நாம் தேவனைத் துதிப்போம்!
எஸ்தரின் அலைபேசியின் அலாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் 3:16 க்கு அடிக்கின்றது, அது அவளுடைய துதி இடைவெளி. தேவன் செய்த நன்மைகளுக்காக அவள் நன்றி கூறுகின்றாள். அவள் நாள் முழுவதும் தேவனோடு பேசிக் கொண்டே இருந்தாலும், இந்த இடைவெளியை அவள் விரும்புகின்றாள், ஏனெனில் தேவனோடு அவள் கொண்டுள்ள உறவைக் கொண்டாட இது உதவியாய் இருக்கின்றது.
அவளுடைய இந்த மகிழ்ச்சியான பக்தியினால் ஈர்க்கப்பட்ட நானும், ஒவ்வொரு நாளும், ஒரு திட்டமான நேரத்தை ஒதுக்கி, கிறிஸ்து நமக்காக சிலுவையில் நிறைவேற்றிய தியாகத்தை எண்ணி நன்றிகூறவும், இன்னமும் இரட்சிக்கப் படாதவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி திட்டமிட்டேன். கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அனுதினமும் அவரைத் துதிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்று அதிசயித்தேன்.
அவரை ஆராதிக்கும் ஓசையின் அழகிய அலைகள் நகர்ந்து, பூமியின் கடைமுனை மட்டும் செல்கின்றது என்பதாக சங்கீதம் 67 சொல்கின்றது. சங்கீதக்காரன் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சுகின்றார், எல்லா ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகத்துவமான நாமத்தை விளங்கப்பண்ணும்படி தெரிவிக்கின்றார் (வச. 1-2). அவர், “தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக” (வச. 3) என்று பாடுகின்றார். சர்வ வல்லவரின் அரசாட்சியையும், அவருடைய உண்மையான வழி நடத்துதலையும் அவர் கொண்டாடுகின்றார் (வச. 4). தேவனுடைய மிகப் பெரிய அன்பிற்கும், அளவற்ற ஆசிர்வாதங்களுக்கும் சாட்சியாக இருந்து, தேவனுடைய பிள்ளைகளை அவரைத் துதிக்கும்படி வழி நடத்துகின்றார் (வச. 5-6).
அவருக்கு அன்பான பிள்ளைகளின் மீது, தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராய் இருப்பது, நம்மையும் அவரை போற்றச் செய்கின்றது. நாம் அப்படிச் செய்யும் போது, மற்றவர்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும், அவருக்கு மரியாதை செலுத்தவும், அவரைப் பின்பற்றவும் அவரே தேவனென்று ஆராதிக்கவும் நம்மோடு சேர்ந்து கொள்வர்.
எல்லாவற்றையும் விட விலையேறப்பெற்றவர் தேவன்
கடந்த காலத்தில், இயேசுவின் விசுவாசிகளால் காயப்படுத்தப்பட்ட என்னுடைய தாயார், நான் என்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தபோது, கோபமுற்றார், “ஆகவே நீ இப்பொழுது என்னை நியாயம் தீர்ப்பாயோ? அது உன்னால் முடியாது” என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார், ஓர் ஆண்டு முழுவதும் அவர் என்னிடம் பேசவே இல்லை. நான் மிகவும் வருந்தினேன், ஆனால் நான் தேவனோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டேன், அது எல்லா உறவுகளைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருந்தது. அவர் என்னுடைய அழைப்பை மறுக்கும் ஒவ்வொரு வேளையும் நான் தேவனிடம் ஜெபிப்பேன், நான் அவர்கள் மீது அன்பாயிருக்க எனக்கு உதவியருளும் என்று கேட்டேன்.
இறுதியில் நாங்கள் சமாதானமானோம். சில மாதங்களுக்குப் பின்னர் அவர், “நீ மாறிவிட்டாய், நான் உன்னிடமிருந்து இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார். சீக்கிரத்தில் அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டார், எஞ்சிய நாட்களில் தேவனையும் பிறரையும் நேசித்து வாழ்ந்தார்.
