வகை  |  odb

விசுவாசத்தில் வளர்தல்

என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.

சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).

மீண்டும் பாடுங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.

வயது வெறும் எண்ணிக்கையே

சாதிப்பதற்கு, இளம் வயது தடையில்லை. அது பதினோரு வயதேயான மிகாய்லாவையும் தடைசெய்யவில்லை. எலுமிச்சை பாணம் அருந்துவதற்கு பதிலாக மிகாய்லா எலுமிச்சை பாணத்தை வியாபாரமாக்கினாள். “மீ அண்ட் தி பீஸ் லெமெனேட்” என்ற அவள் வியாபாரம், தன் பாட்டியின் சமையல் குறிப்போடு ஆரம்பமாகி, ஷார்க் டேங்க் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் முதலீட்டாளர்களால் 60,000 டாலர்கள் முதலீட்டை ஈட்டினாள். மேலும் அவள் பிரபலமான மளிகை வியாபாரியின், ஐம்பத்தைந்து கடைகளில் தன்னுடைய எலுமிச்சை பாணத்தை விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.

மிகாய்லாவின் வேகமும், அவளது லட்சியங்களும், “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு” (1 தீமோத்தேயு 4:12) என்று தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையை நமக்கு நினைப்பூட்டுகின்றன.
தீமோத்தேயு, மிகாய்லாவை போல சிறுபிள்ளையல்ல; எனினும், தன் சபையாரோடு ஒப்பிடுகையில் அவர் இளையவராகவே இருந்தார். ஜனங்கள் தன்னை அலட்சியம் செய்வதைக்குறித்து வேதனைப்பட்டார். மேலும் அப்போஸ்தலன் பவுலிடம் அவர் பயின்றிருந்தாலும், தங்களை வழிநடத்தும் அளவிற்கு அவர் முதிர்ச்சியடையவில்லை என சிலர் கருதினர். அவருடைய தகுதிகளை பிறருக்கு நிரூபித்துக்காட்டும்படிக்கு பவுல் அவரை அறிவுறுத்தவில்லை; மாறாக, அவருடைய வார்த்தைகள், வாழும் முறை, சபையினரை நேசித்தல், விசுவாசத்தை வாழ்ந்து காட்டுதல் மற்றும் கற்போடு இருத்தல் (வச. 12) ஆகியவற்றால் அவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியை நிரூபிக்க தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார். இத்தகைய முன்மாதிரியாக அவர் இருந்தால், அவரைப் போதகராக, மேய்ப்பராக எவரும் அசட்டை செய்யமுடியாது.

நாம் எந்த பருவத்தினராயினும், இவ்வுலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கிறிஸ்துவை மையப்படுத்தி முன்மாதிரியாக நாம் இருக்க, தேவனே நமக்கு தேவையானவற்றை அருளுகிறார். சுவிசேஷத்தால் நம் வாழ்வை வடிவமைக்கிறார். ஆகவே நாம் பதினேழு வயது வாலிபனோ, அல்லது எழுபது வயது வயோதிகரோ, பிறரோடு சுவிசேஷம் பகிர நாம் தகுதியானவர்களே.

பாதுகாப்பிற்கு இழுக்கப்படுதல்

அந்த சிறுபெண் ஆழமில்லா அந்நீரோடையில் தடுமாறி நடப்பதை அவள் தந்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தன் முட்டி வரைக்கும் காலணி அணிந்திருந்தாள். கீழ்நோக்கி பாய்ந்த நீரோடையில் அவள் சறுக்குகையில், தண்ணீர் ஆழமாகி, அவளால் மேற்கொண்டு நடக்ககூடாதபடி பாய்ந்தது. தன்னால் அடுத்த அடி வைக்கமுடியாதபோது, “அப்பா, நான் சிக்கிக்கொண்டேன்” என்று அலறினாள். மூன்றே அடிகள் தான், அவள் தந்தை அவளருகே நின்றார், அவளை கரையில் இழுத்துவிட்டார். அவள் சிரித்துக்கொண்டே தன் காலணியை உதறி கழட்ட, அதிலிருந்த தண்ணீர் கீழே கொட்டியது.

