு.
ஏசாயா காலத்தில் இருந்த ஜனங்களுக்கும் “பரத்திலிருந்து பார்க்கக் கூடிய ஒரு கண்ணோட்டம்” தேவை. அவர்கள் தேவனுடைய ஜனங்கள் என்பதால், அவர்கள் தங்களைக் குறித்த பெருமையைக் கொண்டிருந்தனர், ஆனாலும் கீழ்ப்படியாதவர்களாய், தங்களின் விக்கிரங்களைத் தங்களை விட்டு அகற்றவில்லை. தேவன் வேறொரு கண்ணோட்டத்துடன் அவர்களைப் பார்த்தார், அவர்கள் தனக்கு எதிராகச் செயல்பட்டாலும், தேவன் அவர்களை பாபிலோனியரின் சிறையிருப்பிலிருந்து மீட்டார். ஏன்? “என்னிமித்தம், என்னிமித்தமே……………….என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடேன்” ஏசா.48:11) என்கின்றார். தேவன் நம்மைப் பார்க்கும் கண்ணோட்டம் என்னவெனின், நம்முடைய வாழ்வின் நோக்கம் நம்முடையதல்ல, நம்முடைய வாழ்வு அவருடைய மகிமைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கவனம் அவரையும், அவருடைய திட்டத்தையும் நோக்கி இருக்க வேண்டும், நம்முடைய வாழ்வு பிறரை தேவனைத் துதிக்கும் படித் திருப்ப வேண்டும்.
தேவனை மகிமைப் படுத்துவதே நம் வாழ்வின் முக்கிய கண்ணோட்டமாக இருப்பின், அது ஒரு புதிய உலகை நமக்குத் திறக்கின்றது, அவரைப் பற்றி நாம் கண்டுபிடிப்பதையும், அவர் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தையும் அவர் ஒருவரே அறிவார், நமக்கு எது நல்லது என்பதை அவர் கற்றுத் தருவார், நாம் போகவேண்டிய பாதையில் அவர் நம்மை நடத்துவார் (வ.17).

நல்ல செய்தி
மைக் என்பவரோடு பணிபுரியும் அநேகர், கிறிஸ்தவத்தைப் பற்றி சிறிதே அறிந்திருந்தனர், அவர்கள் அதற்காக வருத்தப்படவும் இல்லை. ஆனால், மைக் தேவனை அறிவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை நெருங்கி வந்த போது ஒரு நாள் ஒருவர், உயிர்த்தெழுதலுக்கும் பஸ்காவிற்கும் ஒரு தொடர்பு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் அது என்ன என்பதை அறியேன், “ஹே, மைக்! இந்த நல்ல காரியத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா? பஸ்கா என்பது என்ன?” என்று கேட்டார்.
எனவே, மைக் விளக்கினார். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார் என்பதையும், 10 வாதைகளைப் பற்றியும், ஒவ்வொரு வீட்டிலும் நடைபெற்ற தலைப் பிள்ளைச் சங்காரத்தைப் பற்றியும் விளக்கினார். ஒவ்வொரு வீட்டின் நிலைக்கால்களிலும் பலிசெலுத்தப்பட்ட ஆட்டின் இரத்தம் பூசப்பட்டிருந்தால், சங்கார தூதன் அவற்றைக் கடந்து சென்று விடுவான் என்பதையும் விளக்கினார். பின்னர், அதே பஸ்கா நாட்களில், இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் பலியாக்கப் பட்ட ஆட்டுக் குட்டியானார் என்றும் விளக்கினார், திடீரென மைக், ஹே, நான் சாட்சியாக இருக்கின்றேன்! என்று உணர்ந்தார்.
அப்போஸ்தலனாகிய பேதுரு, தேவனைப் பற்றி அறியாத ஒரு சபைக்கு ஆலோசனை கொடுக்கும் போது, “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1 பேதுரு 3:15) என்கின்றார்.
மைக் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து தெளிவாக இருந்தபடியால், அவன் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து இயல்பாக “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” (வ.15) கூற முடிந்தது.
நாமும், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எளிய முறையில் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான முக்கியமான செய்தியான, தேவனைக் குறித்த நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம்
புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததும், பதினான்கு வயது நிரம்பிய சந்தீப், ஒவ்வொரு மாலையும் பஸ்ஸிலிருந்து குதித்து, தன்னுடைய வீட்டினை அடையும் வரை நடனமாடிக் கொண்டேச் செல்வான். அவனுடைய தாயார் அதனை பதிவு செய்து, அதனை, பள்ளிக்கு பின் நடன நேரம், என்று நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார். அவன் நடனமாடுகின்றான் ஏனெனில், அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றான், தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் “மற்றவர்களையும் மகிழ்ச்சியாக்குகின்றான்”. ஒரு நாள், குப்பை சேகரிக்கும் பணியிலிருந்த இரண்டு பேர், தங்களுடைய பரபரப்பான வேலையின் மத்தியிலும், இந்த இளைஞனோடு சுழன்று, அசைந்து, நடனமாடி மற்றவர்களையும் நடனமாட அழைத்தனர். இம்மூவரும் சேர்ந்து, ஒருவரையொருவர் தொற்றிக் கொள்ளும் உண்மையான மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.
நிலைத்திருக்கும், முழுமையான மகிழ்ச்சியைத் தரக்கூடியவர் தேவன் ஒருவரே என்பதை சங்கீதம் 149 விளக்குகின்றது. தேவனுடைய பிள்ளைகள் இணைந்து “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்” (வ.1) என்று சங்கீதக்காரன் உற்சாகப் படுத்துகின்றார்.
அவர் இஸ்ரவேல் ஜனங்களை “தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்”, “தங்கள் ராஜாவில் களிகூரவும் கடவர்கள்” (வ.2) என்று அழைக்கின்றார். அவர் நம்மை நடனத்தோடும், இசையோடும் தேவனை ஆராதிக்கும்படி அழைக்கின்றார் (வ.1-3). ஏனெனில், “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (வ.4).
நாம் ஆராதிக்கும் நம்முடைய தந்தை, நம்மைப் படைத்தார், அவரே இந்த உலகத்தையும் காத்து வருபவர். அவர் நம்மில் மகிழ்ச்சியடைகின்றார், ஏனெனில் நாம் அவருடைய நேசப் பிள்ளைகள். அவரே நம்மை வடிவமைத்தவர், நம்மை அறிந்திருக்கின்றார், அவரோடு உறவாடும்படி நம்மை அழைக்கின்றார். இது எத்தனை பெரிய கனம்! என்றும் உயிரோடிருக்கின்ற, நமது அன்பின் தேவனே நம்முடைய மாறாத மகிழ்ச்சிக்குக் காரணர். நம்மைப் படைத்தவர், ஒவ்வொரு நாளையும் நமக்கு ஈவாகத் தந்து, நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றதற்காக நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
