








டேவிட் வில்லிஸ், வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் கீச்சகத்தில் இவ்வாறு பதிவிட்டார். "ஹாய்@வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.
நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார். என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியைப் பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. "என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்" (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், "அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி" (வ.9) என்றார்.
"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் இடும் கூக்குரல்களைக் கேட்டு, "நான் இங்கே இருக்கிறேன்" என்று தேவன் கூறுவதால்.
ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது.
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12).
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20).
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்!
சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது.
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும்
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர்.
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).