இயேசுவிடம் ஓடிச் சென்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஒரு மனிதன், துக்கத்தோடே திரும்பிச் சென்றான், ஏனெனில் அவன் தன்னுடைய ஆஸ்தியை விட்டு விட மனதில்லாதிருந்தான் (மாற். 10:17-22), அதேப் போன்று நானும் அவரைப் பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டு விட முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.
தேவனை விட, நாம் அதிகமாக நேசிக்கும் மக்களையும் பொருட்களையும் நம்மால் எளிதில் விட்டு விட முடியாது (வ.23-25). ஆனால் நாம் இவ்வுலகில் விட்டு விடுபவைகளின் அல்லது இழப்பவைகளின் மதிப்பு இயேசுவோடு நாம் அநுபவிக்கப்போகும் நித்திய வாழ்வை விட நிச்சயமாக அதிகமில்லை. நம் மீது அன்புள்ள தேவன், எல்லா ஜனங்களையும் மீட்பதற்காக தன்னையே பலியாகத் தந்தார், அவர் நம்மை தம்முடைய சமாதானத்தினால் மூடிக்கொள்கின்றார், தம்முடைய விலையேறப் பெற்ற, மாறாத அன்பினால் நம்மைத் தாங்குகின்றார்.
மீண்டும்…. ஜெபிக்கும் நேரம்
என் வீட்டின் அருகில் காரை ஓட்டிச் சென்ற போது, எங்களுக்கருகில் வசிக்கும் மிரியாம், மற்றும் அவளுடைய சிறுபெண் குழந்தை எலிசபெத் ஆகியோருக்குக் கையசைத்தேன். கடந்த ஆண்டுகளில், எங்களுடைய சிறிய உரையாடல்கள்- “சில நிமிடங்கள்” என்பதையும் தாண்டி தொடர்ந்து கொண்டேயிருப்பதையும், ஒரு ஜெபக் கூடுகையையும் சமாளித்துக் கொள்ள எலிசபெத் பழகிக் கொண்டாள். நானும் அவளுடைய தாயாரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவள், எங்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் ஏறி, கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள், சற்று நேரத்தில் அந்தக் கிளையிலிருந்து குதித்து, எங்களிடம் ஓடி வருவாள். எங்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு, சிரித்துக் கொண்டே, “இது மீண்டும் ஜெபிக்கும் நேரம்” என்ற பாடலைப் பாடுவாள். நண்பர்களுக்கிடையே ஜெபம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்டதைப் போல, அந்தச் சிறு வயதிலேயே செயல் படுவாள்.
“கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபே. 6:10) என்று விசுவாசிகளை உற்சாகப் படுத்திய அப்போஸ்தலனாகிய பவுல், இடைவிடாத ஜெபத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். ஆவிக்குரிய வாழ்வில் தேவனோடு நடக்கும் போது, அவருடைய பிள்ளைகளுக்குத் தேவையான சர்வாயுதவர்க்கத்தைக் குறித்து விளக்குகின்றார். இவை பாதுகாப்பையும், பகுத்தறியும் ஞானத்தையும், அவருடைய உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும் நமக்குத் தருமென குறிப்பிடுகின்றார் (வச. 11-17). நமக்கு வாழ்வு தரும் ஈவுகளைத் தரும் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்தால் மட்டுமே தேவன் தரும் பெலத்தில் நாம் வளரமுடியும் என அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகின்றார் (வச. 18-20).
நம்முடைய ஜெபங்களில் நாம் கதறினாலும் சரி, மனதுக்குள்ளே புலம்பினாலும் சரி, தேவன் அவற்றைக் கேட்கிறார், நம்மீது கரிசனை கொண்டுள்ளார். அவர் தம்முடைய வல்லமையினால், நம்மை பெலப்படுத்த ஆயத்தமாயிருக்கிறார் எனவே, அவர் நம்மை மீண்டும், மீண்டும், மீண்டும் ஜெபிக்க அழைக்கின்றார்.
