வகை  |  odb

பகிர்தலின் மூலம் பரிவு

ஒரு இளம் ஊழியர், யாரேனும் ஒருவரை ஆசீர்வதிக்க ஒவ்வொரு நாளும் தேவன் தன்னை பயன்படுத்தவேண்டும் என்று காலையிலே ஜெபிப்பாராம். அவர் எதிர்பார்க்கும் அந்த ஆச்சரியமான தருணங்கள் அவ்வப்போது அவருக்கு சம்பவிக்கும். ஒரு நாள் அவர் வேலைசெய்யும் அலுவலகத்தில் இருந்த சக ஊழியரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவரிடம் இயேசுவைக் குறித்த விசாரித்தார். இவரும் அவரிடம் வெகு சாதாரணமாக அவருடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார். விவாதங்களோ, கோபங்களோ அவர்களுடைய பேச்சில் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலினால், அன்பான மற்றும் எளிமையான ஒரு சத்தியத்தைப் பகிரும் தருணமாய் அது இருந்தது என்று அந்த ஊழியர் சொன்னார். தேவனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இன்னொரு புதிய சிநேகிதர் அவருக்கு கிடைத்துவிட்டார். 

மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்த சொல்லுவதற்கு பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்ளுதல் அவசியம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8) என்று கட்டளையிடுகிறார். 

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலாத்தியர் 5:22-23). அந்த இளம் ஊழியர் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததுபோல, பேதுரு, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15) என்று சொல்லுகிறார். 

கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் பாடுகளை அனுபவிக்க நேரிடும்வேளையிலும், நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகள் வெளிப்படுத்தும். பின்பு நம்முடைய கிரியைகள் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும்.

தேவனுடைய கிருபை வரம்

நான் பணியாற்றிக்கொண்டிருந்த கல்லூரியில் எழுதும் வகுப்பிற்கான பேப்பர்களை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட தாள் என்னைக் கவர்ந்தது. மிகவும் நன்றாக எழுதப்பட்டிருந்தது! அது நன்றாக எழுதப்பட்டது என்பதை துரிதமாய் கண்டுபிடித்தேன். சற்று உன்னிப்பாய் அதை கவனத்துப் பார்த்துபோது, அது ஆன்லைனிலிருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க நேரிட்டது. 

மாணவியின் இந்த தந்திரமான தவறு கண்டுபிடிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் வகையில் நான் அவளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவள் இந்தத் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்னையே பெறுகிறாள். ஆனால் அவள் இன்னொரு ஒழுங்கான தாளை எழுதமுடியும். அதற்கு அவள், “நான் அவமானமாய் உணர்கிறேன், மிகவும் வருந்துகிறேன். தகுதியற்ற எனக்கு நீங்கள் காட்டும் கிருபைக்காய் நன்றி" என்று பதில் அனுப்பியிருந்தாள். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் இயேசுவின் கிருபையைப் பெற்றே ஜீவிக்கிறோம், அப்படியிருக்கும்போது உன் மேல் கிருபை காண்பிக்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்” என்று அவளுக்கு நான் பதிலளித்தேன்.

தேவனுடைய கிருபை நம் வாழ்க்கையை மேம்படுத்தவும், நம் தவறுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கவும் பல வழிகள் உள்ளன. அது இரட்சிப்பை அளிக்கிறது என்று பேதுரு கூறுகிறார். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே... நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோம்” (அப்போஸ்தலர் 15:11). அது பாவம் நம்மை மேற்கொள்ளாதிருக்கும்படி செய்கிறது என்று பவுல் சொல்லுகிறார்: “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14). பேதுரு, கிருபை நம்மை உதவிசெய்யத் தூண்டுகிறது என்கிறார்: “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்” (1 பேதுரு 4:10). 

கிருபை. தேவனால் இலவசமாகக் கொடுக்கப்பட்டது (எபேசியர் 4:7). மற்றவர்களை நேசிக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்த வரத்தைப் பயன்படுத்துவோம்.

புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகள்

சமையலறையில் நின்றுகொண்டிருந்த என் மகள், “அம்மா, தேனில் ஒரு ஈ இருக்கிறது!” என்றாள். “வினிகரை விட தேனில் எப்பொழுதும் அதிக ஈக்களை நீ கண்டெடுப்பாய்” என்ற வழக்கமான பழமொழியைச் சொல்லி நான் அவளை கேலி செய்தேன். நான் தேனில் ஒரு ஈயை காண்பது இதுவே முதல்முறை என்றாலும், ஞானத்தைக் கற்றுத்தரும் நோக்கத்தோடு இந்த பழமொழியை மேற்கோள் காண்பித்தேன். அதின் நியதி என்னவென்றால், கசப்பான அணுகுமுறையை விட அன்பான கோரிக்கைகள் மற்றவர்களை எளிமையாய் வசப்படச் செய்யும். 

நீதிமொழிகள் புத்தகம் தேவனுடைய ஆவியால் ஈர்க்கப்பட்ட ஞானமான பழமொழிகள் மற்றும் சொற்களின் தொகுப்பை நமக்கு வழங்குகிறது. இந்த வெளிப்படுத்தப்பட்ட வசனங்கள் நம்மை வழிநடத்தவும், தேவனை கனப்படுத்தும் விதங்களில் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய முக்கியமான உண்மைகளை கற்பிக்கவும் உதவுகின்றன. பல பழமொழிகள், நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தை உள்ளடக்கி, ஒருவரோடு ஒருவருக்கு இருக்கவேண்டிய உறவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. 

சாலெமோன் ராஜாவின் பழமொழி தொகுப்பின் ஒரு பகுதியில், அண்டை வீட்டாருக்கு எதிராகப் பொய்யாகப் பேசுவதால் ஏற்படும் தீமைக்கு எதிராக அவர் எச்சரிப்பை பதிவுசெய்கிறார் (நீதிமொழிகள் 25:18). “புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்” (வச. 23) என்று ஆலோசனை கூறுகிறார். தொடர்ந்த சண்டையிட்டுக்கொண்டேயிருப்பதினால் ஏற்படும் விளைவுகளையும் சாலெமோன் தொடர்ந்து பதிவிடுகிறார் (வச. 24). நன்மையை அறிவிக்கும் நம்முடைய வார்த்தைகள் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரக்கூடியது என்று ராஜா வலியுறுத்துகிறார் (வச. 25).

இந்த சத்தியங்களைப் பிரயோகிக்க நாம் முற்படுகையில், நம்முடைய நாவிலிருந்து “திவ்ய வாக்கு” பிறக்கக்கூடும் (16:10). அவரிடத்திலிருந்து ஊக்கத்தைப் பெறும்போது, நமது வார்த்தைகள் இனிமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

இனி பாரபட்சம் இல்லை

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலி லேண்ட்ஸ்மேன் நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் ஓபரா ஆர்கெஸ்ட்ரா என்னும் இசைக்குழுவில் முக்கிய டிரம்பெட் வாசிப்பாளர் பாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். அவளை தேர்வுசெய்த நீதிபதி குழுவினரின் பாரபட்சங்களை தவிர்ப்பதற்காக, தேர்வானது, முகத்தை மறைத்து திரைமறைவில் நடைபெற்றது. லேண்ட்ஸ்மேன் தனது தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு போட்டியில் வெற்றிபெற்றார். ஆனால் அவள் திரைக்குப் பின்னால் இருந்து வெளியேறியதும், சில ஆண் நீதிபதிகள் அறையின் பின்புறம் சென்று அவளைப் புறக்கணித்தனர். அவர்கள் வேறு யாரையோ தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரவேலர்கள் ஒரு ராஜாவைக் கேட்டபோது, மக்களின் விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து, மற்ற தேசங்களுக்கு இருப்பதுபோலவே ஒரு ராஜாவை ஏற்படுத்தினார் (1 சாமுவேல் 8:5; 9:2). ஆனால் சவுலின் ஆட்சி கீழ்படியாமையினாலும் உண்மையற்ற தன்மையினாலும் அடையாளப்படுத்தப்பட்டதால், ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய தேவன் சாமுவேலை பெத்லகேமுக்கு அனுப்பினார் (16:1-13). சாமுவேல் மூத்த மகனான எலியாப்பைப் பார்த்தபோது,அவன் சரீரப்பிரகாரமாக திடகாத்திரமான இளைஞனாயிருந்ததினால் அவனை ராஜாவாக ஏற்படுத்த தீர்மானித்தார். ஆனால் தேவன் சாமுவேலின் தீர்மானத்தை விமர்சித்து, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை வழிநடத்த தாவீதைத் தேர்ந்தெடுத்தார் (வச. 12).

