மூடப்படாத பாவங்கள்
ஒரு திருடன் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையை உடைத்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கண்ணாடியை உடைத்து, தொலைபேசிகள் மற்றும் பலவற்றை திருட ஆரம்பித்தான். அட்டைப் பெட்டியால் தலையை மூடிக்கொண்டு கண்காணிப்பு கேமராவில் இருந்து தனது அடையாளத்தை மறைக்க முயன்றான். ஆனால் திருட்டின் போது, பெட்டி சிறிது நேரம் சாய்ந்து, அவனது முகத்தை வெளிப்படுத்திக் காண்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, கடையின் உரிமையாளர் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து, காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கொள்ளையனை அருகிலுள்ள இன்னொரு கடைக்கு வெளியே கைது செய்தனர். மறைந்திருக்கும் ஒவ்வொரு பாவமும் ஒரு நாள் வெளிப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
நம் பாவங்களை மறைக்க முயற்சிப்பது மனித இயல்பு. ஆனால் பிரசங்கியில், நாம் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் மறைவான ஒவ்வொன்றும் அவருடைய நீதியான பார்வைக்கும் நியாயமான தீர்ப்புக்கும் முன் கொண்டுவரப்படும் (12:14). பிரசங்கி, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (வச. 13) என்று சொல்லுகிறார். பத்துக் கட்டளைகள் கண்டித்த மறைவான விஷயங்கள் கூட (லேவியராகமம் 4:13) அவருடைய மதிப்பீட்டிலிருந்து தப்ப முடியாது. நன்மையோ தீமையோ, ஒவ்வொரு செயலையும் அவர் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வருவார். ஆனால், அவருடைய கிருபையின் காரணமாக, இயேசுவினால் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பையும், நமக்கான அவருடைய தியாகத்தையும் நாம் காணலாம் (எபேசியர் 2:4-5).
அவருடைய கட்டளைகளை நாம் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும்போது, அது அவரைப் பற்றிய பயபக்திக்கும், பொருந்தக்கூடிய வாழ்க்கை முறைக்கும் வழிவகுக்கும். நம்முடைய பாவங்களை அவரிடம் கொண்டுபோய், அவருடைய அன்பான, மன்னிக்கும் இதயத்தை புதிதாக அனுபவிப்போம்.

பரலோக மிகுதி
எட்டு வாழைப்பழங்கள் இருக்கும் என்று நினைத்தேன். அதற்குப் பதிலாக, எனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மளிகைப் பைகளைத் திறந்தபோது, இருபது வாழைப்பழங்களைக் கண்டுபிடித்தேன்! நான் இங்கிலாந்துக்குச் சென்றதன் அர்த்தம், மளிகைப் பொருட்களை பவுண்டுகளில் ஆர்டர் செய்வதிலிருந்து கிலோகிராமில் அவற்றைக் கோருவதற்கும் மாறினேன் என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். மூன்று பவுண்டுகளுக்குப் பதிலாக, மூன்று கிலோகிராம் (கிட்டத்தட்ட ஏழு பவுண்டுகள்!) வாழைப்பழங்களை ஆர்டர் செய்திருந்தேன்.
தாராளமாய் பழங்கள் இருந்ததினால் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொருட்டு நான் வாழைப்பழ ரொட்டியை அதிகமாய் செய்தேன். அதற்காக நான் பழத்தை பிசைந்தபோது, எனது வாழ்க்கையின் மற்ற பகுதிகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அங்கு நான் எதிர்பாராத மிகுதியை அனுபவித்தேன். மேலும் ஒவ்வொரு பாதையிலும் தேவனை நான் சாட்சியிட்டேன்.
