ஒரு இளம் ஊழியர், யாரேனும் ஒருவரை ஆசீர்வதிக்க ஒவ்வொரு நாளும் தேவன் தன்னை பயன்படுத்தவேண்டும் என்று காலையிலே ஜெபிப்பாராம். அவர் எதிர்பார்க்கும் அந்த ஆச்சரியமான தருணங்கள் அவ்வப்போது அவருக்கு சம்பவிக்கும். ஒரு நாள் அவர் வேலைசெய்யும் அலுவலகத்தில் இருந்த சக ஊழியரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவரிடம் இயேசுவைக் குறித்த விசாரித்தார். இவரும் அவரிடம் வெகு சாதாரணமாக அவருடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார். விவாதங்களோ, கோபங்களோ அவர்களுடைய பேச்சில் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலினால், அன்பான மற்றும் எளிமையான ஒரு சத்தியத்தைப் பகிரும் தருணமாய் அது இருந்தது என்று அந்த ஊழியர் சொன்னார். தேவனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இன்னொரு புதிய சிநேகிதர் அவருக்கு கிடைத்துவிட்டார். 

மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்த சொல்லுவதற்கு பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்ளுதல் அவசியம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8) என்று கட்டளையிடுகிறார். 

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலாத்தியர் 5:22-23). அந்த இளம் ஊழியர் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததுபோல, பேதுரு, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15) என்று சொல்லுகிறார். 

கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் பாடுகளை அனுபவிக்க நேரிடும்வேளையிலும், நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகள் வெளிப்படுத்தும். பின்பு நம்முடைய கிரியைகள் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும்.