மெய்யான மகிழ்ச்சி
பத்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் கோர்டொபா பகுதியை மூன்றாம் அப்த்-அல்- ரஹ்மான் ஆட்சி செய்தார். தன்னுடைய மக்களால் நேசிக்கப்பட்டவராய், எதிரிகளை பயமுறுத்தியவராய், கூட்டாளிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவராய் 50 ஆண்டுகள் வெற்றிகரமாய் ஆட்சி செய்த பின்பு, தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தார். “செல்வமும், கனமும், வல்லமையும், மகிழ்ச்சியும் என்னுடைய அழைப்பிற்குக் காத்திருக்கிறது” என்று தன்னுடைய சிலாக்கியத்தைக் குறித்துக் கூறினார். ஆனால் அவர் மெய்யாய் மகிழ்ந்திருந்த நாட்களை கணக்கிட்டால், அவை வெறும் பதினான்கு நாட்களேயாகும்.
பிரசங்கியின் ஆசிரியரும் செல்வமும் கனமும் அதிகம் கொண்டவர் (பிரசங்கி 2:7-9). வல்லமையும் மகிழ்ச்சியும் உடையவர் (1:12; 2:1-3). அவருடைய சொந்த வாழ்வின் மதிப்பீடும் அபத்தமானது. மகிழ்ச்சி, குறைவானதையே கொடுக்க (2:1-2), அதிகமாய் பெருக வேண்டும் என்ற விருப்பத்தை ஐசுவரியம் அதிகரிக்கிறது (5:10-11) என்கிறார். வெற்றி என்பது திறமையால் அல்ல, காலம் தான் அதை தீர்மானிக்கிறது (9:11) என்றும் கூறுகிறார். ஆனால் பிரசங்கியின் மதிப்பீடு அப்த்-அல்-ரஹ்மானுடையது போல தெளிவில்லாமல் இல்லை. தேவனை விசுவாசிப்பதே அவருடைய மகிழ்ச்சிக்கான ஆதாரமாய் காண்பிக்கிறார். உண்பது, பிரயாசப்படுவது, நன்மை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் தேவனை மையமாகக் கொண்டு செய்யப்படவேண்டும் என்கிறார் (2:25; 3:12-13).
“ஓ மனிதனே! உன்னுடைய நம்பிக்கையை இந்த உலகின் மீது வைக்காதே” என்று அப்த்-அல்- ரஹ்மான் தன் முடிவைத் தெரிவிக்கிறார். நாம் நித்தியத்திற்காக படைக்கப்பட்டோம் என்பதினால் (3:11), உலகம் கொடுக்கும் மகிழ்ச்சியால் நாம் திருப்தியடைய முடியாது. அவரைப் போல நம்முடைய வாழ்விலும் உண்பது, பிரயாசப்படுவது, நன்மை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் தேவனை மையமாகக் கொண்டு செயல்படும்போது மெய்யான மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க முடியும்.
புதிய ஆரம்பத்தின் விளைவு
ஆயுஷ், தன்னுடைய முப்பது வயதில் தனக்கு பிடிக்காத விற்பனைத்துறையில் வேலை செய்யாமல் புதிய துறையில் வேலையைத் தேட முடிவு செய்தார். ரேணு, புத்தாண்டில் தன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அசோக், தன் கோபத்தை அடுத்த மாதமாவது குறைக்க வேண்டும் என உறுதியாய் தீர்மானித்திருந்தார்.
புதிய மாதத்திலோ, ஆண்டிலோ அல்லது பிறந்த நாளிலோ தாங்கள் மாற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு புதிய தீர்மான விளைவு என்று அழைக்கின்றனர். காலண்டரில் குறிப்பிட்ட இதுபோன்ற சில விசேஷ நாட்களிலே, மக்கள் பழமையை பின்னுக்குத் தள்ளி பல புதிய தீர்மானங்களை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் சிறந்த மனிதர்களாய் இருக்க விரும்பி, புதிய துவக்கத்தை விரும்புகிறோம்.
