சீர்படுத்தும் தேவன்
நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர்.
பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார்.
வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.
உறவுகளை ஒப்புரவாக்குதல்
சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.
தேவனில் பலப்படுதல்
கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் புலிசிக், தன்னுடைய காலபந்தாட்ட வரலாற்றில் பல காயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதின் விளைவாய் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாது என்பதை அறிந்து அவர் ஏமாற்றமடைந்தார். ஆனால் தேவன் அவருக்கு தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கிறார். “எப்போதும் போல, நான் தேவனை சார்ந்திருக்கிறேன்; அவர் என்னை பெலப்படுத்துகிறார்; எப்போதும் என்னோடு ஒருவர் இருப்பதைப் போல நான் உணர்கிறேன். அந்த உணர்வில்லாமல் எந்த காரியத்தையும் என்னால் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். ஆனால் அதே ஆட்டத்தில் மாற்றாட்டக்காரராய் களமிறங்கிய புலிசிக், அந்த ஆட்டத்தின் நாயகனாய் மாறினார். அவர் விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் புத்திசாலித்தனமாய் நகர்த்திய பந்து அந்த விளையாட்டில் அவருடைய அணி வெற்றிபெறுவதற்கான முக்கிய திருப்பமாய் அமைந்து, அவரை அந்த விளையாட்டின் நாயகனாய் மாற்றியது. இந்த அனுபவமானது, நம்முடைய பலவீனங்கள் தேவன் தன்னுடைய அளவிட முடியாத வல்லமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாய் கருதலாம் என்னும் விலையேறப்பெற்ற பாடத்தை அவருக்கு கற்பித்தது.
பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது, நம்முடைய சுயபெலத்தை சார்ந்துகொள்ளும்படிக்கு உலகம் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையும் வல்லமையும் நம்மை பெலப்படுத்துகிறது என்று வேதாகம ஞானம் நமக்கு போதிக்கிறது (2 கொரி. 12:9). ஆகையால் போராட்டங்களை நாம் தனித்து மேற்கொள்வதில்லை என்பதை அறிந்து விசுவாசத்தோடு முன்னேறுவோம். நம்முடைய பெலவீனங்கள் தேவனுடைய பெலனை விளங்கச்செய்யும் வாய்ப்புகளாய் தேவன் பயன்படுத்தி நம்மை பலப்படுத்துகிறார் (வச. 9-10). ஆகையால் நம்முடைய போராட்டங்களை தேவனை துதிக்கும் மற்றும் நன்றி செலுத்தும் வாய்ப்புகளாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இந்த தெய்வீக அன்பின் மேன்மையை அனுபவிக்கக்கூடும்.
ஆவிக்குரிய புதுப்பிப்பு
சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.
வெறுமையாய் ஓடுதல்
“இனி என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று என் சிநேகிதி கண்ணீரோடு சொன்னாள். ஒரு சர்வதேச சுகாதார நெருக்கடியில் ஒரு செவிலியராக அவள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை அவள் விவாதிக்கும்போது அப்படி சொன்னாள். “தேவன் என்னை செவிலிய சேவை செய்ய அழைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உணர்வுபூர்வமாய் சோர்ந்துபோயிருக்கிறேன்” என்றாள். அவள் மிகவும் சோர்வுற்றிருக்கிறாள் என்பதை அறிந்து, “நீ இப்போது உதவியற்றவளாய் உணருகிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் தேவன் உன்னை வழிநடத்தி பெலப்படுத்துவார்” என்று ஆறுதல் சொன்னேன். அந்த நேரத்தில் அவள் ஜெபிக்க தீர்மானித்தாள். விரைவில் அவளுடைய சோர்வுகள் மறைந்து ஒரு புதிய தெளிவுடன் காணப்பட்டாள். செவிலியர் பணியை தொடர்ந்து செய்வதற்கு மட்டுமல்லாது, பல நாடுகளில் இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு கடந்துசென்று சேவை செய்ய தேவன் அவளுக்கு பெலன் கொடுத்தார்.
கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நாம் பாரங்களினால் அழுத்தப்படும்போது நம்முடைய உதவிக்காகவும் ஊக்கத்திற்காகவும் தேவனை நோக்கிப் பார்ப்போம். ஏனெனில் அவர் “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” (ஏசாயா 40:28). ஏசாயா தீர்க்கதரிசி தேவனைக் குறித்து, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 29) என்று சொல்லுகிறார். தேவனுடைய பெலன் நித்தியமானது என்றாலும், நாம் சரீரப்பிரகாரமாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதை அவர் அறிவார் (வச. 30). ஆனால் வாழ்க்கையின் சவால்களை மட்டும் கடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்முடைய பெலத்திற்காக நாம் தேவனை சாரும்போது, அவர் நம்மை மீட்டெடுத்து, புதுப்பித்து, விசுவாசத்தில் வளருவதற்கான நிச்சயத்தை நமக்குத் தருவார்.
