எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளல்

நான் வாலிபனாக இருந்த போது, என்னுடைய தாயார் நான் விசுவாசத்தில் வளர வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவார்கள். “தேவனை நம்பு, அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்” என என்னுடைய தாயார் சொல்வதுண்டு. “அது அத்தனை எளிதானதல்ல, அம்மா!” என நான் கத்துவேன். “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்பேன்.

ஆனால், “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்று வேதாகமத்தில் எங்குமே காணப்படவில்லை. நம்முடைய அனுதின தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழும்படி தேவனுடைய வார்த்தைகள் சொல்கின்றன. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? (மத். 6:26-27) என இயேசு சொல்கின்றார்.

நாம் அநுபவிக்கின்ற யாவும், நம் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்குத் தேவையான பெலனும், நம்முடைய முயற்சிகள் யாவும் நம்மை நேசித்து, நம்முடைய தகுதிக்கும் மேலாக நம்மை கனப்படுத்துகின்ற நம்முடைய பரலோகத் தந்தையின் கொடைகளாகும்.

என்னுடைய தாயார் தங்களுடைய வாழ்வின் இறுதியையடைந்த போது ‘அல்சைமர்’ என்ற நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய நியாபகச்சக்தியையும், சிந்திக்கிற திறனையும் இழந்தார்கள். ஆனால் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த நாட்களில், தேவன் அவர்களுடைய தேவைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததையும், அதனால் அவள் வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கை சரியானதே என்பதைக் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். கவலைப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னை தேவனுடைய பாதுகாப்பில் வைத்துவிட்டார். தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.

நம்முடைய வீட்டிற்கு வழிநடத்தும் ஜெபம்

“தேவனே, என்னுடைய ஆன்மாவை உம்மிடம் வைத்துக் கொள்ளும், நான் இப்பொழுது படுத்து உறங்குவேன்” என்பது நான் சிறுவனாக இருந்தபோது கற்றுக் கொண்ட முதல் ஜெபம். என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்த ஜெபம். நான் இதனை என்னுடைய மகனும், மகளும் சிறியவர்களாயிருக்கும் போதே கற்றுக் கொடுத்தேன். நான் குழந்தையாயிருந்த போது நான் தூங்குவதற்கு முன்பு என்னை தேவனுடைய கரத்தில் கொடுப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும்.

இதேப் போன்று மற்றொரு அருமையான ஜெபம் வேதாகமத்திலுள்ள “ஜெப புத்தகம்” என்றழைக்கப்படும் சங்கீதங்களின் புத்தகத்தில் காணப்படுகிறது. “உமது கையில் என் ஆவியை ஒப்பிவிக்கிறேன்” (சங். 31:5) என்ற வாக்கியம் ஒரு படுக்கை நேர ஜெபம். இது இயேசுவின் காலத்தில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட ஜெபம் என சில வேத வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த ஜெபத்தையே இயேசுவும் சிலுவையில் கடைசியாகச் சொன்னார் என்பதை நாமறிவோம். ஆனால், இயேசு அதனோடு “பிதாவே” என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறினார் (லூக். 23:46) இந்த வார்த்தைகளை, இயேசு மரிக்குமுன் ஜெபித்தார். இயேசு, தனக்கும் பிதாவுக்குமுள்ள நெருங்கிய உறவை இந்த வார்த்தைகளால் நமக்குக் காண்பித்து, அவரை விசுவாசிக்கின்ற நமக்கு பிதாவின் வீட்டையடைய வழியையும் காண்பித்தார் (யோவா. 14:3).

இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம், நாமும் நம்முடைய பரலோகத் தந்தையாம் பிதாவோடுள்ள அற்புதமான உறவில் வாழும்படி செய்தார். இயேசு நமக்காகச் செய்த தியாக அன்பினாலேயே நாம் தேவனுடைய பராமரிப்பில் அவருடைய பிள்ளைகளாக அமர்ந்திருக்கின்றோம், என்பது எத்தனை ஆறுதலாக இருக்கின்றது. நாம் நம் கண்களை பயமின்றி மூடித் தூங்கலாம், ஏனெனில்ஸ்ர, நம் தந்தை நம்மை விழிப்போடு கவனிக்கின்றார். அவரோடுகூட நாம் வாழும்படி ஒரு நாள் நம்மை எழுப்புவேன் என வாக்களித்துள்ளார்
(1 தெச. 4:14).

