நடிகை சாலி ஃபீல்ட், இறுதியாக நாம் அனைவரும் விரும்புவதை உணர்ந்தார். 1985இல் அவர் இரண்டாவது ஆஸ்கார் விருதை வென்றபோது, அவர் தனது ஏற்பு உரையில், “உங்கள் மரியாதையைப் பெற நான் எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்பினேன். முதல் முறையாக நான் அதை உணரவில்லை. ஆனால் இந்த முறை நான் அதை உணர்கிறேன். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது, இப்போதே, அதை நான் நம்புகிறேன்” என்று சொன்னார். 

ஒரு எத்தியோப்பியன் மந்திரியும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து வியப்படைந்தார். ஒரு புறஜாதியும், அண்ணகருமான அவர், ஆலயத்தின் உள் பிரகாரங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார் (எபேசியர் 2:11-12; உபாகமம் 23:1 ஐப் பார்க்கவும்). ஆனாலும் சேர்த்துக்கொள்ளப்பட ஆசைப்பட்டார். அவர் எருசலேமுக்கு மற்றொரு திருப்தியற்ற யாத்திரையிலிருந்து திரும்பி வருவதை பிலிப்பு கண்டார் (அப்போஸ்தலர் 8:27).

எத்தியோப்பிய மனிதன் ஏசாயா புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். அதில் தேவனுடைய உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர், “நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்… இடத்தையும்… என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்” (ஏசாயா 56:4-5) என்று சொல்லுகிறார். இது எப்படி சாத்தியமாகும்? அப்போது பிலிப்பு, “இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.” அதற்கு அந்த மனிதன், “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்” (அப்போஸ்தலர் 8:35-36).

அவன், நான் இதற்குள் அனுமதிக்கப்படுவேனா? நான் இதற்கு பாத்திரனா? என்று கேட்கிறான். அவனுக்கு இருந்த தடைகள் எல்லாவற்றையும் இயேசு அகற்றிவிட்டார் என்பதற்கு அடையாளமாய் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார் (எபேசியர் 2:14). பாவத்திலிருந்து விலகி, தம்மீது நம்பிக்கை வைக்கும் அனைவரையும் இயேசு அரவணைத்து, ஒன்றிணைக்கிறார். அந்த மனிதன் “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (அப்போஸ்தலர் 8:39). அவர் இறுதியாகவும் முழுமையாகவும் தேவனண்டை சேர்த்துக்கொள்ளப்பட்டார்.