இயேசுவின் மீதுள்ள விசுவாசம் நாம் முன்பைவிட சிறந்தவராய் வாழ நம்மை தூண்டுகிறது (கொலோசெயர் 3:12-14). நம்முடைய பழையவைகளை களைந்து போட்டு (வச. 5-9), நாம் சிறந்த மனிதர்களாக வாழ ஒரு தரிசனத்தைத் தருகிறது. இந்த மாற்றம் தீர்மானங்களாலோ அல்லது பொருத்தனையினாலோ அல்ல; தெய்வீக வல்லமையால் ஏற்படுகிறது. நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது புதிய மனிதர்களாய் மாறுகிறோம். தேவனுடைய ஆவியானவரின் கிரியை நம்மை முழுமையாக்குகிறது (வச.10; தீத்து 3:5).
இயேசுவின் இரட்சிப்பை பெறுவதே மேன்மையான புதிய துவக்கம். நாட்காட்டியில் விசேஷ பண்டிகை நாட்களை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் புதிய வாழ்க்கையை இப்பொழுதே ஆரம்பிக்கலாம்.
கிறிஸ்மஸ் குழந்தை
ஒரு உயிரணுவிலிருந்து உயிர் தோன்றுவதுபோல, ஒரு விதையிலிருந்த கேதுருக்களை ஓங்கி வளரச்செய்யும் ஒருவர், கருவிலிருந்துகொண்டே நட்சத்திரங்களை தனக்கு அடிபணியச்செய்த ஒருவர், வானத்தை ஒளிக்கற்றைகளால் நிரப்பிய ஒருவரை சற்று கற்பனை செய்துபாருங்கள். தேவனாயிருந்த இயேசு தன்னை வெறுமையாக்குகிறார் (பிலிப்பியர் 2:6-7). என்னே ஆச்சரியமான சிந்தனை!
மேய்ப்பர்கள் மற்றும் தேவதூதர்கள் முன்னிலையில், வானத்து நட்சத்திரங்கள் ஒளிர, சுற்றியிருந்த விலங்கினங்கள் முதல் தாலாட்டைப் பாட, ஒரு விவசாய கிராமத்தில் இயேசுவின் பிறப்பை கற்பனை செய்யுங்கள். அவர் தேவ கிருபையிலும் மனிதர் தயவிலும் விருந்தியடைந்ததையும், கல்விமான்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலளித்ததையும், யோர்தான் நதியில் தன்னுடைய பிதாவின் ஒப்புதலைப் பெற்றதையும், பசியோடும் ஜெபத்தோடும் வனாந்திரத்திலே சோதிக்கப்பட்டதையும் பாருங்கள்.
அதன் பின்பு அவருடைய உலகத்தை மறுரூபமாக்கும் ஊழியத்தையும், வியாதியஸ்தர்களை குணமாக்கியதையும், குஷ்டரோகிகளை தொட்டதையும், அசுத்தமானவர்களை மன்னித்ததையும் பாருங்கள். அவர் தோட்டத்தில் வியாகுலப்பட்டதையும், அவருடைய உற்ற நண்பர்கள் ஓடிவிட அவர் கைதுசெய்யப்பட்டதையும் பாருங்கள். அவர் துப்பப்பட்டு. இரண்டு மரக்கட்டைகளின் நடுவில் ஆணியடிக்கப்பட்டு. உலகத்தின் பாவத்தை தன் தோள்களில் சுமந்தவராய் தொங்கவிடப்பட்டவரை பாருங்கள். கல் நகர, வெறுமையான கல்லறையின் அந்த சத்தத்தை. கவனியுங்கள், ஏனென்றால், அவர் உயிரோடிக்கிறார்!
அவர் உன்னதங்களில் உயர்த்தப்பட்டதைப் பாருங்கள் (வச. 9). வானத்தையும் பூமியையும் அவருடைய நாமம் நிரப்பியதைப் பாருங்கள் (வச. 10-11).
