
தேவனின் வார்த்தையின் வல்லமை
1968 கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, அப்பல்லோ 8 என்கிற விண்கலத்தின் விண்வெளி வீரர்களான பிராங்க் போர்மன், ஜிம் லொவெல் மற்றும் பில் ஆண்டர்ஸ் ஆகியோர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் மனிதர்களானார்கள். சந்திரனை பத்துமுறை சுற்றிவந்த அவர்கள், சந்திரன் மற்றும் பூமியின் புகைப்படங்களை அனுப்பினர். ஒரு நேரடி ஒலிபரப்பின்போது, அவர்கள் மாறிமாறி ஆதியாகமம் 1 ஐ வாசித்தனர். இதின் நாற்பதாம் ஆண்டின் நினைவு விழாவில், போர்மன் "கிறிஸ்துமஸுக்கு முந்தின தினமன்று, ஒரு மனித சத்தத்தைக் கேட்க இதுவரையில்லாத பெருங்கூட்டம் கூடுமென்றும், அவர்களுக்குப் பொருத்தமான எதையாகிலும் பேச வேண்டும் என்பதே நாசா இட்ட ஒரே கட்டளை"' என்றார். இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஒலிப்பதிவைக் கேட்டவர்களுக்கு அப்பல்லோ 8ன் விண்வெளி வீரர்கள் பேசின வேதாகம வசனங்கள் இன்றும் ஜனங்களின் இதயத்தில் சத்திய விதைகளாய் விதைக்கப்படுகின்றன.
தேவன், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக, "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்" (ஏசாயா 55:3) என்றார். தனது இரட்சிப்பின் இலவச ஈவை வெளிப்படுத்தி, நாம் நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவரது இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற அழைக்கிறார் (வ.6–7). அவருடைய நினைவுகள் மற்றும் செயல்களின்மீது தனக்கு மாத்திரம் இருக்கும் தெய்வீக அதிகாரத்தை அறிவிக்கும் தேவன், அவை நமது புரிந்துகொள்ளுதலுக்கு மிகவும் அப்பாற்பட்டது என்கிறார் (வ.8–9). ஆயினும், வாழ்வை மாற்றும் அவரது வேதாகம வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கும் அளிக்கிறார். அவை இயேசுவையே நமக்குக் காண்பித்து, தமது ஜனங்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அவரே ஆதாரம் என்பதை உறுதிப்படுத்துகின்றன (வ.10–13).
நற்செய்தியைப் பகிரப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவ பிதா தமது பூரண சித்தத்தின்படி குறித்த காலத்தில் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார்.

பாட்டி திமிங்கலம்
ஒரு ஒர்க்கா திமிங்கலத்தை, ஆய்வாளர்கள் "பாட்டி" என்று பெயர்சூட்டியுள்ளனர். ஏனெனில் அது தனது "பேர திமிங்கலத்தின்" வாழ்வில் தனது முக்கியமான பங்கை நன்கறிந்திருந்தது. அந்த இளம் திமிங்கலத்தின் தாய் சமீபத்தில் இறந்துபோனது. அனாதையான திமிங்கலம் ஆதரவும் பாதுகாப்புமின்றி, உயிர்வாழும் அளவு முதிர்ச்சியடையவில்லை. சுமார் எண்பது வயதான இந்த "பாட்டி" திமிங்கலம் தான் இதற்கு ஆதரவாக வந்து, இது உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொடுத்தது. இந்த பாட்டி திமிங்கிலம், மீன்கள் அனைத்தையும் தானே உண்ணாமல், இந்த குட்டி திமிங்கலத்திற்கும் சேகரித்துத் தந்தது. இதனால் இந்த இளம் திமிங்கலத்திற்கு உணவு கிடைத்ததுமின்றி, என்ன உணவு சாப்பிடவேண்டும், அதை எங்கே கண்டுபிடிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டது.
நமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும் கற்றுத்தருகிற பாக்கியம் நமக்கும் உண்டு. நமக்குப்பின் வாழப்போகிறவர்களோடு, தேவனின் குணாதிசயங்களையும் அவருடைய மகத்துவமான செயல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். முதிர்ந்துகொண்டிருந்த சங்கீதக்காரன் தேவனிடம், "வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் (அறிவிக்க)" (சங்கீதம் 71:18) அனுமதி கேட்கிறான். அவருடைய நீதியான கிரியைகளையும், நாம் செழித்தோங்குவதற்கான அவருடைய இரட்சிப்பின் செயல்களையும் (வ.15) என்று, தான் தேவனைக் குறித்து அறிந்துள்ளதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள வாஞ்சிக்கிறான்.
நமக்கு முதிர்வயதின் நரைமுடி இல்லாமலிருக்கலாம் (வ.18), ஆயினும் தேவனுடைய அன்பையும் நம்பகத்தன்மையையும் நாம் அனுபவித்த விதத்தை பகிர்வது அவரோடு பயணிக்கும் யாருக்காவது உபயோகமாயிருக்கும். எதிர்ப்புகளின் மத்தியிலும் கிறிஸ்துவோடு முன்சென்று வாழ்வதற்கு அந்த மனிதருக்குத் தேவையான ஞானம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் காரியத்தால் கிடைக்கக்கூடும் (வ.20).