தேடி வந்த தேவன்
போனி கிரே, அவள் சோகத்தில் இருந்த தருணத்தைக் குறித்து அவளுடைய சமீபத்திய ஆன்லைன் பதிவில் பகிர்ந்துகொண்டாள். “என்னுடைய வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான அத்தியாயத்தின்போது, எதிர்பாராத விதமாய் நான் பயத்தினாலும் மனச்சோர்வினாலும் பாதிக்கப்பட்டேன்” என்று பதிவிட்டிருந்தாள். கிரே, அவளுடைய பயத்தைப் போக்க பல வழிகளை கையாண்டாள். ஆனால் அந்த பிரச்சனையை தனியாளாய் கையாளுவது சாத்தியம் என்பதை சீக்கிரம் புரிந்துகொண்டாள். “என்னுடைய நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்பது எனக்கு பிடிக்காது. ஆகையினால், நாம் அமைதியாய் இருந்து என்னுடைய மனச்சோர்வு நீங்கும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் நம்மை கனவீனப்படுத்தவோ நம்முடைய வலிகளை மறைத்துக்கொள்வதையோ அனுமதிப்பதில்லை, மாறாக, அதை குணமாக்க விரும்புகிறார்.” தேவனுடைய பிரசன்னத்தில் கிரே சுகத்தைப் பெற்றாள். அவளை அச்சுறுத்திய அலைகளின் கோரப்பிடியிலிருந்து தேவன் நங்கூரமாய் செயல்பட்டு அவளை விடுவித்தார்.
நாம் பெலவீனப்பட்டு சோர்வடையும்போது, நமக்காய் தேவன் இருக்கிறார். அவர் நம்மை தாங்குவார். சங்கீதம் 118இல் தாவீது அவனுடைய எதிரிகளால் மேற்கொள்ளப்படக்கூடிய கட்டத்தில் தேவனை துதித்து, தன் மீட்பிற்காய் மன்றாடுகிறான். அவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” என்று அறிக்கையிடுகிறான் (வச. 16). மோதியடிக்கும் சமுத்திரத்தின் கொடூர அலைகளைப் போன்று மனச்சோர்வு சிலவேளைகளில் நம்மை ஆட்கொண்டாலும், நம்மை நேசிக்கும் தேவன் இறங்கி வந்து நமக்கு உதவிசெய்து, “விசாலமான” இடத்திற்கு (வச. 19) நம்மை பாதுகாப்பாய் கொண்டுசேர்ப்பார். வாழ்க்கையின் சவால்களை நாம் சந்திக்கும்போது நம்முடைய அடைக்கலமாகிய தேவனையே நோக்கிப் பார்ப்போம்.
ஒரு அன்பான உழைப்பு
டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.
தேவன் உன்னை அறிந்திருக்கிறார்
ஒரு முறை பள்ளியில் சில பிரச்சனைகளுக்கு பிறகு, என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் என் விரக்தியான முகத்தை மறைக்க முயன்றேன். “என்ன விஷயம்?” என்று என் அம்மா கேட்டார். அவர் மேலும், “அது ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு முன், நான் உன்னுடைய அம்மா என்பதை நினைவில் வைத்துக்கொள். நான் உன்னைப் பெற்றெடுத்தேன், நீ உன்னை அறிவதை விட உன்னை நான் நன்றாக அறிவேன்” என்று சொன்னார். நான் எப்படிப்பட்டவன் என்பதைக் குறித்த என்னுடைய அம்மாவின் அந்த தெளிவான அறிவு, என்னுடைய துக்கமான நேரங்களில் அவர்களின் ஆதரவு எனக்கு தேவை என்பதை நினைப்பூட்டுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம், நம்மை நன்றாய் அறிந்த ஒரு தேவனால் பராமரிக்கப்படுகிறோம். சங்கீதக்காரன் தாவீது, தேவன் அவருடைய பிள்ளைகளின் வாழ்வில் கொண்டிருக்கும் அக்கறைக்காக தேவனைத் துதிக்கிறார், “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:1-2). நாம் யார் என்பதையும், நம்முடைய எண்ணம், ஆசை மற்றும் செயல் ஆகியவற்றையும் தேவன் அறிந்திருப்பதால், அவருடைய அபரிவிதமான அன்பு மற்றும் பாதுகாப்பின் எல்லையைத் தாண்டி நாம் எங்கும் செல்ல முடியாது (வச. 7-12). மேலும், “நான்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும்” (வச. 9-10) என்று தாவீது பாடுகிறார். வாழ்க்கையில் நாம் எங்கிருந்தாலும், ஜெபத்தில் தேவனை கூப்பிடும்போது, அவர் நமக்குத் தேவையான அன்பையும், ஞானத்தையும், வழிகாட்டுதலையும் தருவார் என்று உறுதியாய் நம்பலாம்.
தேவனில் நம்பிக்கை
பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.