சிங்கம், ஆடு, இரட்சகர்!
நியூயார்க் பொது நூலகத்தின் வாயிலை கவனிப்பதுபோன்று இரண்டு கல்லால் ஆன சிங்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மார்பிள் கற்களால் செதுக்கப்பட்ட அந்த சிங்கங்கள், 1911ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கிருக்கிறது. அந்த நூலகத்தின் ஸ்தாபகர்களை கனப்படுத்தும் விதத்தில், துவக்கத்தில் அந்த சிங்கங்களுக்கு லியோ லெனாக்ஸ் என்றும் லியோ அஸ்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் நியூயார்க்கின் கடினமான ஒரு காலகட்டத்தில், அதின் மேயர் ப்யோரெல்லா லகார்டியா, அந்த சிங்கங்களுக்கு வலிமை மற்றும் பொறுமை என்று பெயர் மாற்றினார். நியூயார்க் மக்களுக்கு அவை இரண்டு அந்த சவாலான தருணத்தில் அவசியம் என்று கருதினார். அந்த சிங்கங்கள் இன்னும் வலிமை மற்றும் பொறுமை என்றே அழைக்கப்படுகிறது.
வேதாகமம் ஜீவனுள்ள, வலிமையான, கடினமான தருணங்களில் உற்சாகத்தை கொடுக்கும் சிங்கத்தைப் பற்றி நமக்கு அறிவிக்கிறது. அந்த சிங்கம் பல நாமங்களால் அறியப்பட்டுள்ளது. தன்னுடைய பரலோக தரிசனத்தில் அப்போஸ்தலர் யோவான், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மீட்பையும் கொண்டுள்ள யாராலும் திறக்ககூடாத ஒரு முத்திரை புஸ்தகத்தைப் பார்க்கிறார். அப்போது, “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று யோவானுக்கு சொல்லுகிறார் (வெளி. 5:5).
அடுத்த வசனத்தில் யோவான் புதிதான ஒன்றை காண்கிறார்: “இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு... மத்தியிலே நிற்கக்கண்டேன்” (வச. 6). சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒரே நபர்: இயேசு. அவரே வெற்றிசிறக்கும் ராஜா. அவரே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). அவருடைய பெலத்தினாலும் சிலுவையினாலும் நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எனவே அவர் நித்தியமானவர் என்னும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நாம் வாழலாம்.
சிறந்த ஞானமும் ஆயிரம் கண்களும்
“ஆத்துமாவின் நிலையை அனைத்து கோணங்களிலும் அலசுவதற்கு, ஒரு மேய்ப்பனுக்கு தேவனுடைய ஞானமும் ஆயிரம் கண்களும் தேவை” என்று திருச்சபை தலைவரான ஜாண் கிறிஸாஸ்டம் எழுதுகிறார். ஆவிக்குரிய ரீதியில் மற்றவர்களை நன்கு பராமரித்தல் எப்படி என்பது குறித்த விவாதத்தில் கிறிஸாஸ்டம் இப்படியாக பேசுகிறார். ஒருவரைக் கட்டாயப்படுத்தி குணமாக்குவது என்பது சாத்தியமில்லை என்பதினால், அவர்களை கரிசணையோடும் இரக்கத்தோடும் அவர்களின் இருதயத்தை அணுகுவதை அவர் வலியுறுத்துகிறார்.
அதற்காக வலியே இல்லாமல் அதை மேற்கொள்ள முடியும் என்று அர்த்தமல்ல என்றும் கிறிஸாஸ்டம் எச்சரிக்கிறார். ஏனெனில் “ஆழ்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய ஒரு நபரிடம் நீங்கள் மென்மையாய் நடந்துகொண்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யத் தவறினால் அவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் விரக்தியிலிருக்கும் அவரது உடம்பில் நீங்கள் இரக்கமின்றி கீறல் ஏற்படுத்தி சிகிச்சை செய்தால்... அவர் எல்லாவற்றையும் மறந்து, உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பார்.”
கள்ள போதகர்களால் துன்மார்க்கத்திற்குள் தள்ளப்பட்டவர்களின் நடத்தையை விவரிக்கும் யூதாவும் அதே பிரச்சனையை சந்திக்கிறார் (1:12-13, 18-19). அந்த வகையான மரண அச்சுறுத்தல்களின்போதும், யூதா கோபப்படாமல் கையாளுவதற்கே அறிவுறுத்துகிறார்.
