ஜெபத்தின் சலுகை
நாட்டுப்புற பாடலாசிரியர் கிறிஸ் ஸ்டேபிள்டன் அவர்களால் எழுதப்பட்ட “டேடி டஸன்ட் ப்ரே எனிமோர்” என்ற பாடல் தன்னுடைய தகப்பனார் தனக்காக ஏறெடுக்கும் ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதியது. அதன் கடுமையான வாரிகள், தன் தகப்பனாரின் ஜெபம் ஏமாற்றத்தாலோ, சோர்வினாலோ முடிவடைந்ததினால் அல்ல, ஆனால் அவருடைய மரணத்தில் முடிவடைந்ததை வெளிப்படுத்துகிறது. தன் தகப்பன் ஜெபத்தில் இயேசுவோடு பேசுவதற்கு மாறாக இயேசுவுடன் நடந்துக்கொண்டு முகமுகமாய் அவருடன் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்கிறார்.
தன் தகப்பன் தனக்காக செய்யும் ஜெபத்தினை நினைக்கும்போது, வேதத்தில் ஒரு தகப்பன் தன் மகனுக்காக ஜெபிப்பதை நினைவுபடுத்துகிறது. தாவீது ராஜா தன் கடைசி நாட்களிலே தன் மகன் சாலொமோன் இஸ்ரவேலின் அடுத்த புதிய ராஜாவாக பதவியேற்க ஆயத்தம் பண்ணினார். சாலொமோனை அபிஷேகம் பண்ண தேசத்தை ஒன்று கூட்டின தாவீது ராஜா எப்போதும் போலவே ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். இஸ்ரவேலின் மேல் தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்த ராஜா, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு எப்போதும் விசுவாசமாயிருக்க ஜெபித்தார். பிறகு, ராஜா தேவனிடம் தன் மகனுக்காக ஒரு தனிப்பட்ட வேண்டுதலாக 'என் குமாரனாகிய சாலொமோன், உம்முடைய கற்பனைகளையும், உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கு அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும்" (1 நாளாகமம் 29:19) என்று ஜெபித்தார்.
தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மக்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிப்பதற்காக குறிப்பிட்ட உரிமையை தந்திருக்கிறார். நம்முடைய விசுவாசத்தின் மாதிரி ஜீவியம் நாம் மரித்த பின்பும் அழியாத தாக்கத்கை ஏற்படுத்தும். சாலொமோனுக்காகவும், இஸ்ரவேலுக்காகவும் தாவீதின் வேண்டுதலை, தாவீது மரித்த பின்பும், தேவன் பதிலளித்தது போல நம்முடைய ஜெபத்தின் தாக்கமும் நம் காலம் கடந்து வாழ்ந்திருக்கும்.

கிறிஸ்மஸ் பிரசன்னம்
‘’அவருடைய வருகையை எந்தக் காதும் கேட்காது, ஆனால் இந்த பாவ உலகத்தில், சாந்தகுணமுள்ள ஆத்துமாக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் அன்பான இயேசு பிறக்கிறார்." எல்லோராலும் நேசிக்கப்பட்ட “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லெஹேம்" என்ற பாடலின் வரிகள் கிறிஸ்மஸ்ஸின் மைய கருத்தை சுட்டிக்காட்டுகிறது. நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவனோடு ஒரு புதிய மற்றும் முக்கியமான உறவை ஏற்படுத்தவும் இயேசு கிறிஸ்து, உடைந்துபோன இந்த உலகத்திற்கு வந்தார்.
இந்தப் பாடல் எழுதிய பல வருடங்களுக்குப்பின், இந்த பாடலாசிரியர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்த இந்த உறவைப் பற்றி 'இது எனக்கு எவ்வளவு தனிப்பட்டதாக வளர்கிறது என்று கூற முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார், நானும் அவரை அறிந்திருக்கிறேன். இது வெறும் வார்த்தை அல்ல. உலகத்தில் இது மிக உண்மையானது, மற்றும் ஒவ்வொரு நாளும் இதை அதிக உண்மையாக்கி கொண்டே இருக்கிறது. வருடங்கள் செல்லும்போது இது எப்படி வளரும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது" என்று விவரிக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தை உறுதியாய் கூறுவது, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட பெயர்களில் ஒன்றான 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்" (ஏசாயா 7:14) என்பதை பிரதிபலிக்கிறது. மத்தேயு எழுதின சுவிஷேத்தில் எபிரேய மொழியில் இம்மானுவேல் என்பதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது (12:23)
தேவன், நாம் எப்போதும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ள, இயேசுவின் மூலமாக நம்மிடம் வந்தார். அவர் நம்முடன் இருப்பதே நம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