தேவன், சங்கீதக்காரன் தாவீதை தன்னுடைய சத்துருக்களிடமிருந்து மீட்ட பிறகு, அவரும் இப்படி சற்று நேரமெடுத்து அமர்ந்து, “தன் காலணிகளை கழற்றி,” தன் ஆத்துமா விடுதலையில் நனைய அனுமதித்தார். தன் உணர்வுகளை வெளிப்படுத்த பாடலொன்றையும் எழுதினார். “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமுவேல் 22:4) என்றார். தேவன் தன்னுடைய கன்மலை, கோட்டை, கேடகம் மற்றும் உயர்ந்த அடைக்கலம் என்று துதிக்கிறார் (வச. 2–3). பின்பு தேவன் பதிலளித்த விதத்தை பாடல்நடையில் வர்ணிக்கிறார், “பூமி அசைந்து அதிர்ந்தது; வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (வச. 8, 10, 13–15, 17).

இன்றைக்கு உங்களைச் சுற்றிலும் எதிர்ப்பை நீங்கள் உணரலாம். ஆவிக்குரிய ரீதியில் முன்னேறக்கூடாதபடி பாவத்தில் நீங்கள் சிக்கியிருக்கலாம். தேவன் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவிய விதத்தை நினைத்துப்பாருங்கள். அவரைத் துதித்து, மீண்டும் அதை செய்யுமாறு அவரைக் கேளுங்கள். விசேஷமாக உங்களை தமது ராஜ்யத்திற்குட்படுத்தி விடுவித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள் (கொலோசெயர் 1:13).

மண்ணென்று உணர்தல்

எங்கள் வாராந்திர ஊழிய கூடுகையின்போது, ரவி தான் “மண்ணென்று உணர்வதாக” குறிப்பிடுகையில், அவர் தன் முதுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடினிமித்தம் உண்டாகும் சரீர பெலவீனங்களைக் குறிப்பிடுவதை புரிந்துகொண்டேன். ஏனெனில் ரவியும், அவர் மனைவியும், அறுபது வயதை கடந்திருந்தனர். அவர்களின் 2020ஆம் வருடம், மருத்துவர்கள் ஆலோசனை, அறுவைசிகிச்சை முறைகள், வீட்டிலிருந்தே மருத்துவம் பார்க்க வீட்டை மாற்றி அமைத்தல் போன்றவைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவிலிருந்தார்கள். அதை நன்கு உணரவும் செய்தார்கள்.

சரீரப்பிரகாரமான, மனோரீதியான, உணர்வுரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பெலவீனங்கள், இயலாமைகள், குறைபாடுகள் ஆகியற்றை உணர ஒருவர் வயது சென்றவராய் இருக்க வேண்டுமென்றில்லை. தேவன், தம் குமாரன் இயேசுவின் மனுஉருவில், வீழிச்சியடைந்த இவ்வுலகத்திற்கு வந்து, மனித பிறவியின் சுமைகளை அனுபவிப்பவர்கள் மேல் கரிசனைகொள்கிறார் (சங்கீதம் 103:13). மேலும் தாவீது, “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14) என்றெழுதினார். “மண்” என்ற பதம் நம்மை ஆதியாகமத்திற்கு பின்னோக்கி கொண்டுசெல்கிறது. “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்” (2:7).

நீங்கள் மண்ணென்று இந்நாட்களில் உணர்கிறீர்களா? பூமிக்குரிய வாழ்க்கையின் எதார்த்தங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். நாம் பெலவீனமானவர்கள் என்று உணரும்போது நாம் தனித்திருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதுருக்கம் நிறைந்த நம் தேவன் அறிந்திருக்கிறார், நினைவுகூருகிறார். பூமிக்குரிய மனிதர்களான நம்மைப் போன்றவர்களுக்கு மன்னிப்பை அருள தன் குமாரனையே நமக்காக அனுப்பி தம் அன்பை நிரூபித்துள்ளார். வாழ்க்கை நமக்கு எதையளித்தாலும், நாம் அவரை நம்புவோமாக.