சமாதானமான வாழ்க்கை
ஆஸ்திரேலியாவின் பெர்த் என்ற இடத்தில் “சமாதான இல்லம்” என்று ஒரு இடமுண்டு. போதை பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கான இடம் அது. இந்த சமாதான இல்லத்தில் தேவனுடைய சமாதானத்தை அறிவிக்கும் அன்புள்ள பணியாளர்களை அவர்கள் சந்திக்க நேரிடும். போதை, மதுபானம், சூதாட்டம் மற்றும் பல கெட்ட பழக்கங்களினால் சிதைந்துபோன வாழ்க்கை அங்கே தேவனுடைய அன்பினால் சீரமைக்கப்படுகிறது.
இங்கு நடைபெறும் மனமாற்றத்திற்கு பெரிய காரணம், சிலுவையின் செய்தியே. சமாதான இல்லத்தை நாடும் உடைக்கப்பட்ட மக்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதால், தங்களுடைய ஜீவியத்திலும் உயிர்தெழும் அனுபவத்தை பெறுகிறார்கள். நாமும் கிறிஸ்துவில் சமாதானத்தையும் சுகத்தையும் அடைகிறோம்.
சமாதானம் என்பது பிரச்சனையே இல்லாத வாழ்க்கையல்ல மாறாக, பிரச்சனைகளின் மத்தியில் தேவனுடைய நிறைவை அனுபவிப்பது. நம் எல்லோருக்கும் இந்த சமாதானம் தேவை. அது கிறிஸ்துவினாலும் அவருடைய ஆவியானவராலும் மட்டுமே சாத்தியம். ஆகையினால்தான் பவுல் கலாத்திய சபையை ஆவியின் மறுரூபத்திற்கு நேராய் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவி நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்யும்போது, அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை போன்ற ஆவியின் கனிகள் நம்மில் உருவாகத் துவங்கும் (கலாத்தியர் 5:22-23). அவராலேயே நிலையான சமாதானத்தை நமக்குத் தரமுடியும்.
ஆவியானவர் நமக்கு தேவ சமாதானத்தை கொடுக்கும்போது, நம்முடைய எல்லா தேவைகளுக்காகவும் நாம் பரமபிதாவை நாடுவதற்கு பழகுகிறோம். அப்பொழுது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்,” “(நம்முடைய) இருதயங்களையும் (நம்முடைய) சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).
கிறிஸ்துவின் ஆவியில் நம்முடைய உள்ளம் மெய்சமாதானத்தை அனுபவிக்கிறது.

விசுவாசப் பாதை
உலகக்கோப்பை கால்பந்தின் 2017ஆம் ஆண்டின் தகுதிச் சுற்றில், அமெரிக்காவுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோ மோதியது. பெயர் அறியப்படாத இந்த சிறிய தீவு நாடுகள், அமெரிக்காவை அபாரமாக வீழ்த்தி, உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது. தகுதி வரிசை பட்டியலில் 56 தேசங்களைக் கடந்து முன்னிலைப் பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2018ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் இடம்பெற முடியாத அளவிற்கு அதை பின்னுக்குத் தள்ளியது.
டிரினிடாட் மற்றும் டொபாகோவின் இந்த வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவோடு ஒப்பிடும்போது, இந்த சிறிய கரீபியன் தீவு நாடுகள் ஒன்றுமில்லை. ஆனால் எவ்வளவு பெரிய தேசமானாலும் வாஞ்சையோடு விளையாடும் குழுவை தோற்கடிப்பது சாத்தியமில்லை.
மீதியானுக்கு விரோதமாக கிதியோனின் யுத்தமும் இதைப்போன்றதே. ஒரு பெரிய இராணுவத்திடம் ஒரு சிறு கூட்டம் மோதியது. இஸ்ரவேலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கையை வைத்தோ, பொருளாதாரத்தை வைத்தோ, அல்லது திறமையான தலைவர்களை வைத்தோ யுத்தத்தில் வெற்றியடைந்தால் மகிமை தேவனுக்கு போகாது என்பதினால், அவர்களின் இராணுவத்தை முந்நூறாகக் குறைக்கிறார் (நியாய. 7:1-8).