கூட இருப்பது
கேளிக்கை பூங்காவில் வேலை செய்யும் ஜென், ரோஹித் கண்ணீரோடு தரையிலே சரிந்ததைக் கண்டதும், உடனே அவனுக்கு உதவி செய்ய விரைந்தாள். ரோஹித், மனஇருக்கத்தால் பாதிக்கப்ட்ட ஒரு இளைஞன். நாள் முழுதும் தான் மகிழ்ச்சியாக அனுபவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த சவாரி செய்யும் இயந்திரம் பழுதடைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டு அழுதுக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை எழுந்து நிற்கவைக்கவோ அல்லது சமாதானப்படுத்தவோ முயற்சிப்பதற்கு பதிலாக, ஜென், தரையிலே ரோஹித்துடன் உட்கார்ந்து, அவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அவனை அழ அனுமதித்தாள்.
ஜென்னின் இந்தச் செயல், துன்பத்தோடும் அல்லது துக்கத்தோடும் இருப்பவர்களோடு எவ்வாறு நாமும் துணை நிற்பது என்பதற்க்கு ஒரு அழகிய உதாரணமாய் இருக்கிறது. தன்னுடைய வீடு, தன் மிருகஜீவன்கள் (வருமானம்), தன் ஆரோக்கியத்தின் இழப்பு மற்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட தன் பத்து பிள்ளைகளின் இறப்பினால் முடங்கிப்போன யோபுவின் துன்பத்தைப்பற்றி வேதாகமம் கூறுகிறது. யோபின் துக்கத்தை அறிந்த அவருடைய நண்பர்கள் யோபுவுக்கு ஆறுதல் சொல்லவும் - அவரவர் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள் (யோபு 2:11). யோபு துக்கத்தோடே தரையிலே உட்கார்ந்திருந்தார்.
அவருடைய நண்பர்கள் வந்தபோது, அவர்களும் யோபுடன் உட்கார்ந்து - ஏழு நாட்கள் - அவருடைய துக்கம் கொடிதாயிருந்ததினால் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.
பிறகு, தங்களுடைய மனிதத்தன்மையின் அடிப்படையில் யோபுவின் நண்பர்கள் அவருக்கு உணர்வற்ற ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் முதல் ஏழு நாட்கள், வார்த்தைகளற்ற மென்மையான பரிசாகிய அவர்களுடைய பிரசன்னத்தை மட்டும் கொடுத்தார்கள்.
மற்றவர்களுடைய துக்கத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால், வெறுமனே அவர்களோடு கூட இருப்பதன் மூலம் அவர்களிடத்தில் அன்பு செலுத்த இந்த புரிந்துக்கொள்ளுதல் தேவையற்றது.

நீதியான காணிக்கை
வீடற்றவர்களுக்கு உறைவிடம் தந்த ஒரு இல்லத்திற்கு உதவும்படி எங்கள் வாலிப குழுவை ஒரு நாள் அழைத்திருந்தார்கள். அங்கே உள்ளே நுழையும் போது அங்கு குவிக்கப்பட்ட அநேக காலணிகளை கண்டோம். அவை அனைத்தும் நன்கொடையாக வழங்கப்பட்டவைகள். அந்த காலை முழுவதும் எல்லா காலணிகளையும் அதனுடைய மற்றொரு காலனியுடன் சேர்க்கும்படி எங்கள் நேரத்தை செலவழித்தோம். அவையனைத்தையும் கண்டுபிடித்து அதை தரையிலே வரிசைப்படுத்தினோம். இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட காலணிகளை நிராகரித்தோம். ஏனென்றால் அவைகள் மிகவும் பழையதாகவும், சேதமடைந்தும், உபயோகிக்க முடியாததாய் இருந்தது. அநேக நேரம் இதை போல் உபயோகிக்க முடியாத பொருட்களை நன்கொடையாக பலர் கொடுப்பார்கள். ஆனால் அவைகளை யாருக்கும் அந்த காப்பகம் விநியோகம் செய்வதில்லை .
இஸ்ரவேலரும் இதைபோல் சேதமான மிருங்கங்களை தேவனுக்கு பலியாக செலுத்தினார்கள். அவர்களிடம் பலமுள்ள நல்ல மிருகங்கள் இருந்தும், குருடும், சப்பாணியும், பாதிக்கப்பட்ட மிருகங்களை பலியாக செலுத்தினார்கள். அதினால் தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர்களோடு பேசினார். அவர்களின் கனவீனத்தின் காரணமாக அவருடைய அதிருப்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தினார் (வச. 10). சிறந்தவைகளை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு தேவனுக்கு பாதிக்கப்பட்டதை பலியாக கொடுத்ததினால் அவர்களை கண்டித்தார் (வ. 14). அதே சமயம் தேவன் அவர்களுக்கென்று வரப்போகும் மேசியாவை குறித்தும் அறிவித்தார். மேசியாவின் அன்பும் இரக்கமும் அவர்கள் இருதயத்தை மாற்றி நீதியான காணிக்கைகளை கொடுக்கும்படி செய்யும் என்று வாக்குத்தத்தம் உரைத்தார்.
சில வேளைகளில் தேவனுக்கு மீதம் இருப்பதை நாம் காணிக்கையாக கொடுக்கும்படி தூண்டப்படுகிறோம். ஆனால் அவரிடமிருந்து அநேகம் எதிர்பார்த்து அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் அவருக்கு ஒதுக்கப்பட்டவைகளை கொடுக்கிறோம். தேவன் நமக்கு அருளியதை நினைத்து, அவருக்கு நன்றி சொல்லி, அவரை கனப்படுத்தி, நம்மால் முடிந்த மட்டும் சிறந்ததை அவருக்கு கொடுப்போம்.

திரும்பும் இனிமை
ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் - நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து "கசப்பு!! கசப்பு !!" என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.
ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ "இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்" என்று களிகூறுவார்கள் (வச. 9).
ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.