பவுல் தனது வாழ்க்கையில் தேவனுடைய மிகுதியைப் பற்றி பிரதிபலிக்கும் இதேபோன்ற அனுபவத்தை பெற்றதாக தோன்றுகிறது. தீமோத்தேயுவுக்கு எழுதிய தனது முதல் கடிதத்தில், பவுல் இயேசுவுக்கு முன்பாக தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தான் “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன்” என்றும் தன்னை “பிரதான பாவி” என்றும் விவரிக்கிறார் (1 தீமோத்தேயு 1:13,16). பவுலின் உடைந்த நிலையில், தேவன் கிருபையையும், விசுவாசத்தையும், அன்பையும் தாராளமாக ஊற்றினார் (வச. 14). அவருடைய வாழ்வில் உள்ள அனைத்து மிகுதிகளையும் விவரித்த பிறகு, பவுல் அப்போஸ்தலரால் தேவனுக்கு துதி செலுத்தாமல் இருக்க முடியவில்லை. தேவனுக்கே “கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” என்று அறிவிக்கிறார் (வச. 17).
பவுலைப் போலவே, பாவத்திலிருந்து மீட்பதற்கான இயேசுவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டபோது, நாம் அனைவரும் ஏராளமான கிருபையைப் பெற்றோம் (வச. 15). விளைந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பற்றி சிந்திக்க நாம் இடைநிறுத்தும்போது, அபரிவிதமாய் நம்மை ஆசீர்வதிக்கும் நமது தேவனுக்கு நன்றியுள்ள துதியில் பவுலுடன் இணைவதைக் காண்போம்.

என் இருதயத்தை கண்டுபிடியும் என் தேவனே
உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, சிறிதளவு பாதிப்புள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. ஒரு வருடத்தில், இந்த முன்முயற்சியானது 850 டன்களுக்கும் (778,000 கிலோ) விளைபொருட்களை சேமித்தது. இது அழகியல் தரநிலைகளை பூர்த்தி செய்யாததால் தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும். வெளிப்புற தோற்றங்கள்-வடுக்கள் மற்றும் நகைச்சுவையான வடிவங்கள் - சுவை மற்றும் ஊட்டச்சத்து அவைகளின் மதிப்பைப் பாதிக்காது என்பதை கடைக்காரர்கள் விரைவில் அறிந்து கொண்டனர். வெளிப்புற தோற்றங்கள் உள்ளே இருப்பதை எப்போதும் தீர்மானிப்பதில்லை.
இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய தேவனால் அனுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி இதேபோன்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார் (1 சாமுவேல் 16:1). ஈசாயின் மூத்த மகனான எலியாபைப் பார்த்தபோது, அவனே தெரிந்துகொள்ளப்பட்டவன் என்று சாமுவேல் நினைத்தார். ஆனால் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (வச. 7). தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த (வச. 11), ஈசாயின் எட்டு மகன்களில், இளையவரான தாவீதை அடுத்த ராஜாவாக தேவன் தேர்ந்தெடுத்தார்.
நாம் எந்த பள்ளியில் படித்தோம், என்ன சம்பாதிக்கிறோம் அல்லது எவ்வளவு தன்னார்வத் தொண்டு செய்கிறோம் என்பதை விட, தேவன் நம் மீது கரிசணையுள்ளவராயிருக்கிறார். சுயநலம் மற்றும் தீய எண்ணங்களிலிருந்து தங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். ஏனெனில் “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மாற்கு 7:20). சாமுவேல் வெளித்தோற்றத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்று கற்றுக்கொண்டது போலவே, தேவனுடைய உதவியோடு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் நம்முடைய இருதயங்களை, நம் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஆராய்வோமாக.

நான் சேர்ந்தவனா?
நடிகை சாலி ஃபீல்ட், இறுதியாக நாம் அனைவரும் விரும்புவதை உணர்ந்தார். 1985இல் அவர் இரண்டாவது ஆஸ்கார் விருதை வென்றபோது, அவர் தனது ஏற்பு உரையில், “உங்கள் மரியாதையைப் பெற நான் எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்பினேன். முதல் முறையாக நான் அதை உணரவில்லை. ஆனால் இந்த முறை நான் அதை உணர்கிறேன். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது, இப்போதே, அதை நான் நம்புகிறேன்” என்று சொன்னார்.