நம்மால் பார்க்க, அளவிட முடிந்த காரியங்களில் மட்டுமே நம்பிக்கை வைக்க தூண்டப்படுகிறோம். ஆனால் அது விசுவாச பாதையல்ல. கடினமான சூழ்நிலை நமக்கு அனுமதிக்கப்பட்டாலும் தேவனைச் சார்ந்து “கர்த்தரிலும் அவரின் சத்துவத்தின் வல்லமையிலும்” பலப்படும்போது (எபேசியர் 6:10), நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளையும் நாம் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் மேற்கொள்ளமுடியும். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் நமக்குள் பெரிய காரியங்களைச் செய்யும்.

இயேசுவின் நாற்காலி
என்னுடைய சிநேகிதி மார்கே, வேதபாட வகுப்பில் டமியை சந்தித்தபோது, அவர்களுக்குள் சிலகாரியங்களில் ஒத்துப்போனதை அறிந்தாள். இருவரும் நண்பர்களாயினர். மார்கே தன் புது சிநேகிதியிடமிருந்து விலை மதிப்புள்ள ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டாள்.
டமி, இதற்கு முன்பாக வேதபாட வகுப்பிற்கு சென்றதில்லை. தேவன் பேசியதைக் கேட்ட அனுபவம் இல்லாததால், வேதபாட வகுப்பிலிருந்த ஒரு பெண், தேவன் தன்னோடு பேசினார் என்று சொன்னதைப் புரிந்துகொள்ள முடியாமல் திகைத்தாள்.
தேவன் பேசுவதைக் கேட்பதற்கு தீர்மானித்து, டமி செயலில் இறங்கினாள். அவள் மார்கேயிடம், “நான் ஒவ்வொருமுறை வேதாகமத்தை வாசிக்கும்போதும், ஒரு பழைய நாற்காலியை எனக்கு முன்பாக வைத்து, இயேசுவை வந்து அதில் அமரும்படி கேட்பேன்” என்று சொன்னாள். மேலும் தன்னைத் தொட்ட வேத வசனத்தை சுண்ணாம்பு கட்டியைக்கொண்டு அந்த நாற்காலியில் எழுதுவேன் என்றும் கூறியிருக்கிறாள். அது அவளுடைய விசேஷமான “இயேசு நாற்காலி.” வேதத்திலிருந்து அவளோடு தேவன் பேசிய செய்திகளால் அது நிறைந்திருந்தது.
மார்கே, “(இயேசு நாற்காலி) (டமியின்) வாழ்க்கையை மாற்றியது . வேதம் அவளுக்கு சொந்தமாய் மாறியபோது அவள் ஆவிக்குரிய வாழ்க்கை வளர்ச்சியடைந்தது” என்று கூறினாள்.
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் (யோவ. 8:31-32). அவருடைய வார்த்தைகளை நாற்காலியில் எழுதுவதோ, மனப்பாடம் செய்வதோ, அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதோ, எப்படியாயினும் நாம் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க பிரயாசப்படுவோம். கிறிஸ்துவின் உபதேசத்திலிருக்கும் ஞானமும் சத்தியமும் அவரில் வளரச்செய்து நம்மை முற்றிலும் விடுதலையாக்கும்.

நமது அப்பாவின் அக்கறை
நான்! சத்தம் வந்த திசையில் திரும்பிப்பார்த்தேன். என் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஏதோ மோதி விழுந்த அழுக்குத்தடம் தெரிந்தது. வெளியே எட்டிப்பார்த்தேன். பறவையொன்று கீழேவிழுந்து துடித்துக்கொண்டிருந்தது. என் மனது வலித்தது. சிறகொடிந்த அந்த பறவைக்கு உதவிசெய்ய ஏங்கினேன்.