இருவர் கூடியிருப்பது நல்லது
1997 ஆம் ஆண்டு, ஹவாயில் நடைபெற்ற அயர்ன் மன் டிரையத்லான் போட்டியில், (மிதிவண்டி ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு) இரண்டு பெண்கள், தங்கள் பாதங்களால் நிற்கக் கூட பெலனற்றவர்களாய், தடுமாறியபடியே எல்லைக் கோட்டை நெருங்கினர். மிகவும் சோர்வடைந்த இந்த ஓட்ட வீரர்கள், தங்களின் நிலையற்ற கால்களோடு, விடாமுயற்சியோடு ஓடிக்கொண்டிருந்தபோது, சியான் வெல்ச் தடுமாறி வென்டி இன்கிரஹாம் மீது மோதிக் கொண்டாள், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். போராடி எழுந்திருந்த அவர்கள், இலக்கினை அடைய இன்னும் இருபது மீட்டர் தொலைவே இருந்த நிலையில், மீண்டும் முன்புறம் விழுந்தனர், வென்டி தவழ்ந்து செல்ல ஆரம்பித்த போது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவளுடைய போட்டியாளரும் அவளைப் பின் தொடர, பார்வையாளர்கள் சத்தமாக அவர்களை உற்சாகப்படுத்தினர். வென்டி நான்காவதாக எல்லைக் கோட்டைத் தாண்டி, அவளுடைய ஆதரவாளர்களின் கரங்களில் வீழ்ந்தாள், அப்பொழுது அவள் தன்னோடு தடுமாறிய சகோதரிக்கு கரத்தை நீட்டினாள், சியான் முன்னோக்கி வந்து தன்னுடைய தளர்ந்த கரங்களை நீட்டி, வென்டியின் கரங்களைப் பற்றியவாறே எல்லைக் கோட்டைத் தொட்டாள், அவள் ஐந்தாவதாக ஓட்டத்தை முடித்தபோது, கூட்டத்தினர் ஆரவாரத்தோடு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இந்த ஜோடி, 140 மைல் தூரத்தை கடந்து முடித்தக் காட்சி அநேகரைக் கவர்ந்தது. வலுவிழந்தபோதும் விடாமுயற்சியோடு இருவர் இணைந்து போராடிய அந்தக் காட்சி என் மனதை விட்டு அகலவேயில்லை, பிரசங்கி 4:9-11ல் கூறப்பட்டுள்ள வாழ்விற்கு புத்துணர்ச்சியூட்டும் உண்மையை இது உறுதிப் படுத்துகின்றது.
நம்முடைய வாழ்விலும் நமக்கு ஒரு உதவியாளர் தேவை என்பதை நாம் ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை (வ.9). நம்முடைய தேவைகளை, எல்லாம் அறிந்த தேவனிடமிருந்து நாம் மறைத்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வேளையில் நாம் அனைவருமே உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கீழேவிழ நேரலாம். நாம் எழுந்திருக்க முயற்சிக்கும் போது, நாம் தனியாக இல்லை என்பது நமக்கு ஆறுதலைத் தரும். நம்முடைய அன்புத்தந்தை நமக்கு உதவிசெய்கின்றார், நாம் மற்றவர்களுக்கும் உதவும் படி நம்மை பெலப்படுத்துகின்றார், அவர்களும், தாங்களும் தனியாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவர்.
வாழ்வு கடினமாகும் போது
உடல், மனம், உணர்வு அத்தனையிலும் சோர்வடைந்தவனாய் என்னுடைய சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்தேன். தேவனுடைய வழிநடத்துதலைத் தொடர்ந்து, எங்களுடைய குடும்பத்தோடு கலிபோர்னியாவிலிருந்து விஸ்கான்சின்னுக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் அங்கு வந்து சேர்ந்த போது, எங்களுடைய கார் பழுதடைந்ததால், இரண்டு மாதங்கள் கார் இல்லாமல் கஷ்டப்பட்டோம். இதனிடையே, என்னுடைய கணவனுக்கு முதுகில் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவரால் சிறிதளவே நடமாட முடிந்தது. எனக்குள்ள வலியும் அதிகமானதால், எங்களுடைய சாமான்களை அடுக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. எங்களுடைய பழைய வீட்டை விட்டு, இங்கு வந்த பின்பு அதிகமான பிரச்சனைகளை எதிர் நோக்கினோம். எங்களுடைய மூத்த நாயும் சுகவீனமானது. எங்களுடைய புதிய நாய் குட்டி, எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், அதிக ரோமமுள்ள நாய்க் குட்டியை வளர்ப்பதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக வேலையினால் கஷ்டப்பட்டோம். எனக்குள் கசப்பு ஏற்பட்டது. என்னுடைய வாழ்வு கரடுமுரடான பாதை வழியே செல்லும்போது, எப்படி என்னுடைய நம்பிக்கை அசைக்கப்படாமல் இருக்க முடியும்?