நேரமாகிய ஈவு

நான் தபால் அலுவலகத்தினுள் மிக அவசரமாக நுழைந்தேன். நான் அன்று செய்து முடிக்க வேண்டிய அநேகக் காரியங்களைக் கொண்ட பட்டியலை வைத்திருந்தேன். ஆனால், நான் அங்கு நுழைந்த போது வாசல் வரையும் நீண்டிருந்த வரிசையைக் கண்டு விரக்த்தியடைந்தேன். “வேகமாகக் காத்திரு” என நான் முணு முணுத்துக் கொண்டே, என் கடிகாரத்தைப் பார்த்தேன்.

என்னுடைய கரங்கள் இன்னமும் வாயில் கதவைத் தொட்டுக் கொண்டிருக்க, ஒரு முதியவர் என்னிடம் வந்து “இந்த நகலிடும் கருவி வேலை செய்யவில்லை” என்று கூறி எனது பின் பக்கத்திலிருந்த அந்த இயந்திரத்தைக் காட்டினார். “அது என்னுடைய பணத்தை எடுத்துக் கொண்டது. இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றார். உடனே நான் தேவன் எதைச் செய்ய விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டேன். நான் என் வரிசையைவிட்டு வெளியே வந்து, பத்து நிமிடங்களுக்குள் அந்தப் பிரச்சனையை சரி செய்ய முடிந்தது.

அந்த மனிதன் எனக்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டார். நான் எனது வரிசையில் போய் நிற்க திரும்பியபோது, அது அத்தனையும் போய்விட்டிருந்தது. நான் நேரடியாக சேவை கவுன்டருக்கு சென்றுவிட்டேன்.

அன்றைய அநுபவம், இயேசுவின் வார்த்தைகளை என் நினைவுக்குக் கொண்டு வந்தது. “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38).

என்னுடைய காத்திருத்தல் மிகவும் சிறியதாகத் தோன்றியது. ஏனெனில் என்னுடைய அவசரத்தில் தேவன் குறிக்கிட்டார். என்னுடைய கண்களை பிறருடைய தேவையின் மீது திருப்பி, அவர்களுக்கு என்னுடைய நேரத்தைக் கொடுத்த போது, அவர் எனக்கொரு பரிசு வழங்கினார். அது ஒரு பாடம். நான் என் கடிகாரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதனை நினைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்.

புயலுக்கு அடைக்கலம்

நான் ஒக்லஹோமாவில் வாழ்ந்த போது எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் சுழல் காற்று வீசும்போது அதைத் தொடர்ந்து செல்வார். ஜான் என்ற அந்த நண்பர் ரேடியோ, பிற புயல் தொடர்பாளர்கள், அருகிலுள்ள ரேடார் ஆகியவற்றோடு தொடர்புகொண்டு கவனமாகக் கேட்டு, அந்தப் புயலின் பாதையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு, புயலின் அழிவுப் பாதையை பார்த்து அதன் பாதையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை மக்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பார்.

ஒருமுறை புனல் வடிவ மேகம் திடீரென அதன் பாதையை மாற்றிவிட, ஜான் மிகப் பெரிய ஆபததில் மாட்டிக் கொண்டார். ஆனால், நல்ல வேளை, அவர் ஒரு அடைக்கலத்தைக் கண்டு பிடித்து தப்பிக்கொண்டார்.

ஜானுடைய இந்த அனுபவம் மற்றொரு அழிவுப் பாதையைக் குறித்தச் சிந்திக்க வைத்தது. அது நம் வாழ்விலுள்ள பாவம். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக். 1:14-15) என வேதாகமம் சொல்கின்றது.

இங்கேயொரு தொடர்ச்சியான நிகழ்வுகளைக் காண்கின்றோம். பாவம், முதலில் ஆபத்தில்லாதது போல தோன்றினாலும், திடீரென கட்டுப்படுத்த முடியாதபடி சுழன்று நொறுக்கி அழிவைக் கொண்டுவரும். ஆனால், சோதனை வந்து நம்மை பயமுறுத்தும் போது, தேவன் வரப்போகும் புயலுக்கு நமக்கு அடைக்கலம் தருகின்றார்.

தேவன் நம்மை ஒருபோதும் சோதிப்பதில்லையென்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றது. நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள் நமது தெரிந்தெடுப்பேயொழிய தேவனுடையதல்ல. “நாம் சோதிக்கப்படும் போது சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையொடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும். உண்டாக்குவார்” (1 கொரி. 10:13). சோதனை நேரங்களில் நாம் அவரிடம் திரும்பி, அவரை நோக்கி உதவிக்காகக் கூப்பிடும் போது, சோதனையை மேற்கொள்ள வேண்டிய பெலனைத் தேவன் நமக்குத் தருகின்றார். எப்பொழுதும் நமக்கு அடைக்கலமாயிருப்பவர் இயேசு ஒருவரே.

