காத்திருத்தல் என்பது நம் அமைதியை திருடும் திருடனாய் இருக்கலாம். ரமேஷ் சீதாராமன் என்னும் கணிணி விஞ்ஞானியின் கூற்றுப்படி, “இணையதளங்களில், சில வலைதளங்கள் தோன்ற ஏற்படும் தாமதம் மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் பிறப்பிக்கிறது” என்று கூறுகிறார். ஆன்லைனில் ஒரு காணொலியை காண்பதற்கு, அதிகபட்சம் ஒருவர் இரண்டு விநாடிகள் மட்டுமே காத்திருக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். ஐந்து விநாடிகள் கடந்தவுடன் இருபத்தைந்து சதவிகித மக்கள் பதிவிறக்கும் முயற்சியை கைவிடுகின்றனர், பத்து விநாடிகள் கழித்து ஏறத்தாழ பாதிபேர் அணைத்து முயற்சிகளையும் கைவிடுகின்றனர். நாம் பொறுமையேயில்லாத ஜனங்கள்.  

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் விசுவாசிகளுக்கு, அந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவத்தின் மத்தியிலும், ஒருவரையொருவர் நேசிக்கவும், கனப்படுத்தவும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இந்த நம்பிக்கை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் (யாக்கோபு 5:7-10). அவருடைய இந்த கருத்தை வலியுறுத்துவதற்கு பயிரிடுகிற விவசாயியை உதாரணமாக்குகிறார். பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் (வச. 7) ஒரு விவசாயி காத்திருப்பது போல, இயேசுவின் வருகை வரும்வரை உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். அவர் வரும்போது, கோணலானவைகளை செவ்வையாக்கி, இளைப்பாறுதலை உண்டுபண்ணுவார். 

அவருக்காய் காத்திருக்கும்போது சிலவேளைகளில், அவரை நாம் மறுதலிக்க தூண்டப்படுகிறோம். ஆனால் காத்திருக்கும் வேளையில், “விழித்திருங்கள்” (மத்தேயு 24:42), உண்மையாய் இருங்கள் (மத்தேயு 25:14-30), அவருடைய வழியில் நடந்து, அவருடைய சுபாவத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 3:12). கிறிஸ்துவின் வருகை எப்போது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் வரும்வரை நாம் பொறுமையோடே காத்திருப்போம்.