நான் ஜெபிக்க அமர்ந்த போது, சங்கீதக்காரன், தன்னுடைய சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், தேவனைத் துதிப்பதை எனக்குக் காட்டினார். தாவீது பாதிக்கப்பட்ட போதெல்லாம், தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் ஊற்றுகிறார், அவருடைய சமுகத்தில் அடைக்கலம் தேடுகிறார் (சங். 16:1). தேவனே அவருடைய தேவைகளெல்லாவற்றையும் தருபவர், பாதுகாப்பவர் (வச. 5-6) என்கின்றார். அவருக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரைத் துதிக்கிறார் (வச. 7). “நான் அசைக்கப்படுவதில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றார், ஏனெனில் அவருடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கியிருக்கிறது (வச. 8). ஆகையால் அவருடைய இருதயம் பூரித்தது, தேவனுடைய சமுகத்தின் பரிபூரண ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கிறார், அவருடைய மாம்சம் தேவனுடைய சமுகத்தில் நம்பிக்கையோடு தங்கியிருக்கும் (வச. 9-11).நாம் பெற்றுள்ள சமாதானம், தற்சமயம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல என்பதால் மகிழ்ச்சியடைவோம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுக்கு நாம் நன்றிகூறுவோம், அவருடைய பிரசன்னம் நம்முடைய உறுதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றது.
மிகப்பெரிய மர்மம்
இயேசுவின் பேரில் விசுவாசத்திற்குள் வருவதற்கு முன்பு, நான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் யாரென்று அறிய போராடினேன் தேவன் ஒருவரே பாவத்தை மன்னிக்கிறவர் என்று வேதாகமம் கூறுகின்றது. அப்படியிருக்க, எப்படி இயேசுவால் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும்? என்று நம்பத் தடுமாறினேன். ஜெ.ஐ.பாக்கர் எழுதிய “தேவனை அறிந்து கொள்ளல்” (Knowing God) என்ற புத்தகத்தைப் படித்த பின்பு தான், என்னுடைய போராட்டங்களில் நான் மட்டும் தனிமையாக இல்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். “நசரேயனாகிய இயேசு, மனிதனாகப் பிறந்த தேவன்………..அது உண்மை, ஆனால் அவர் மனிதனாக வாழ்ந்த போது, முழுவதும் தேவத்தன்மையில் தான் இருந்தார் என கூறும் தடுமாற்றமுள்ள கிறிஸ்தவர்களுக்கும்”, அவிசுவாசிகளுக்கும் அவர் எழுதுவது, இதுதான் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையான உண்மை.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று குறிப்பிடும் போது, அவர் இயேசுவை முற்றிலுமாக, பரிபூரணமான தேவன், படைப்பின் காரணர், பூமியிலும் வானத்திலுமுள்ள சகலத்தையும் தாங்குபவர், ஆனால் பூரண மனிதன் என்கின்றார் கொலோ.1:15-17). இந்த உண்மைதான், இயேசு கிறிஸ்துவின் சாவு மற்றும் உயிர்ப்பின் மூலம், அவர் நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்ததோடு, மனுக்குலம் முழுமையையும் மீட்டார் என்பதைக் காட்டுகின்றது. அனைவரும், அனைத்து படைப்புகளும் மீண்டும் தேவனோடு ஒப்புரவாகும் படிச் செய்தார் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது (வ.20-22).
இந்த வியத்தகு அன்பின் செயல் வெளிப்பட்ட நாளில் இருந்து, தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், குமாரனாகிய இயேசுவின் வாழ்வின் மூலமாகவும் எழுதப்பட்ட வேதவார்த்தையின் மூலம், பிதாவாகிய தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர் இம்மானுவேல்-
தேவன் நம்மோடிருக்கிறார். அல்லேலூயா!
