என்னுடைய நேர்காணல் விருந்தினர் எனது கேள்விகளுக்கு பணிவுடன் பதிலளித்தார். சம்பாஷணைக்குள் அடியில் ஏதோ பதுங்கியிருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. தற்செயலாக சொல்லப்பட்ட கருத்து அதை வெளியே கொண்டு வந்தது.

‘நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்” என்றேன். “ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. கோடிக்கணக்கானவர்கள்” என்று அவர் முணுமுணுத்தார்.

எனது அறியாமையைப் பரிதாபப்படுத்துவதுப் போல எனது விருந்தினர் அவருடைய நற்சான்றிதழ்களை நினைவூட்டினார் – அவர் வகித்திருந்த பதவிகள், அவர் சாதித்த விஷயங்கள், அவர் அருளிய பத்திரிக்கை. அது ஒரு தடுமாற்றமான தருணம்.

அந்த அனுபவத்திலிருந்து, தேவன் சீனாய் மலையில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன் (யாத். 34:5-7). இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர், மனுகுலத்தின் நியாயாதிபதி இங்கே தன்னுடைய பதவிகளை பயன்படுத்தவில்லை. 100 கோடி விண்மீன் திரள்களை உருவாக்கியவர் அவர், ஆனால் அந்த சாதனைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தேவன் தன்னை இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ளவர் (வச. 6) என அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்பதை அவர் வெளிப்படுத்தும்போது, அவருடைய பட்டங்களையோ அல்லது சாததைனகளையோ அல்ல, மாறாக தன்னுடைய குணத்தை பட்டியலிடுகிறார்.

தேவனுடைய சாயலாய் படைக்கப்பட்ட மக்களாகவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்பட்ட நமக்கு இது ஆழமான ஒன்று (ஆதி. 1:27, எபே. 5:1-2). சாதனைகள் நல்லது தான், பட்டங்களுக்கு அவைகளுக்குள்ள இடம் உண்டு, ஆனால் நாம் எவ்வளவு இரக்கம், கிருபை, அன்புள்ளவர் களாயிருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த நேர்காணல் விருந்தினரைப் போல, நாமும் நம்முடைய சாதனைகளை அடிப்படையாக முக்கியப்படுத்தலாம், ஆனால் உண்மையான வெற்றி எது என்பதற்கு தேவன் முன்மாதிரியானவர் – நம்முடைய தொழில் அட்டைகளில் அல்லது நம்முடைய தற்குறிப்பில் எழுதப்பட்டவைகள் அல்ல மாறாக நாம் அவரைப்போல எப்படி மாறுகிறோம் என்பதே.