நான் ஒக்லஹோமாவில் வாழ்ந்த போது எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் சுழல் காற்று வீசும்போது அதைத் தொடர்ந்து செல்வார். ஜான் என்ற அந்த நண்பர் ரேடியோ, பிற புயல் தொடர்பாளர்கள், அருகிலுள்ள ரேடார் ஆகியவற்றோடு தொடர்புகொண்டு கவனமாகக் கேட்டு, அந்தப் புயலின் பாதையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு, புயலின் அழிவுப் பாதையை பார்த்து அதன் பாதையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை மக்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பார்.

ஒருமுறை புனல் வடிவ மேகம் திடீரென அதன் பாதையை மாற்றிவிட, ஜான் மிகப் பெரிய ஆபததில் மாட்டிக் கொண்டார். ஆனால், நல்ல வேளை, அவர் ஒரு அடைக்கலத்தைக் கண்டு பிடித்து தப்பிக்கொண்டார்.

ஜானுடைய இந்த அனுபவம் மற்றொரு அழிவுப் பாதையைக் குறித்தச் சிந்திக்க வைத்தது. அது நம் வாழ்விலுள்ள பாவம். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக். 1:14-15) என வேதாகமம் சொல்கின்றது.

இங்கேயொரு தொடர்ச்சியான நிகழ்வுகளைக் காண்கின்றோம். பாவம், முதலில் ஆபத்தில்லாதது போல தோன்றினாலும், திடீரென கட்டுப்படுத்த முடியாதபடி சுழன்று நொறுக்கி அழிவைக் கொண்டுவரும். ஆனால், சோதனை வந்து நம்மை பயமுறுத்தும் போது, தேவன் வரப்போகும் புயலுக்கு நமக்கு அடைக்கலம் தருகின்றார்.

தேவன் நம்மை ஒருபோதும் சோதிப்பதில்லையென்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றது. நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள் நமது தெரிந்தெடுப்பேயொழிய தேவனுடையதல்ல. “நாம் சோதிக்கப்படும் போது சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையொடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும். உண்டாக்குவார்” (1 கொரி. 10:13). சோதனை நேரங்களில் நாம் அவரிடம் திரும்பி, அவரை நோக்கி உதவிக்காகக் கூப்பிடும் போது, சோதனையை மேற்கொள்ள வேண்டிய பெலனைத் தேவன் நமக்குத் தருகின்றார். எப்பொழுதும் நமக்கு அடைக்கலமாயிருப்பவர் இயேசு ஒருவரே.