ரகசிய விநியோகம்
அவளுடைய முன் கதவின் அருகில், ஒரு கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த அழகிய சிவப்பு ரோஜாக்களும், வெண்மை நிற ரோஜாக்களும் கலாவை வரவேற்றன. கடந்த ஏழு மாதங்களாக, ஒரு பெயர் அறிவிக்காத இயேசுவின் விசுவாசி, அருகிலுள்ள பூக்கடையிலிருந்து கலாவுக்கு அழகிய மலர் கொத்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும், இந்த பரிசோடு, ஊக்கம் தரும் வேதவார்த்தைகளும் எழுதப்பட்டு, “அன்புடன், இயேசு” என்று கையெழுத்திடப்பட்டு வரும்.
கலா இந்த ரகசிய விநியோகத்தைக் குறித்த படங்களை முகநூலில் பகிர்ந்துகொண்டாள். ஒரு தனி மனிதனின் இரக்கத்தைக் கொண்டாடவும், தேவன் அவள் மீது கொண்டுள்ள அன்பினை, அவருடைய மக்களின் மூலமாக வெளிப்படுத்துவதை உணர்ந்து கொள்ளவும், இம்மலர்கள் ஒரு வாய்ப்பளித்தன. தீராத வியாதியோடுள்ள போராட்டத்தின் மத்தியிலும் தேவன் மீது நம்பிக்கையோடுள்ள அவளுக்கு, இந்த வண்ண மலர்களும், கைப்பட எழுதப்பட்ட செய்தியும், தேவன் அவள் மீது கொண்டுள்ள இரக்கத்தையும், அன்பையும் உறுதி செய்தன.
இம்மலர்களை அனுப்பியவர், தன்னை மறைத்துக் கொண்ட இச்செயல், பிறருக்கு கொடுக்கும் போது, எத்தகைய இருதயத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென தேவன் நம்மிடம் எதிர்பார்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. “பிறர் காணும்படியாக” நீதியின் கிரியைகளைச் செய்யாதிருங்கள் (மத் 6:1), என தேவன் எச்சரிக்கின்றார். தேவன் நமக்குச் செய்துள்ள அநேக நன்மைகளுக்காக, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, அவரை ஆராதிக்கும் முறை தான், நாம் செய்யும் நற்கிரியைகளாகும். நம்முடைய தயாள குணத்தை மற்றவர்களுக்கு காண்பித்து, அவர்களின் நன்மதிப்பை பெற விரும்புகின்றவர்கள், எல்லா நன்மைக்கும் காரணராகிய இயேசுவின் பார்வையைப் பெற முடியாது.
நாம் நல்லெண்ணத்தோடு கொடுப்பதை தேவன் அறிவார், (வ.4). நாம் அன்போடு செய்யும் பெருந்தன்மையான கிரியைகளையே, தேவன் விரும்புகின்றார். அதுவே தேவனுக்கு மகிமையையும், கனத்தையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
அன்பில் கழுவப்படல்
தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓர் ஆலயத்தின் விசுவாசிகள், தேவனுடைய அன்பை செயல் முறையில் காண்பிக்க விரும்பினர். அவர்கள் அருகிலுள்ள, இயந்திரம் மூலம் துணி துவைக்கும் இடத்தில் கூடி, தங்களின் சமுதாயத்தில் தேவையுள்ளோருக்கு, துணிகளைத் துவைத்து, மடித்து, அவற்றோடு, சூடான உணவையும், மளிகை சாமான்கள் அடங்கிய பைகளையும் சேர்த்து வழங்கினர்.
இவ்வாறு செய்யும் போது, ஒரு தன்னார்வத் தொண்டர் கண்டுபிடித்தது என்னவெனில், “அம்மக்களோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைப்பதாகவும், அவர்களுடைய கதைகளைக் கேட்க முடிந்ததாகவும்” கூறினார். அவர்கள் இயேசுவோடு சரியான உறவை வைத்திருப்பதால், தங்களுடைய விசுவாசத்தை வாழ்வில் காட்ட விரும்பினர், அன்பான வார்த்தையாலும், அன்பின் செய்கையாலும் மற்றவர்களுக்கு உதவி, அவர்களோடு உண்மையான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்.