அதற்கு பதிலாக, விசுவாசிகள் அச்சுறுத்தல்களை சந்திக்க தேவனுடைய அன்பில் இன்னும் அதிகமாய் வேரூன்றவேண்டும் என்று போதிக்கிறார் (வச. 20-21). நாம் தேவனுடைய அன்பில் ஆழமாய் வேரூன்றும்போதே, சரியான நேரம், தாழ்மை மற்றும் இரக்கத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஞானத்தை தேவனிடத்திலிருந்து பெறக்கூடும் (வச. 22-23). இந்த பாதையே, மற்றவர்களுக்கு சுகத்தை அடையச்செய்து, தேவனுடைய அன்பின் மகத்துவத்தில் இளைப்பாறச் செய்கிறது.
நாம் தேவனை நம்புகிறோம்
வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8).
நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.


தேவனுடைய வலதுகரம்
நான் எனது முதிர்ந்த நாய் வில்சனை புல்வெளியில் நடக்க அழைத்துச்சென்றேன். அந்த வேளையில் என்னுடைய கோச் எனப்பட்ட என்னுடைய சிறிய நாயைப் பிடித்திருந்த கயிற்றை ஒருநிமிடம் தவறவிட்டேன். கீழே குனிந்து அதை எடுக்க முயற்சித்த இடைவெளியில், கோச் ஒரு முயலைப் பார்த்துவிட்டது. அதை விரட்டிக்கொண்ட வெறித்தனமாய் ஓட முயற்சித்தவேளையில், அதின் கயிறு என் மோதிரவிரலில் சிக்கி காயம் ஏற்படுத்தியது. நான் அந்த புல்தரையில் விழுந்து வலியில் கத்தினேன்.
முதலுதவியை பெற்று திரும்பும்போது, என் விரலில் அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று தெரியவந்தது. நான் தேவனிடத்தில் மன்றாடினேன். நான் ஒரு எழுத்தாளன், எப்படி டைப் செய்வது? என்னுடைய அன்றாட பணிகளை எப்படி செய்வது? தேவன் அன்றைய வேத தியானத்தில் என்னோடு பேசினார். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசாயா 41:13). தேவனுடைய உறவில் இருந்த யூதேயாவிலுள்ள தேவ ஜனத்திற்கே ஏசாயா இதை எழுதுகிறார் என்று அதன் பின்னணியத்தைக் கண்டுபிடித்தேன். தன்னுடைய வலது கரத்தை உருவகப்படுத்தி, அவர்களுக்கு தன்னுடைய பிரசன்னத்தையும், பெலத்தையும், உதவியையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 10). வேதாகமமெங்கிலும் தேவனுடைய வலதுகரமானது, தேவ ஜனத்திற்கு அவர் கொடுக்கும் வெற்றியை உருவகப்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது (சங்கீதம் 17:7; 98:1).
என் விரல் குணமாகும்வரையிலும், என் கம்யூட்டரில் நான் பேசுவதை அதுவே டைப் செய்யும் யுக்தியை பயன்படுத்தியும், என் வீட்டு அலுவல்களை என்னுடைய இடது கையின் துணைகொண்டும் செய்துகொண்டேன். தேவனுடைய நீதியின் வலதுகரத்திலிருந்து நம்முடைய உடைந்த வலக்கரம் வரையிலும் அனைத்திலும் தேவன் நம்மோடிருந்து நமக்கு உதவிசெய்வேன் என்று வாக்களித்துள்ளார்.
காலத்திற்கேற்ற தீர்வு
சைமனுக்கும் ஜெஃப்ரிக்குமான பகை ஆண்டுகளாய் நீடித்தது. அந்த உறவை சரிசெய்ய சைமன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடைசெய்யப்பட்டது. ஜெஃப்ரியின் தாயாரின் மரணத்தைக் கேள்விப்பட்ட சைமன், கென்யாவிலுள்ள மேல் நாட்டிற்கு பயணம்செய்து அந்த மரண ஊர்வலத்தில் பங்கெடுத்தான். அதற்கு பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நேரிட்டதைக் குறித்து சைமன், “அந்த மரண ஊர்வலத்திற்கு பின்பு அனைத்து சூழ்நிலையும் எப்படி தலைகீழாய் மாறும் என்பதை நான் சற்றும் ஊகிக்கவில்லை. நாங்கள் இருவரும் மனம் திறந்து பேசினோம். நாங்கள் கட்டிப்பிடித்து, அந்த தருணத்தை அனுபவித்து, ஒன்றாய் ஜெபித்து, மீண்டும் சந்திக்கவும் திட்டமிட்டோம்” என்று கூறினான். சைமனும் ஜெஃப்ரியும் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தனர் என்றால், பல மனவேதனைகளை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும்.