தாழ குனிதல்
தனது சிறிய மிதிவண்டியை, தனது சிறிய கால்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வேகமாய் மிதித்து, ஓட்டிக்கொண்டிருந்த தன்னுடைய மகளை அந்த இளம் தாய் பின்தொடர்ந்தாள். ஆனால் அவள் நினைத்த வேகத்தை விட அதிக வேகமெடுக்கவே, கட்டுப்பாடின்றி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த சிறுமி, தனது கணுக்காலில் காயம் பட்டதென்று அழுதாள். அவள் தாயோ அமைதியாய் அவளருகே மண்டியிட்டு, தாழக் குனிந்து, கணுக்காலில் முத்தமிட்டாள் (வலி சரியாகிவிடுமாம்!). ஆச்சரியம்! அந்த சிறுமி குதித்தெழுந்து, மிதிவண்டியில் ஏறி மீண்டும் ஓட்ட ஆரம்பித்தாள். நமது வலிகளும்கூட இப்படி இலகுவாய் மாறினால் எவ்வளவு நலமாயிருக்கும்!
அப்போஸ்தலன் பவுல் தனது தொடர்ச்சியான உபத்திரவங்களின் மத்தியில் தேவனுடைய ஆறுதலை அனுபவித்ததால், அவரால் தொடர்ந்து முன்னேற முடிந்தது. 2 கொரிந்தியர் 11:23–29 இல், அவர் சந்தித்த உபத்திரவங்களில் சிலவற்றைப் பட்டியலிடுகிறார்: அடிகள், கசையடிகள், கல்லெறியப்படுதல், தூக்கமின்மை, பட்டினி, சபைகளைக் குறித்த கவலை. அவர் தேவன், "இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்" (1:3) என்பதை மிகநெருக்கமாக அறிந்துகொண்டார். இதையே மற்றுமொரு மொழிபெயர்ப்பு, "தேவன், மென்மையான அன்பைத் தரும் தகப்பன்' என்கிறது. அந்த தாய் தன் குழந்தையை தேற்றியதுபோல; தேவனும் நமது வேதனையின் மத்தியில் தாமே கீழே குனிந்து மென்மையாய் நம்மைப் பராமரிக்கிறார்.
தேவன் அன்பாய் தேற்றுகிற வழிமுறைகள் பலவாயும், வித்தியாசமானதுமாய் உள்ளன. நாம் தொடர்ந்து முன்னேற தமது வசனத்தின்மூலம் நம்மை ஊக்குவிப்பார் . நண்பர்கள் மூலமோ, யாராகிலும் மூலமோ நம்மோடு விசேஷித்தவிதமாக பேசி, நமது ஆவிக்கு ஆறுதலளிப்பார். நமது உபத்திரவங்கள் ஓயாததுதான், ஆனால் தேவன் கீழே குனிந்து நமக்கு உதவுவதால், நாம் மீண்டும் எழுந்து, ஓட துவங்கலாம்.

பொக்கிஷமான ஜெபம்
கிளார்க் மரங்கொத்தி ஒரு வியப்பான பறவையினம். ஒவ்வொரு ஆண்டும் தன்னை குளிர்காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக நான்கைந்து வெள்ளை பட்டை பைன் விதைகளைச் சேகரிக்கும் இப்பறவை, ஒரு மணிநேரத்தில் சுமார் ஐந்நூறு விதைகளை ஒளித்துவைக்கிறது. பிறகு சிலமாதங்கள் கழித்து, கடும்பனியின் மத்தியிலும் இவ்விதைகளைத் தேடி வருகிறது. ஒரு கிளார்க் மரங்கொத்திப் பறவை, விதைகளை ஒளித்து வைத்திருக்கும் சுமார் பத்தாயிரம் இடங்களைக் கூட அறிந்திருக்கும். இது மிகவும் ஆச்சரியமானது (மனிதர்களாகிய நாம் நமது மூக்குக் கண்ணாடிகளையும், வண்டி சாவிகளையும் வைத்த இடம் தெரியாமல் திணறுவதை நினைத்தால் இது எவ்வளவு விசேஷித்தது).
இந்த வியத்தகு ஞாபக சக்தியும்கூட நமது ஜெபங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் தேவனோடு ஒப்பிடுகையில், ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு உண்மையான ஜெபத்தையும் அவர் நினைவில் வைத்து, வருடங்கள் உருண்டோடினாலும் தவறாது அவைகளுக்குப் பதிலளிக்க வல்லவர். வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலன் யோவான், பரலோகத்தில் தேவனை நான்கு ஜீவன்களும் இருபத்துநான்கு மூப்பர்களும் தொழுதுகொள்வதை விவரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும், "பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும்" (5:8) பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
பண்டைய காலத்தில் தூபவர்க்கங்கள் விலையேறப்பெற்றவை. அவ்வாறே தேவனுக்கு நமது ஜெபங்களும் விலையேறப்பெற்றவை. ஆகவேதான் தேவன் அவைகளை தமக்குமுன் நித்தமும் பொற்கலசங்களில் வைத்துப் பாதுகாக்கிறார். தேவனுக்கு நமது ஜெபங்கள் முக்கியம், ஏனெனில் நாம் அவருக்கு முக்கியம். மேலும் நம்மைப்போலத் தகுதியற்றவர்களுக்குத் தேவன் இயேசுவின் மூலமாகப் பாராட்டும் இரக்கத்தால், அவரோடு தடையில்லா ஐக்கியத்தை அளிக்கிறார் (எபிரேயர் 4:14–16). ஆகவே தைரியமாக ஜெபியுங்கள், தேவனின் வியத்தகு அன்பின் காரணத்தால் உங்கள் ஒரு வார்த்தையும்கூட மறக்கப்படுவதுமில்லை, தவறவிடப்படுவதுமில்லை.
