வகை  |  odb

இயேசுவுக்காய் மற்றவர்களுக்கு ஊழியம் செய்தல்

“ஸ்டார் ட்ரெக்” என்ற தொடரில் லெப்டினன்ட் உஹ_ராவாக நடித்ததற்காக நடிகை நிச்செல் நிக்கோல்ஸ் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். இந்த பாத்திரத்தில் நடித்தமைக்காக, பெரிய தொலைக்காட்சித் தொடரில் வெற்றிகரமாய் நடித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் என்று நிக்கோலஸ் பெயர்பெற்றார். ஆனால் அதைவிட பெரிய வெற்றி வரவிருந்தது.

நிக்கோல்ஸ் உண்மையில் “ஸ்டார் ட்ரெக்” தொடரின் முதல் சீசனுக்குப் பிறகு தனது நாடகப் பணிக்குத் திரும்புவதற்காக அதில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைச் சந்தித்தார். அவர் அதிலிருந்து வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தினார். முதன்முறையாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதையும் செய்யக்கூடிய, விண்வெளிக்குச் செல்லக்கூடிய அறிவார்ந்த மனிதர்களாக தொலைக்காட்சியில் பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். லெப்டினன்ட் உஹ_ரா என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக நிக்கோல்ஸ் அடைந்த அந்த பெரிய வெற்றியானது, கறுப்பின பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் என்னவாக மாறமுடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

யாக்கோபும் யோவானும் தேவனுடைய ராஜ்யத்தில் இரண்டு சிறந்த பதவிகள் வேண்டும் என்று விண்ணப்பித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது (மாற்கு 10:37). அந்த பதவிகள் அவர்களுடைய தனிப்பட்ட வெற்றிகளாய் இருந்திருக்கக்கூடும். இயேசு அவர்களின் வேண்டுகோளின் வேதனையான உண்மைகளை விளக்கியது மட்டுமல்லாமல் (வச. 38-40) அவர்களை உயர்ந்த இலக்குகளுக்கு அழைத்தார், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43). அவரைப் பின்பற்றுபவர்கள் தனிப்பட்ட வெற்றிகளை மட்டும் தேடவில்லை, ஆனால் அவரைப் போலவே, மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகிறவர்களாயிருப்பார்கள் (வச. 45).

நிச்செல் நிக்கோலஸ், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும் நோக்கத்துடன் அந்த ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரில் தொடர்ந்து பணியாற்றினார். நாமும் தனிப்பட்ட வெற்றியில் மட்டும் திருப்தி அடையாமல், நாம் பெறும் எந்த பதவியையும் அவருடைய நாம மகிமைக்காய் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் பயன்படுத்த பிரயாசப்படுவோம்.

கடவுள் மீது நிலைத்திருக்கும் பார்வை

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா டெய்ச்சி அணுசக்தி பேரழிவு, பூகம்பத்தால் ஏற்பட்டது. அதின் விளைவாய் பெரிய அளவு நச்சு வாயுக்கள் வெளியேற்றப்பட்டன. 150,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “புகுஷிமாவில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி விழுந்து, தொடர்ந்து விழுந்து, அப்பகுதியையே மூடியது போல் உள்ளது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். கதிர்வீச்சின் பாதிப்புகள் அங்கிருந்த பயிர்கள், இறைச்சி மற்றும் தாவரத்திலிருந்து வெகு தொலைவுக்கு பரவியிருந்தது. கதிர்வீச்சின் அந்த கொடிய விஷங்களை எதிர்த்துப் போராட, உள்ளூர்வாசிகள் கதிர்வீச்சை உறிஞ்சும் தாவரமான சூரியகாந்தியை நடவு செய்தனர். அவர்கள் இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர். இப்போது ஃபுகுஷிமாவில் மில்லியன் கணக்கான சூரியகாந்தி பூக்கள் பூத்துள்ளன.

சூரியகாந்தி, முழு உலகத்தையும் குணமாக்கும் கிறிஸ்துவின் செய்கையை பிரதிபலிக்கும் தேவனுடைய வடிவமைப்பு. இயேசு “நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசாயா 53:4). இந்த உலகத்தின் தீமை, வன்முறை மற்றும் நச்சுகள்  மற்றும் மனிதர்களாகிய நாம் நம்மை நாமே அழித்துக்கொள்ளும் அனைத்து வழிகளையும் அவர் தனக்குள் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசு சிலுவையில் தன்னுடைய மீறுதல்களுக்காய் அல்லாமல், “நம்முடைய மீறுதல்களினிமித்தம்” (வச. 5) அறையப்பட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததினால் நாம் பூரணமாக்கப்பட்டோம். அவருடைய தழும்புகளாலே நாம் குணமாகிறோம் (வச. 5). 