அண்டசராசரங்களில் நட்சத்திரங்களை உருவாக்கி, அவற்றை சிறு புள்ளியாய் காணச்செய்தவர் அவரே. அதுவே நம் கிறிஸ்மஸ் குழந்தை.
நான் அவருடைய கைகளில்
2000ஆம் ஆண்டு ஜியா ஹைக்சியா தன்னுடைய பார்வையை இழந்தான். அவனுடைய நண்பன் ஜியா வெங்கி தான் குழந்தையாயிருக்கும்போது அவனுடைய கைகளை இழந்தான். ஆனால் அவர்களின் ஊனத்தை மேற்கொள்ளும் வழியை அவர்கள் கண்டுபிடித்தனர். “நான் அவனுடைய கைகள், அவன் என்னுடைய கண்கள்” என்று ஹைக்சியா சொல்லுகிறான். இருவரும் இணைந்து சீனாவிலுள்ள அவர்களுடைய சிறிய கிராமத்தையே மாற்றத்திற்குள்ளாக்கினர்.
2002ஆம் ஆண்டிலிருந்து இந்த நண்பர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகாமையிலிருக்கும் தரிசு நிலத்தை புதுப்பிக்க பிரயாசப்பட்டனர். ஒவ்வொரு நாளும் ஹைக்சியா, வெங்கியின் முதுகில் ஏறிக்கொண்டு இருவரும் ஆற்றைக் கடந்து செல்வர். பிறகு வெங்கி, ஹைக்சியாவின் கரத்தில் ஒரு பள்ளம்தோண்டும் கருவியைக் கொடுத்து, அவன் தோண்ட தோண்ட அந்த குழியில் இவன் மரத்தை நடுவது வழக்கம். ஒருவர் குழிதோண்ட, மற்றவர் அதில் மரக்கன்றை நட, இருவரும் இணைந்து 10,000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கின்றனர். “நாங்கள் இணைந்து வேலை செய்யும்போது, நாங்கள் ஊனமுற்றவர்களாய் ஒருபோதும் எண்ணியதில்லை” என்று ஹைக்சியா கூறுகிறான். “நாங்கள் குழுவாய் செயல்படுகிறோம்.”
பவுல் அப்போஸ்தலர் திருச்சபையை சரீரமாய் ஒப்பிடுகிறார். அதின் ஒவ்வொரு அவயத்திற்கும் மற்ற அவயத்தின் உதவி தேவை. திருச்சபை முழுவதும் கண்களாயிருந்தால், அங்கு எதுவும் கேட்காது. எல்லா அவயங்களும் காதுகளாய் இருந்தால், அங்கு வாசனை இருக்காது (1 கொரி. 12:14-17). “கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்று... சொல்லக்கூடாது” என்று பவுல் சொல்லுகிறார் (வச. 21). அவரவருடைய ஆவிக்குரிய வரங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் திருச்சபையில் பங்கேற்கிறோம் (வச. 7-11,18). ஜியா ஹைக்சியா மற்றும் வெங்கியைப் போல நாமும் நம்முடைய பலத்தை இணைத்தால், உலகத்திற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.
ஒரு புறம்போக்கு நிலத்தை சீர்செய்ய இருவர் தங்களுடைய திறமைகளை ஒன்றுசேர்த்தனர். இது செயல்படும் திருச்சபையை விளக்கும் என்ன அருமையான ஒரு உருவகம்.