ஒவ்வொரு விசுவாசியினுடைய உண்மையான விசுவாசத்தின் விளைவை, அவர்களுடைய அன்பின் கிரியைகளில் காணலாம் என அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகின்றார். “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:17) என்று சொல்கின்றார். நாம் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடும் போது, அவருடைய பிள்ளைகளாகின்றோம், நாம் மற்றவர்களுக்குப் பணிசெய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் (வச. 24) ஆவியும், சரீரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல, விசுவாசமும், ஊழியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன (வச. 26) என கிறிஸ்துவின் வல்லமை நம் மூலமாக, நம்மில் வெளிப்படுவதை அழகாகக் காட்டுகின்றார்.
தேவன் சிலுவையில் வெளிப்படுத்தின தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பினால் முற்றிலும் கழுவப்படும் போது, நம்முடைய உண்மையான விசுவாசம், நாம் முழுமனதோடு பிறருக்குச் செய்யும் அநேகக் கிரியைகளினால் விளங்கும்.
நிகழ் காலத்தில் தேவனோடு நட
சி.எஸ் லூயிஸ் எழுதிய “மியர் கிறிஸ்டியானிட்டி” என்ற புத்தகத்தில், “நம் தேவனுக்கு நேரம் பொருத்தமானதல்ல என்பதை மிக உறுதியாகக் கூறமுடியும். அவருடைய வாழ்வில், ஒரு கணத்திற்குப் பின் மற்றொன்று என்ற கணிப்பேயில்லை. இவ்வுலகை உருவாக்கினது முதற்கொண்டு, எல்லா காலமும் அவருக்கு நிகழ்காலம் தான்.” என்று எழுதுகின்றார். ஆனாலும், காத்திருக்கும் காலம், நமக்கு நீண்டதாகத் தோன்றும். ஆனால், காலத்தை உருவாக்கிய தேவனை, நாம் நம்பும்படி கற்றுக்கொள்ளும் போது, நம்முடைய நிலையற்ற வாழ்வு அவருடைய கரத்தில் பாதுகாப்பாயிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சங்கீதம் 102ல், சங்கீதக்காரன் புலம்பும் போது, “என் நாட்கள் சாய்ந்து போகிற நிழலைப் போலிருக்கிறது; புல்லைப் போல் உலர்ந்து போகிறேன். கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்” என்கின்றார் (வச. 11-12). இச்சங்கீதத்தின் ஆசிரியர், தன்னுடைய துன்பங்களினால் சோர்வடைந்த போது, “தேவரீர் என்றென்றைக்கும் அரசாளுகிறீர்” என்று வெளிப்படுத்துகின்றார். தேவனுடைய வல்லமையையும், மாறாத இரக்கத்தையும் நாம் அளவிட முடியாது என்கிறார் (வச. 13-18) திக்கற்ற வேளையில் (வச. 19-24), சங்கீதக்காரன், தன்னுடைய கண்களை, எல்லாவற்றையும் படைத்தவராகிய தேவனிடம் திருப்புகின்றார், (வச. 25) படைப்புகள் யாவும் அழிந்து போம், ஆனால் நம் தேவனோ நிலைத்திருப்பார். (வச. 26-27).
காலம் ஓடாதது போலும் அல்லது நீண்டும் காணப்பட்டால், நாம், தேவன் செயல் படவில்லையென தேவனைக் குறை கூற நேரலாம். நாம் பொறுமையிழக்கலாம், அல்லது ஒரேயிடத்தில் இருந்து சலிப்படையலாம். நம் நடைபாதையிலுள்ள ஒவ்வொரு கல்லைக் கூட அவர், நமக்காகத் திட்டமிட்டுள்ளார். நம்முடைய தேவைகளை நாமே பார்த்துக் கொள்ளும் படி, அவர் நம்மை விட்டு விடுபவரல்ல. அவர் மீதுள்ள நம்பிக்கையோடு நாம் வாழும் போது, நிகழ் காலத்தில் நாம் தேவனோடு நடப்பவர்களாவோம்.