ஒரு எத்தியோப்பியன் மந்திரியும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து வியப்படைந்தார். ஒரு புறஜாதியும், அண்ணகருமான அவர், ஆலயத்தின் உள் பிரகாரங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார் (எபேசியர் 2:11-12; உபாகமம் 23:1 ஐப் பார்க்கவும்). ஆனாலும் சேர்த்துக்கொள்ளப்பட ஆசைப்பட்டார். அவர் எருசலேமுக்கு மற்றொரு திருப்தியற்ற யாத்திரையிலிருந்து திரும்பி வருவதை பிலிப்பு கண்டார் (அப்போஸ்தலர் 8:27).
எத்தியோப்பிய மனிதன் ஏசாயா புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். அதில் தேவனுடைய உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர், “நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்... இடத்தையும்... என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்” (ஏசாயா 56:4-5) என்று சொல்லுகிறார். இது எப்படி சாத்தியமாகும்? அப்போது பிலிப்பு, “இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.” அதற்கு அந்த மனிதன், “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்” (அப்போஸ்தலர் 8:35-36).
அவன், நான் இதற்குள் அனுமதிக்கப்படுவேனா? நான் இதற்கு பாத்திரனா? என்று கேட்கிறான். அவனுக்கு இருந்த தடைகள் எல்லாவற்றையும் இயேசு அகற்றிவிட்டார் என்பதற்கு அடையாளமாய் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார் (எபேசியர் 2:14). பாவத்திலிருந்து விலகி, தம்மீது நம்பிக்கை வைக்கும் அனைவரையும் இயேசு அரவணைத்து, ஒன்றிணைக்கிறார். அந்த மனிதன் “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (அப்போஸ்தலர் 8:39). அவர் இறுதியாகவும் முழுமையாகவும் தேவனண்டை சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இயேசுவுக்கு ஊழியம் செய்தல்
1800 களின் முற்பகுதியில், எலிசபெத் ஃப்ரை, லண்டன் பெண்கள் சிறையில் இருந்த நிலைமைகளைக் கண்டு திகைத்தார். பெண்களும் அவர்களது குழந்தைகளும் ஒன்று கூடி குளிர்ந்த கல் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு படுக்கை வழங்கப்படவில்லை என்றாலும், ஒரு குழாய் மூலம் அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர் பிரயாசப்பட்டு, அவர்களுக்கு உடைகளை வழங்குவதின் மூலமும், பிள்ளைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியை திறப்பதின் மூலமும், வேதாகமத்தை அவர்களுக்கு போதிப்பதின் மூலமும் அங்ஙனம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் அவர்களுடன் இருக்கும்போதும், அங்கிருந்த அனைவரும் அவரை நம்பிக்கையின் ஆதாரமாய் பார்த்தனர்.
தேவையில் உள்ளவர்களுக்கு நன்மை செய்யும்படியான இயேசுவின் போதனையை அவள் செயல்படுது;தினாள். உதாரணத்திற்கு, இயேசு ஒலிவ மலையில் பிரசங்கிக்கும்போது, உலகத்தின் முடிவைக் குறித்து பல உவமைகளை போதித்தார். அதில் குறிப்பாய், “நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்” (மத்தேயு 25:46) என்று போதிக்கிறார். இந்த சம்பவத்தில் ராஜா, “பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்” (வச. 35-36) என்று சொல்லுகிறார். அவர்கள் அவ்வாறு செய்வதை நினைவுபடுத்த முடியாதபோது, ராஜா பதிலளிக்கிறார்: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று அவர்களுக்கு இயேசு வலியுறுத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் உதவியால் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, இயேசுவைச் சேவிப்பது என்ன ஆச்சரியம்! எலிசபெத் ஃப்ரையின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம், மேலும் வீட்டில் இருந்தபடியே பரிந்துபேசுதல் அல்லது ஊக்கமளிக்கும் செய்திகளை அனுப்புதல் போன்றவற்றின் மூலம் சேவை செய்யலாம். நம்முடைய ஆவிக்குரிய வரங்களையும் திறமைகளையும் மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்தும்போது, அவரை நேசிக்க இயேசு நம்மை வரவேற்கிறார்.