நற்செய்தி
1941இல் ஜரோப்பிய கண்டம் முழுவதும் ஹிட்லரின் ஆளுகை விரிவடைந்துகொண்டிருந்த தருணம், நாவலாசிரியர் ஜான் ஸ்டெயின்பெக் (அமெரிக்க எழுத்தாசிரியர்) அந்த யுத்தத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். யுத்தகளத்தில் முன்பாக நின்று யுத்தம் செய்வதற்காக அல்ல மாறாக, ஒரு நாவல் ஒன்றை எழுதும்படிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதின் விளைவாக “சந்திரன் கீழே உள்ளது” என்ற தலைப்பில், அமைதியாய் இளைப்பாறிய தேசம் சத்துருக்களினால் கைப்பற்றப்பட்டதை விவரிக்கும் நாவல் எழுதப்பட்டது. இரகசியமாய் அச்சிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட தேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதின் செய்தி: உங்களின் கூட்டாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள், நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் செய்கைகளை பின்பற்றினால் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதே. “சந்திரன் கீழே உள்ளது” என்ற நாவலின் மூலமாக ஜெர்மானிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு அவர்களின் விடுதலை சமீபமாயிருக்கிறது என்னும் செய்தி தொடர்புகொள்ளப்பட்டது.
அந்த நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களைப் போன்று, முதலாம் நூற்றாண்டில் யூதர்களும் ரோம ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, தேவன் அவர்களுக்கு உதவிசெய்ய மீட்பரை அனுப்புவதாகவும், அவர் உலகத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவருவார் என்றும் வாக்குப்பண்ணப்பட்டிருந்தது (ஏசாயா 11). அந்த மீட்பர் வந்தவுடன் மகிழ்ச்சி வந்தது! நாங்களும் உங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம் என்று பவுல் சொல்லுகிறார். “இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார்” (அப். 13:32-33). இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலமாயும் அவருடைய மன்னிப்பின் மூலமாயும் உலகத்தை மறுசீரமைக்கும் பணி துவங்கியது (வச. 38-39; ரோமர் 8:21).
அன்றிலிருந்து இந்த மீட்பின் செய்தி உலகெங்கும் பரவி, சென்ற இடமெல்லாம் இளைப்பாறுதலையும் விடுதலையையும் ஏற்படுத்தியது. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பாவத்திலிருந்தும் தீமையிலிருந்துமான நம்முடைய மீட்புப் பணி துவங்கியது. அவரில் நாம் சுதந்திரவாளிகளாக்கப்பட்டோம்.
உபத்திரவத்தின் நோக்கம்
“இது என்னுடைய தவறாய் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லவருகிறீர்களா?” அந்த பெண்மணியின் வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களுடைய திருச்சபையில் சிறப்பு பிரசங்கியாராய் நின்று, என்ன பிரசங்கிப்பது என்பதைக் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், “எனக்கு நாள்பட்ட நோய் உள்ளது, அதற்காக நான் ஜெபித்து, உபவாசம் இருந்து, என் பாவங்களை அறிக்கையிட்டு, நோய் தீர இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஆனாலும் அந்த நோய் என்னை விட்டு அகன்றபாடில்லை, ஆகையால் அது என் பாவமாகவே இருக்கவேண்டும்” என்று சொன்னார்.
அந்த பெண்ணின் அறிக்கைக்காய் நான் வேதனைப்பட்டேன். பிரச்சனையைத் தீர்க்கும் ஆவிக்குரிய சூத்திரம் செயல்படவில்லை என்பதை அறிந்ததும், அவள் தன்னையே குற்றப்படுத்திக்கொள்ளுகிறாள். உபத்திரவத்திற்கு இதுபோன்ற சூத்திரங்கள் செல்லுபடியாகாது என்பது காலாகாலமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
நீங்கள் உபத்திரப்படுகிறீர்களென்றால் ஏதேனும் பாவம் செய்திருக்கவேண்டும் என்று கருதுவது மிகவும் பழைய சூத்திரம். யோபு தனக்குண்டான கால்நடைகள், பிள்ளைகள், மற்றும் சரீர பெலன் ஆகியவற்றை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது, அவனுடைய நண்பர்கள் இந்த சூத்திரத்தை பயன்படுத்தினர். யோபுவின் பாவத்தை சந்தேகித்த எலிப்பாஸ், “சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ?” என்று கேட்கிறார் (யோபு 4:7). பில்தாத்தும், யோபுவின் குமாரர்கள் மரித்ததற்கு காரணம் அவர்களுடைய பாவமே என்று குற்றப்படுத்துகிறார் (8:4). யோபுவின் உபத்திரவத்திற்கான சரியான காரணத்தை அறிய முற்படாமல் (1:6-2:10), அவர்களுடைய இலகுவான சூத்திரங்களை வைத்து அவனை நியாயந்தீர்த்ததினால் தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு பாத்திரவான்களாகின்றனர் (42:7).
