ஜெபத்தில் கட்டப்பட்ட நாவு
என் சிறிய தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், நான் கவலையுற்றேன். அவன் பிறவியிலே நாக்கு கட்டப்பட்ட (ankyloglossia) நிலையில் இருந்ததால், அவன் சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் கடினமாயிருக்கும் என, என் தாயார் விளக்கினார். இன்று, வார்த்தைகள் இல்லாமல் திணரும் நிலையையும், பேசுவதற்கு கூச்சப்படும் நிலையையுமே நாக்கு கட்டப்பட்ட நிலை என கூறுகிறோம்.
சிலநேரம், நம் ஜெபங்களில் என்ன பேசுவது என அறியாமல் நாக்கு கட்டப்படுகிறோம். நம்முடைய நாக்கு அர்த்தமில்லா ஆவிக்குரியச் சொற்களையும், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தையும் உச்சரிக்கும். நம் உணர்வுகளை பரலோகத்தை நோக்கி அம்பாக எய்கிறோம். அது கர்த்தருடைய செவியைச் சென்றடையுமா என தெரியவில்லை. நம்முடைய சிந்தனைகள் இங்கும் அங்குமாய் அலைபாய்கிறது.
ஜெபிக்கத் திணரும் வேளைகளில், என்ன செய்வதென்று தெரியாத முதலாம் நூற்றாண்டு ரோம விசுவாசிகளிடம், பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடும்படி பவுல் அப்போஸ்தலன் அழைக்கிறார். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26). இங்கே, “உதவி” என்பது அதிக எடையை சுமந்து செல்வதாகும். “வாக்குக்கடங்காத பெருமூச்சுகள்” என்பது நம் சார்பில், நம் தேவைகளை ஆவியானவர், தேவனிடத்தில் எடுத்துசெல்கிறார் என்பதைக் குறிக்கிறது.
நாம் ஜெபத்தில் வாய்கட்டப்படுகையில், கர்த்தருடைய ஆவியானவர் நம் குழப்பங்கள், வேதனைகள், கவனச்சிதறல்கள் ஆகியவற்றை நேர்த்தியான விண்ணப்பமாய் மாற்றி, நம் இருதயத்திலிருந்து அவைகளை தேவனுடைய செவிக்கு எட்டும்படி செய்கிறார். அவர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுக்கிறார். அவரை வேண்டிக் கொள்ளும்படிக்கு நாம் அவரை அனுமதிக்கும்வரை, நமக்கு தேவையான சரியான ஆறுதலை நாம் அறிந்திருக்கமாட்டோம்.

பாதுகாப்பான கரங்கள்
ஒரு கயிறு அறுபடுவது போல, டக் மெர்க்கியின் வாழ்க்கைக் கயிறு ஒன்றன்பின் ஒன்றாக அறுபட்டுக் கொண்டிருந்தது. “புற்றுநோயுடன் போராடி என் தாயார் தோற்றுப் போனார்; வெகுநாளாய் இருந்த என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; என் வருமானம் தடைபட்டது; என் வேலை மந்தமாக சென்றது... என்னைச் சுற்றியிருந்த இந்த பிரச்சனைகளினால் என்னுடைய ஆவிக்குரிய இருள் மிகவும் ஆழமாயிருந்தது” என்று போதகரும், சிற்பியுமான டக் மெர்க்கி எழுதுகிறார். இந்த கூட்டுநிகழ்வுகளும் அவருடைய இறுக்கமான வாழ்க்கையும் இணைந்து, “மறைவிடம்” என்ற ஒரு சிற்பத்தை அவர் செதுக்க நேர்ந்தது. கிறிஸ்துவின் ஆணியடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் அதற்குள் ஏதோ ஒன்றை பாதுகாப்பதுபோல மூடியிருக்கும்படி அந்த சிற்பத்தை வடித்திருந்தார்.
அந்த சிற்பம் “தனக்குள் வந்து ஒளிந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்து கொடுக்கும் அறைக்கூவல்” என்று டக் தன்னுடைய சிற்பத்திற்கு விளக்கமளிக்கிறார். சங்கீதம் 32ல், தாவீது தேவனையே தன்னுடைய சிறந்த புகலிடமாய் கண்டுபிடித்ததாக பாடுகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு அருளுகிறார் (வச. 1-5). குழப்பங்களின் மத்தியில் ஜெபிக்கும்படிக்கு நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 6). 7ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் தேவன் மீதான தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்: “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.”