மக்களின் திறன் மற்றும் அவரது நோக்கங்களுக்கான பொருத்தத்தை மதிப்பிடும்போது, தேவன் அவர்களது சுபாவங்கள், சித்தம் மற்றும் எண்ணங்களைப் பார்க்கிறார். உலகத்தையும் மக்களையும் அவர் பார்ப்பது போல் பார்க்க அவர் நம்மை அழைக்கிறார். தேவன் மக்களின் வெளிப்புற தோற்றங்களையும் அங்கீகாரங்களையும் பார்;க்கிறவரல்ல, அவர் இருதயத்தைப் பார்க்கிறவர்.

விசித்திரமான இடங்கள்

தேவனே, ஏன் இப்படி நடக்கிறது? இது உண்மையில் எங்களைக் குறித்த உம்முடைய சித்தமா?

ஒரு கணவனாகவும், சிறு குழந்தைகளின் அப்பாவாகவும், தீவிரமான புற்றுநோய் கண்டறிதலுடன் நான் மல்யுத்தம் செய்தபோது, இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக சிறுபிள்ளைகளை ஆண்டவருக்குள் வழிநடத்தும் ஒரு கிறிஸ்தவ மிஷன் குழுவோடு சேர்ந்து நாங்கள் குடும்பமாய் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். தேவனுக்காய் கனிகொடுக்கிற குடும்பமாய் நாங்கள் இருந்தோம். அது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை?  

எஸ்தர் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்டு விசித்திரமான ஒரு தேசத்திற்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டதும், தேவ சமூகத்தில் கேள்விகளையும் ஜெபங்களையும் முன்வைத்திருந்திருக்கக்கூடும் (எஸ்தர் 2:8). அவள் அனாதையான பிறகு அவளுடைய உறவினர் மொர்தெகாய் அவளை தனது சொந்த மகளாக வளர்த்தார் (வச. 7). ஆனால் பின்னர் அவள் ஒரு ராஜாவின் அரண்மனையில் வைக்கப்பட்டாள். இறுதியில் அவனுடைய ராணியாக பணியாற்ற உயர்த்தப்பட்டாள் (வச. 17). மொர்தெகாய் எஸ்தருக்கு என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கவலையுற்றான் (வச. 11). ஆனால் காலப்போக்கில், தேவன் அவளை இப்படிப்பட்ட காலத்துக்கு” (4:14) உதவியாயிருக்கும்படிக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை இருவரும் உணர்ந்தனர். இது அவர்களுடைய சொந்த ஜனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு ஏதுவாயிருந்தது (அதி. 7-8).

தேவன் தனது நேர்த்தியான திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்தரை ஒரு விசித்திரமான இடத்தில் வைத்தார் என்பது தெளிவாகிறது. என்னிடமும் அவ்வாறே செய்தார். புற்றுநோயுடன் ஒரு நீண்ட போரை நான் சகித்திருந்ததால், பல நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் என் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் உங்களை எந்த விசித்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்? அவனை நம்புங்கள். அவர் நல்லவர், அவருடைய திட்டங்களும் நன்மையானவைகளே (ரோமர் 11:33-36).