அழியக்கூடிய இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். யோபுவைப் போல அதை தேவன் ஏன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் அந்த வலியைக் கடந்து தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். இலகுவான சூத்திரங்களை நம்பி சோர்ந்துபோகாதீர்கள்.
எப்போது தியாகம் செய்வது?
பிப்ரவரி 2020ல் கோவிட் தொற்று பரவத்துவங்கிய தருணத்தில், ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தியது. மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நம்முடைய வேலை, பயணம் மற்றும் ஷாப்பிங் பழக்கத்தை விட்டுவிட்டு, நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதை விரும்புவோமா? மேலும் அவள், “இது மருத்துவ பரிசோதனை மட்டுமல்ல, நாம் வெளியே போகாமல் மற்றவர்களை பாதுகாக்கும் உணர்வு” என்று எழுதுகிறாள். திடீரென்று நல்லொழுக்கத்தின் தேவை முதல் பக்க செய்தியாய் மாறுகிறது.
நம்மைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்போமாகில் மற்றவர்களின் தேவையை உணர முடியாது. நம்முடைய வேறுபாடுகளை மாற்றும் அன்பையும், சோகத்தை மாற்றும் சந்தோஷத்தையும், கவலையை மாற்றும் சமாதானத்தையும், மனக்கிளர்ச்சியை மாற்றும் நீடிய பொறுமையையும், மற்றவர்களிடத்தில் காண்பிக்கும் தயவையும், மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும் நற்குணத்தையும், நம் வாக்கை நிறைவேற்றுவதில் விசுவாசமும், கோபத்திற்கு பதிலாக சாந்தத்தையும், சுய நலத்திற்கு அப்பாற்பட்ட இச்சையடக்கத்தையும் பரிசுத்த ஆவயானவரிடத்தில் கேட்கலாம் (கலாத்தியர் 5:22-23). இவைகள் எல்லாவற்றிலும் நாம் நேர்த்தியாய் செயல்படமுடியாத பட்சத்தில், ஆவியானவரின் நற்பண்புகளை தொடர்ந்து நாடுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் (எபேசியர் 5:18).
செய்யப்படவேண்டிய நேரத்தில் ஒன்றை செய்யும் திறனையே பரிசுத்தம் என்று ஒரு ஆசிரியர் குறிப்பிடுகிறார். நோய் தொற்று காலத்தில் மட்டுமல்லாது, இந்த பரிசுத்தம் எல்லா காலகட்டத்திலும் அவசியப்படுகிறது. மற்றவர்களுக்காய் தியாகமாய் வாழும் குணம் நம்மிடத்தில் உள்ளதா? பரிசுத்த ஆவியானவர் செய்யப்படவேண்டியதை செய்யும் வல்லமையினால் நம்மை நிரப்பட்டும்.