மத்தேயு 10இல், வரப்போகிற அழிவைக் குறித்து எச்சரிக்கப்பட்ட சீஷர்களை ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன் இயேசு, அடைக்கலான் குருவி மீதும் அக்கறைக்காட்டும் பிதாவைக் குறித்து தெரிவிக்கிறார். இயேசு, “தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 1). சீஷர்களுக்கு அருளப்பட்ட இந்த வல்லமை அதிகமாய் தெரிந்தாலும், அதினிமித்தம் அவர்கள் அதிகாரத்திலுள்ள பலரால் பகைக்கப்படுவார்கள், தன் சொந்த குடும்பத்தினரால் வெறுக்கப்படுவார்கள்; தீமையின் விளிம்பில் நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர் (வச. 16-28).
பின்பு 10:29-31இல் இயேசு, எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்களை பயப்படவேண்டாம் என்றும் அவர்கள் தேவனுடைய பாதுகாப்பிலிருந்து என்றுமே விலகவில்லை என்றும் அறிவுறுத்துகிறார். “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?” என்று கேட்கிறார். “ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது... ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷத்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று உறுதிகொடுக்கிறார்.
ஜன்னலுக்கு கீழே விழுந்த அந்த பறவையை அடிக்கடி கண்காணித்தேன். அது உயிரோடுதான் இருந்தது. ஆனால் கொஞ்சமும் அசையவில்லை. மாலையில் அது பறந்துபோய்விட்டது. அது உயிர்பிழைக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டேன். ஒரு பறவைக்காக நானே இந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வேன் என்றால், தேவன் இதைவிட அதிகமாய் அக்கறை செலுத்துவது அதிக நிச்சயம். அவர் நம்மீது எந்த அளவிற்கு அக்கறைக் காட்டுகிறார் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!

தேவனுடைய வல்லமை
ரெபேக்கா மற்றும் ரஸ்ஸல் தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதற்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்களுடைய மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் தேவனுடைய சித்தம் வேறு. பத்து ஆண்டுகள் கழித்து ரெபேக்கா கர்ப்பந்தரித்தாள். கர்ப்பகாலம் ஆரோக்கியமாகவே இருந்தது. பிரசவவலி துவங்கியதும் மருத்துமனைக்கு விரைந்தனர். பிரசவ வலி தீவிரமாய் அதிகரித்தது. ஆனால் குழந்தைபெற்றெடுக்கும் அளவிற்கு அவளுடைய சரீரம் இன்னும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில், அறுவைசிகிச்சை மூலமாய் குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். ரெபேக்கா தன் குழந்தையைக் குறித்தும் தன்னைக் குறித்தும் துக்கமடைந்திருந்தாள். அவளிடம் உறுதியளித்த மருத்துவர், “என்னால் இயன்றதைச் செய்கிறேன்; மற்றபடி, நாங்கள் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம், அவரால் இன்னும் அதிகமாய் செய்யமுடியும்” என்று கூறினார். மருத்துவர் ரெபேக்காவோடு சேர்ந்து ஜெபித்தார். பதினைந்தே நிமிடங்களில், ப்ரூஸ் என்னும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
அவள் தேவனையும் அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்பதை மருத்துவர் அறிந்திருந்தார். அறுவைசிகிச்சை செய்ய தேவையான அறிவும் திறமையும் மருத்துவரிடத்தில் இருந்தாலும், அவர் தேவ ஞானத்தையும், பெலத்தையும், தன் கைகளை இயக்கும் உதவியையும் தேவனிடத்தில் கேட்டார் (சங். 121:1-2).
மிகவும் திறமையான நபர்கள் தேவனுடைய உதவியை நாடுவதை கேள்விப்படும்போது நாம் உற்சாகமடைகிறோம். ஏனெனில், நமக்கும் அது நிச்சயமாய் தேவை. நாம் அல்ல, அவரே தேவன். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (எபேசியர் 3:20) நம்மில் கிரியை செய்ய அவரால் மட்டுமே முடியும். அவரிடத்தில் கற்றுக்கொள்ள நம்முடைய இருதயத்தை தாழ்த்தி, ஜெபத்தில் நம் விசுவாசத்தை பிரதிபலிப்போம். ஏனெனில் நாமெல்லோரைக் காட்டிலும் அவரால் அதிகம் செய்யமுடியும்.