மத்தேயு 5:21-26ல் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயேசு உதவிசெய்கிறார். கோபம் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்துகிறார் (வச. 22). மேலும் உறவுரீதியாய் சரிசெய்யப்படாத பிரச்சனைகளை தேவனை ஆராதிப்பதற்கு முன்பு சரிசெய்யப்படவேண்டும் (வச. 23-24). ‘நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து” என்னும் இயேசுவின் ஞானமான போதனை, எவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒப்புரவாகிறோமோ அது நமக்கும் மற்றுவர்களுக்கும் நல்லது என்பதை வலியுறுத்துகிறது.
உறவுகள் சவாலானது; அது நம் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, கல்விக்கூடங்களிலோ, அல்லது சகவிசுவாசிகளிடத்திலோ, நம்முடைய கிரியையை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய சமாதானக் காரணரை (ஏசாயா 9:6) பிரதிபலிக்கிறவர்களாய் நம்முடைய இருதயத்தையும் கரங்களையும் அகல விரித்து, தீர்வுகாணமுடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பிரயாசப்படுவோம்.

கிறிஸ்மஸ் குழந்தை
ஒரு உயிரணுவிலிருந்து உயிர் தோன்றுவதுபோல, ஒரு விதையிலிருந்த கேதுருக்களை ஓங்கி வளரச்செய்யும் ஒருவர், கருவிலிருந்துகொண்டே நட்சத்திரங்களை தனக்கு அடிபணியச்செய்த ஒருவர், வானத்தை ஒளிக்கற்றைகளால் நிரப்பிய ஒருவரை சற்று கற்பனை செய்துபாருங்கள். தேவனாயிருந்த இயேசு தன்னை வெறுமையாக்குகிறார் (பிலிப்பியர் 2:6-7). என்னே ஆச்சரியமான சிந்தனை!
மேய்ப்பர்கள் மற்றும் தேவதூதர்கள் முன்னிலையில், வானத்து நட்சத்திரங்கள் ஒளிர, சுற்றியிருந்த விலங்கினங்கள் முதல் தாலாட்டைப் பாட, ஒரு விவசாய கிராமத்தில் இயேசுவின் பிறப்பை கற்பனை செய்யுங்கள். அவர் தேவ கிருபையிலும் மனிதர் தயவிலும் விருந்தியடைந்ததையும், கல்விமான்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலளித்ததையும், யோர்தான் நதியில் தன்னுடைய பிதாவின் ஒப்புதலைப் பெற்றதையும், பசியோடும் ஜெபத்தோடும் வனாந்திரத்திலே சோதிக்கப்பட்டதையும் பாருங்கள்.
அதன் பின்பு அவருடைய உலகத்தை மறுரூபமாக்கும் ஊழியத்தையும், வியாதியஸ்தர்களை குணமாக்கியதையும், குஷ்டரோகிகளை தொட்டதையும், அசுத்தமானவர்களை மன்னித்ததையும் பாருங்கள். அவர் தோட்டத்தில் வியாகுலப்பட்டதையும், அவருடைய உற்ற நண்பர்கள் ஓடிவிட அவர் கைதுசெய்யப்பட்டதையும் பாருங்கள். அவர் துப்பப்பட்டு. இரண்டு மரக்கட்டைகளின் நடுவில் ஆணியடிக்கப்பட்டு. உலகத்தின் பாவத்தை தன் தோள்களில் சுமந்தவராய் தொங்கவிடப்பட்டவரை பாருங்கள். கல் நகர, வெறுமையான கல்லறையின் அந்த சத்தத்தை. கவனியுங்கள், ஏனென்றால், அவர் உயிரோடிக்கிறார்!
அவர் உன்னதங்களில் உயர்த்தப்பட்டதைப் பாருங்கள் (வச. 9). வானத்தையும் பூமியையும் அவருடைய நாமம் நிரப்பியதைப் பாருங்கள் (வச. 10-11).
அண்டசராசரங்களில் நட்சத்திரங்களை உருவாக்கி, அவற்றை சிறு புள்ளியாய் காணச்செய்தவர் அவரே. அதுவே நம் கிறிஸ்மஸ் குழந்தை.