பிரச்சனைகள் வரும்போது நீங்கள் யாரிடமாய் திரும்புகிறீர்கள்? நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை உடைந்து கேள்விக்குள்ளாகும் போது, இயேசுவின் மன்னிப்பின் மூலம் நித்தியப் பாதுகாப்பை அருளும் தேவனிடத்தில் நாம் மறைந்துகொள்ளலாம்.

அசையாத விசுவாசம்
தன் தகப்பனுடைய மரணத்திற்குபின், அவருடைய உடைமைகளைத் திரும்பப் பெற அருண், அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்குச் சென்றான். அதின் பணியாளர், அவனிடம் இருப் பெட்டிகளை ஒப்படைத்தார். மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அதிக சொத்துத் தேவையில்லை என்பதை அன்றுணர்ந்தேன் என அருண் கூறினான்.
அவன் தந்தை சதீஷ், எவரையும் புன்னகையுடன் வரவேற்று, கவலையற்ற எளிய வாழ்வு வாழ்ந்தவர். மற்றவர்களை எப்போதும் ஊக்கப்படுத்துகிறவர். அவருடைய மகிழ்ச்சிக்கு காரணம், அந்த பெட்டிக்குள் வைக்க முடியாது வேறொரு "சொத்து" அவரிடம் இருந்தது: அவருடைய மீட்பராகிய இயேசுவின் மீதான அசைக்க முடியாத விசுவாசமே அது.
“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத்தேயு 6:20) என்று, இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். வீடு, வாகனம் மற்றும் ஆஸ்தி ஆகியவைகளை நாம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய இருதயத்தின் நோக்கம் அவைகளையே பற்றியிருக்கக் கூடாது என்கிறார். சதீஷின் பற்று எதிலிருந்தது? மற்றவர்களை நேசிப்பதின் மூலம் தேவனை நேசிப்பதில் இருந்தது. அவர் வசித்த அந்த அறைக்குள் மேலும், கீழுமாக நடந்துச்சென்று பார்ப்பவர்களையெல்லாம் வாழ்த்தி உற்சாகப்படுத்துவாராம். யாரேனும் அழுதுகொண்டிருந்தால், அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்கும், அவர்களின் மனக்குமுறலைக் கேட்பதற்கும், அவர்களுக்காய் ஜெபிப்பதற்கும், இவர் அங்கேயிருப்பாராம். தேவனை மகிமைப்படுத்துவதிலும், மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
தேவனையும், மற்றவர்களையும் நேசிப்பதிலிருந்து நம்மை திசைத்திருப்பும் அற்பமான உலககாரியங்களால் நாம் மகிழ்ச்சியடைய முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 21). நாம் எதை அதிகமாக மதிக்கிறோம் என்பதை நாம் வாழும் விதமே பிரதிபலித்துவிடும்.

தேவனில் ஊக்கமடைதல்
1925ஆம் ஆண்டு, ஒரு உணவு விடுதியில் உதவியாளராய் பணிபுரிந்த லாங்ஸ்டன் ஹியூஸ் எனும் எழுத்தாளர், அவரை அதிகமாய் பாதித்த கவிஞரான வச்செல் லின்ட்சே, தான் பணிபுரியும் உணவு விடுதியில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்டார். ஹியூஸ், சற்று தயக்கத்துடன் லின்ட்சேவிடம் தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். அதை லின்ட்சே பொதுக்கூட்டத்தில், வெளிப்படையாய் சொல்லி அவரைப் பாராட்டினார். லின்ட்சேவின் இந்த பாராட்டு ஹியூஸ்க்கு பல்கலைக்கழகத்தின் கல்வி ஊக்கத்தொகையை பெறுவதற்கும், எழுத்துத் துறையில் சாதிப்பதற்கும் வழிவகுத்தது.
