என் சிறிய தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், நான் கவலையுற்றேன். அவன் பிறவியிலே நாக்கு கட்டப்பட்ட (ankyloglossia) நிலையில் இருந்ததால், அவன் சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் கடினமாயிருக்கும் என, என் தாயார் விளக்கினார். இன்று, வார்த்தைகள் இல்லாமல் திணரும் நிலையையும், பேசுவதற்கு கூச்சப்படும் நிலையையுமே நாக்கு கட்டப்பட்ட நிலை என கூறுகிறோம்.

சிலநேரம், நம் ஜெபங்களில் என்ன பேசுவது என அறியாமல் நாக்கு கட்டப்படுகிறோம். நம்முடைய நாக்கு அர்த்தமில்லா ஆவிக்குரியச் சொற்களையும், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தையும் உச்சரிக்கும். நம் உணர்வுகளை பரலோகத்தை நோக்கி அம்பாக எய்கிறோம். அது கர்த்தருடைய செவியைச் சென்றடையுமா என தெரியவில்லை. நம்முடைய சிந்தனைகள் இங்கும் அங்குமாய் அலைபாய்கிறது. 

ஜெபிக்கத் திணரும் வேளைகளில், என்ன செய்வதென்று தெரியாத முதலாம் நூற்றாண்டு ரோம விசுவாசிகளிடம், பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடும்படி பவுல் அப்போஸ்தலன் அழைக்கிறார். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26). இங்கே, “உதவி” என்பது அதிக எடையை சுமந்து செல்வதாகும். “வாக்குக்கடங்காத பெருமூச்சுகள்” என்பது நம் சார்பில், நம் தேவைகளை ஆவியானவர், தேவனிடத்தில் எடுத்துசெல்கிறார் என்பதைக் குறிக்கிறது.

நாம் ஜெபத்தில் வாய்கட்டப்படுகையில், கர்த்தருடைய ஆவியானவர் நம் குழப்பங்கள், வேதனைகள், கவனச்சிதறல்கள் ஆகியவற்றை நேர்த்தியான விண்ணப்பமாய் மாற்றி, நம் இருதயத்திலிருந்து அவைகளை தேவனுடைய செவிக்கு எட்டும்படி செய்கிறார். அவர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுக்கிறார். அவரை வேண்டிக் கொள்ளும்படிக்கு நாம் அவரை அனுமதிக்கும்வரை, நமக்கு தேவையான சரியான ஆறுதலை நாம் அறிந்திருக்கமாட்டோம்.