சார்ந்திருத்தலை வெளிப்படுத்துதல்

லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருக்கின்றாள். அவள், “தேவனே, நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்துவருகின்றீர். தயவு கூர்ந்து லாராவின் தாயாருக்கும் எல்லாவற்றையும் செய்தருளும்” என ஜெபித்தாள்.

லாராவின் சிநேகிதி தான் முற்றிலும் “சார்ந்திருக்கும் நிலையை வெளிப்படுத்தியது”, லாராவின் உள்ளத்தை அசைத்தது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் லாரா 'என் எல்லாவற்றிற்கும் தேவன் எவ்வளவு அவசியம் என்பதை எத்தனை முறை அறிக்கை செய்கிறேன்?' என்று சொன்னாள். இது “எல்லா நாட்களிலும் நான் செய்ய வேண்டிய ஒன்று” என்றாள்.

இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பரலோகத் தந்தையைச் சார்ந்தே வாழ்ந்ததைச் செயல்படுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தேவனாயிருப்பதால் அவருக்குத் தேவையென்பதேயில்லை, எல்லாம் பரிபூரணமாயிருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசு ஓய்வு நாளில் ஒரு மனிதனை சுகமாக்கிய போது, ஆன்மீகத் தலைவர்கள் அவரிடம் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்ததேன் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரே அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:16) என்றார். இயேசுவும் பிதாவைச் சார்ந்திருத்தலை வெளிப்படுத்துகின்றார்.

இயேசுவும் பிதாவைச் சார்ந்திருந்தே வாழ்ந்தார் என்பது நமக்கும், தேவனோடு நாம் எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகின்றது. நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவு, தேவன் நம் வாழ்வு முழுமையும் அவருடைய பெலத்தால் நிறைந்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். நாம் அவரை நேசித்து, நம்முடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு அவருக்குச் சேவை செய்யும் போது நம் வாழ்வு அவரையே சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

பணிவான அன்பு

பெஞ்சமின் பிராங்க்ளின் வாலிபனாக இருந்தபோது, பன்னிரண்டு நற்குணங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரித்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார். இந்தப் பட்டியலைத் தன் நண்பனிடம் காண்பித்தபோது, அவன் அதனோடு பணிவையும் சேர்த்தான். பிராங்க்ளினுக்கு அது விருப்பமாயிருந்தது. அத்தோடு அவருடைய நண்பன் அந்தப் பட்டியலிலுள்ள ஒவ்வொரு நற்பண்பையும் அடைய சில வழிமுறைகளையும் கொடுத்து உதவினான். பிராங்க்ளினுடைய சிந்தனையில் பணிவிற்கு தனக்கு மாதிரியாக இயேசுவையே பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது.

பணிவிற்கு முழுமையான எடுத்துக் காட்டாக இயேசு விளங்கினார். தேவனுடைய வார்த்தைகள் சொல்வது, “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலி. 2:5-7)

இயேசு மிக உன்னதமான ஒரு பணிவைச் செயல்படுத்தினார். பிதாவோடு என்றும் இருப்பவராயிருந்தும் அன்பினால் சிலுவைமட்டும் தன்னைத் தாழ்த்தினார். தன்னுடைய சாவின் மூலம், தன்னை ஏற்றுக் கொள்ளுபவர் எவரையும் அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்வதையே அவர் தேர்ந்து கொண்டார்.

தேவனுடைய பணியை நாம் பின்பற்றுபவர்களாயின், பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் நம் பரலோகத்தந்தைக்குப் பணிவிடை செய்கிறவர்களாவோம். பிறரின் தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவும்படி நம்மை அர்ப்பணிக்கும் பிரமிக்கதக்க அழகினை நாம் பற்றிக் கொள்ளும்படி இயேசுவின் இரக்கம் நமக்குதவுகிறது. “நான் முதலில்” என்றிருக்கின்ற இந்த உலகில் பணிவோடு வாழ்வது என்பது எளிதானதல்ல. ஆனால், நாம் நமது இரட்சகரின் அன்பினைச் சார்ந்து இருப்போமாகில், அவரைப் பின்பற்றத் தேவையான யாவற்றையும் அவர் நமக்குத் தருவார்.

அசைபோடும் வருடங்கள்

என்னுடைய மனைவி சமீபத்தில் எனக்கு ஒரு லேபரேடார் வகை நாய்க்குட்டியொன்றைக் கொடுத்தார். நாங்கள் அதற்கு மேக்ஸ் என்று பெயரிட்டோம். ஒரு நாள் நான் என்னுடைய படிக்கும் அறையிலிருந்தபோது மேக்ஸும் என்னோடிருந்தது. நான் என்னுடைய எழுத்தில் கவனமாயிருந்தபோது, சில காகிதங்கள் கிழிக்கப்படும் சத்தம் என் பின்னாலிருந்து கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, குற்றவுணர்வோடிருந்த என்னுடைய நாய்க்குட்டியின் வாயிலிருந்து ஒரு திறந்த புத்தகத்தின் சில பக்கங்கள் நொங்கி கொண்டிருந்தன.