எந்தவொரு சிறிய பாராட்டும் வெகுவாக நம்மை ஊக்குவிக்கும், குறிப்பாக தேவன் அதில் இருக்கையில். தாவீதைக் கொல்ல நினைத்த சவுலிடமிருந்து, தாவீது தப்பியோடிய சம்பவத்தை வேதம் கூறுகிறது. சவுலின் குமாரன் யோனத்தான், தாவீதைத் தேடி கண்டுபிடித்து, தேவனிடத்தில் பலப்படுவதற்கு உதவி செய்கிறான். “நீர் பயப்பட வேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்” என்று ஆறுதல் கூறுகிறான் (1சாமுவேல் 23:15-17).
யோனாத்தான் சொன்னது சரிதான். தாவீது ராஜாவாகிறான். யோனத்தான், தாவீதை “தேவனுக்குள்” (வச.16) திடப்படுத்தினான். அது, தாவீதை பெலப்படுத்தியது. தேவன், கிறிஸ்துவுக்குள் “நித்திய ஆறுதலையும், நல்நம்பிக்கையையும்” அருளுகிறார் (2 தெசலோனிக்கேயர் 2:16). அவருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துகையில், அவரைப் போல் நம்மை உயர்த்துவதற்கு யாராலும் முடியாது.
நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு தேவனுடைய திடப்படுத்துதல் அவசியம். யோனத்தான், தாவீதைத் தேடியது போல நாமும் அவர்களைத் தேடி, அன்பான வார்த்தைகளையும், உதவிகளையும் நல்கும்போது, தேவன் மற்றதைப் பார்த்துக் கொள்வார். இந்த உலக வாழ்க்கை எப்படியிருந்தாலும், அவரை நம்பியவர்களுக்கு நித்தியத்தில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

நம்முடைய வரங்களை பிரயோகித்தல்
2013ஆம் ஆண்டு படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர் ஒன்றின் இறுதிக் காட்சியில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் டேவிட் சுசெத் நடித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், ஒரு நாடகத்திலும் சிறப்புத் தோற்றத்தை ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு பெரிய வேலைகளின் மத்தியில், தன் “வாழ்க்கையின் முக்கிய பங்காக” ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்துதல் வரையிலான (752,702 வார்த்தைகள்) முழுவேதாகமத்தை, இருநூறு மணிநேரங்களுக்கு அதிகமாக செலவிட்டு ஒலிப்பதிவு செய்தார்.
டேவிட், தன்னுடைய ஓட்டல் அறையிலிருந்த ரோமர் நிருபத்தை வாசித்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர். தன்னுடைய இந்த முயற்சியை, “27 ஆண்டுகால லட்சியத்தின் நிறைவேற்றம்; அதை செய்யும்படிக்கு ஏவப்பட்டேன். அதை நேர்த்தியாய் செய்வதற்கு பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்; ஆகையால் என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிடுகிறார். பின்னர் தன் சம்பளத்தையும் காணிக்கையாக கொடுத்தார்.
வரங்களை பொறுப்பாக பேணி, பின்னர் பகிர்ந்து, தேவனை எவ்வாறு மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு, இவருடைய இந்த ஒலிப்பதிவு முயற்சி நல்ல உதாரணம். அதுபோன்ற ஒரு பொறுப்பான குணத்தை எதிர்பார்த்தே முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு பேதுரு நிருபம் எழுதுகிறார். இராயனை வணங்காமல் இயேசுவை வணங்கியதற்காய் உபத்திரவப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, தங்கள் வரங்களை உபயோகித்து தேவனுக்காய் வாழ்வது, சவால் நிறைந்த ஒன்றாய் இருந்தது. “ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்” (1 பேதுரு 4:11). “இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப் படும்படியாய்” மற்ற திறமைகளைப் போலவே இவைகளையும் வளர்த்துக்கொள்ளலாம்
இந்த நடிகர் தன்னுடைய தாலந்தை தேவனுக்காய் பயன்படுத்தியது போல நாமும் செய்ய முற்படுவோம். தேவன் உங்களுக்கு என்ன தாலந்தைக் கொடுத்திருக்கிறாரோ அவருடைய நாம மகிமைக்காய் அதைப் பயன்படுத்துங்கள்.