கிறிஸ்து தொலைவில் நின்று நம்மை மன்னிக்கிற தேவனில்லை, அவர் நமக்குள் இருக்கும் தீமைகளையும் பாவங்களையும் அவருக்குள் எடுத்துக்கொள்கிறார். இயேசு அனைத்தையும் உறிஞ்சிக்கொள்கிறார். மேலும் அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியாகவும் சுகமாக்குகிறார். 

இயேசுவில் நிலைத்திருத்தல்

சில வருடங்களுக்கு முன்பாக, நான் வேதாகமக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில், ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு சிற்றாலய ஆராதனை நடைபெறும். அப்போது ஒருமுறை எங்கள் ஆராதனையில் மூன்று ஆசிரியர்கள் “கர்த்தர் சிறந்தவர்” என்னும் ஆங்கிலப் பாடலை முழு ஆர்வத்துடன் பாடினது எனக்கு நினைவிருக்கிறது. தங்கள் தேவனிடத்தில் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தை அவர்களின் முகங்கள் பிரகாசித்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர், சரீரப் பிரகாரமாய் அவர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் இந்த விசுவாசமே அதை மேற்கொள்வதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாயிருந்தது. 

இன்று என்னுடைய ஆசிரியர்களின் விசுவாசத்தை பிரதிபலித்த அந்த பாடல் என்னுடைய கடினமான தருணங்களில் எனக்கும் உறுதுணையாய் நிற்கிறது என்று சொல்வேன். எனக்கு அது சில விசுவாச வீரர்களின் உந்தப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்களில் ஒன்று. எபிரெயர் 12:2-3இல் “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்த” (வச. 2) இயேசுவை நோக்கி பின்செல்ல இது நமக்கு நினைவுபடுத்துகிறது.  

போராட்டங்ளோ அல்லது உபத்திரவங்களோ, வாழ்க்கையின் எந்த சூழ்நிலையாயிருப்பினும், கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் கைக்கொண்ட அநேகரை நாம் உதாரணங்களாய் எடுத்துக்கொள்ளக்கூடும். இயேசுவும் நமக்கு முன்னிருந்த பரிசுத்தவான்கள் அனைவரும் எவ்விதம் விசுவாசத்தில் பயணம் செய்தனரோ அதேபோன்று நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் நாம் பொறுமையோடே ஓடக்கடவோம் (வச. 1). ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு... அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (வச. 3) என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். 

என்னுடைய ஆசிரியர்கள் தற்போது பரலோகத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்து, “விசுவாச வாழ்க்கை சவாலான ஒன்று, தொடர்ந்து ஓடு” என்று உற்சாகப்படுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். 

தேவனுடைய வேலையாட்கள்

மத்திய கிழக்கு தேசங்களில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த ரேசா ஒரு வேதாகமத்தை பரிசாய் பெற்றுக்கொண்டபோது, அவர் இயேசுவை விசுவாசிக்கத் துவங்கினார். “என்னை உம்முடைய வேலையாளாய் பயன்படுத்தும்” என்பதே அவருடைய முதல் ஜெபமாய் இருந்தது. அவர் முகாமை விட்டு வெளியேறிய பின்னர், அவர் எதிர்பாராத விதமாக ஒரு நிவாரண நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது தேவன் அவருடைய அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர் அறிந்த மற்றும் நேசித்த மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் முகாமுக்குத் திரும்பினார். அவர் விளையாட்டுக் கழகங்கள், மொழி வகுப்புகள், சட்ட ஆலோசனைகள் என்று “மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய அனைத்தையும்” ஏற்படுத்தினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இந்த திட்டங்களை அவர் பார்க்கிறார்.

அவரது வேதாகமத்தைப் படித்தபோது, ரேசா ஆதியாகமத்திலிருந்து யோசேப்பின் சம்பவத்தோடு தனக்கான தொடர்பை உணர்ந்தார். யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவர் கவனித்தார். தேவன் யோசேப்புடன் இருந்ததால், அவர் அவனுக்கு இரக்கம்பாராட்டி தயவு காண்பித்தார். சிறைச்சாலைக்காரன் யோசேப்பின் காரியங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், யோசேப்பு செய்த எல்லாவற்றையும் தேவன் வாய்க்கப்பண்ணினார் (ஆதியாகமம் 39:23). 

தேவன் நம்மோடு கூட இருப்பார் என்று வாக்களிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம், இடப்பெயர்வு, மனவேதனை அல்லது துக்கம் போன்ற சிறைச்சாலை அனுபவங்களுக்குள் நாம் கடந்துவந்தாலும், அவர் நம்மை விட்டு விலகமாட்டார் என்று நம்பலாம். முகாமில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய ரேசாவுக்கும், சிறைச்சாலையை கண்காணிக்க ஜோசப்புக்கும் தேவன் உதவியது போல, அவர் எப்போதும் நம்மோடே கூட இருக்கிறார்.