வரம்பற்றவர்
நான் அங்கே, பேரங்காடியில், (Shopping Mall) உணவு சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்திருக்கிறேன். என் உடல் பதட்டமாகவும் என் வயிறு, வேலைகளின் காலக்கெடுவினால் தத்தளித்துக்கொண்டிருந்தது. நான் என் உணவை எடுத்து, சாப்பிட ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த வேலைகளைக் குறித்து பதற்றமடைந்துக்கொண்டிருந்தனர். நாம் அனைவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, நேரம், ஆற்றல் மற்றும் திறன் இவற்றில் கட்டுப்பாடு, என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான், செய்ய வேண்டிய வேலைகள் என்ற புதிய பட்டியலை எழுதி முக்கியமான வேலைகளை முதலில் செய்ய நினைக்கிறேன். ஆனால் அதை எழுத பேனாவைத் திறக்கும்போது வேறொரு எண்ணம் என் மனதில் தோன்றுகிறது: தாங்கள் விரும்பிச் செய்யும் வேலைகளை சிரமமின்றி செய்து முடிக்கும், முடிவில்லாத மற்றும் எல்லையில்லாதவர்களைப் பற்றி நினைக்கிறேன். தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடுக்குகிறவர் நம் ஆண்டவர் (ஏசாயா 40:12) என்று ஏசாயா கூறுகிறார். அவர் நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்து அவைகளின் பாதைகளை வழிநடத்துகிறவர் (வச. 26), அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார் (வச. 23), தீவுகளை ஒரு அணுவைப் போலவும், தேசங்களை கடலின் ஒரு துளியைப் போலவும் கருதுகிறார் (வச. 15). அவர் கேட்கிறார் “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (வச. 25). “கர்த்தராகிய அநாதி தேவன், இளைப்படைவதுமில்லை, சோர்ந்து போவதுமில்லை” என்று ஏசாயா பதிலளிக்கிறார்” (வச. 28).
மனஅழுத்தமும், சிரமமும் நமக்கு ஒருபோதும் நல்லதல்ல; ஆனால் இந்த நாளிலே அவைகள் ஒரு வல்லமையான செய்தியை அளிக்கிறது. வரம்பில்லாத ஆண்டவர் என்னைப் போலல்ல; அவர் விரும்புவதை செய்து முடிக்கிறார். நான் என் உணவை முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை இடைநிறுத்துகிறேன். அவரை அமைதியோடு தொழுதுகொள்ளுகிறேன்.
கிறிஸ்துவில் பரிபூரணம்
பிரபலமான ஒரு திரைப்படத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கை சிதைந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு நடிகர், தான் ஒரு வெற்றிகரமான விளையாட்டு முகவராக நடிக்கிறார். தன்னுடைய மனைவியைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவளுடைய கண்களைப் பார்த்து “நீ என்னைப் பூரணப்படுத்துகிறாய்” என்று கூறுகிறார். இது இதயத்தை நெகிழவைக்கும் நாட்டுப்புறக் கதையைப் பிரதிபலிக்கும் ஒரு செய்தி. நாம் ஒவ்வொருவரும் ஒரு “பாதி”, நாம் முழுமையடைய “மற்றொரு பாதியை” கண்டுபிடிக்க வேண்டும்.
நாம் காதலிக்கும் துணை நம்மை “முழுமை”யடையச் செய்கிறார் என்ற நம்பிக்கை பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது உண்மையா? தங்களுக்கு பிள்ளைகளில்லாததினால் அவர்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று கருதும் அநேக தம்பதிகளிடம் நான் பேசி இருக்கிறேன். தங்களுக்கு பிள்ளைகளிருந்தாலும் வேறே எதையோ தொலைத்து விட்டதாகக் கருதுகின்றனர். இறுதியாக எந்த மனிதனும் நம்மை முழுமையாக பூரணமாக்க முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இன்னொரு தீர்வைக் கொடுக்கிறார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ. 2:9-10). தேவன் நம்மை மன்னித்து, விடுவிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஜீவனை நம்முடைய ஜீவனில் கொடுத்து நம்மை பரிபூரணப்படுத்துகிறார் (வச. 13-15).
திருமணம் நல்லது. ஆனால் அது நம்மை பரிபூரணமாக்காது. இயேசு ஒருவர் மட்டுமே அதைச் செய்யமுடியும். ஒரு நபரோ, தொழிலோ அல்லது மற்ற ஏதாவதோ நம்மை பரிபூரணமடையச்செய்யும் என்று நாம் எதிர்பார்க்காமல், தேவன், அவருடைய பரிபூரணத்தை நம்முடைய வாழ்க்கையில் அதிகமதிகமாக நிரப்ப நமக்குக் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுவோம்.