எங்களுடைய கால்நடை மருத்துவர், மேக்ஸ், அதனுடைய அசைபோடும் வருடங்களிலிருக்கிறது எனக் சொல்லியிருந்தார். நாய்க்குட்டிகளின் பால்பற்கள் விழுந்து, நிரந்தரபற்கள் தோன்றும்போது, அவை தங்கள் ஊன்களை உறுதிப்படுத்த எதையாகிலும் மென்று கொண்டேயிருக்கும். மேக்ஸ் தனக்கு ஒவ்வாத எதையாகிலும் விழுங்கிவிடாதபடி நான்தான் கவனமாகப் பார்த்திருக்க வேண்டும். நல்ல சுகாதாரமான எதையாகிலும் கடிப்பதற்கு நான் கொடுத்திருக்க வேண்டும்.

மேக்ஸ் அசைபோடுவதற்குத் தள்ளப்படுகிறது. அதனை கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு. இவ்வாறு நான் நினைத்துக் கொண்டபோது, நான் என்னுடைய மனதிலும் இருதயத்திலும் எவற்றைக் குறித்து அசைபோடுகிறேன், மீண்டும் மீண்டும் சிந்திக்கின்றேன் என்பதைக் குறித்து யோசனைசெய்தேன். நாம் புத்தகங்களை வாசிக்கும் போதும், வலைதளங்களில் நுழையும் போதும், அல்லது டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்கும் போதும் நம்முடைய ஆன்மாவிற்கு எவற்றைக் கொடுக்கிறோம் என்பதை நாம் கருத்தாய் கவனிக்கின்றோமா? “இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:1,3) என வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது. நாம் நம்மை தேவனுடைய வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் நிரப்பிக் கொள்வோம் அப்படிச் செய்யும்போது நாம் அவரில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவோம்.

வார்த்தைகள் தவறாகும்போது

சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.

ஏக்கத்தோடு தேவனைத் தேடல்

ஒரு நாள் என்னுடைய மகள், எங்களது ஒரு வயது நிரம்பிய பேரனோடு, எங்களைப் பார்க்க வந்திருந்தாள். ஒரு சிறிய வேலையினிமித்தம் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானேன். ஆனால் நான் அந்த அறையை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்ததும், என்னுடைய பேரன் அழ ஆரம்பித்தான். இது இரு முறை நடந்தது, ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் திரும்பி வந்து அவனோடு சிறிது நேரம் செலவிட்டுச் செல்வேன், மூன்றாவது முறை நான் வெளியே செல்ல முயற்சித்த போது, அந்த சிறிய உதடுகள் கதற ஆரம்பித்தன. அந்நேரம் என் மகள் ‘‘அப்பா, நீங்கள் அவனை உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாதா?” என்று கேட்டாள்.

அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது எல்லா தாத்தாக்களுக்கும் தெரிந்திருக்கும். என்னுடைய பேரனும் என்னோடு பயணித்தான், ஏனெனில், நான் அவனை நேசிக்கிறேன்.

நம்முடைய இருதயத்தில் தேவனை நோக்கி நாம் கொண்டுள்ள ஏக்கங்களெல்லாம் அன்போடு சந்திக்கப்படும் என்பது எத்தனை நன்மையானது. வேதம் நமக்குக் கூறுவது, ‘‘தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” (1 யோவா. 4:16). நாம் எதையோ செய்ததாலோ அல்லது செய்யாததாலோ தேவன் நம்மீது
அன்புகூரவில்லை. தேவனுடைய அன்பு நம்முடைய தகுதியைச் சார்ந்தது அல்ல, ஆனால் தேவனுடைய நன்மையையும் உண்மையையுமே சார்ந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அன்பற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கும்போது, நாம் என்றும் மாறாத தேவனுடைய அன்பையே நம்முடைய நம்பிக்கைக்கும், சமாதானத்திற்கும் மூல காரணராகச் சார்ந்து கொள்வோம்.

நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய மகனையே நமக்குப் பரிசாகத் தந்து, பரிசுத்த ஆவியையும் அருளினதின் மூலம், நம்மீதுள்ள அவருடைய அன்பை விளங்கப்பண்ணினார். தேவன் நம்மை என்றும் மாறாத அன்போடு அன்பு கூருகிறார் என்ற உறுதி நமக்கு எத்தனை ஆறுதலைத் தருகிறது.