செயல்பாடற்று!
பல சமயங்களில் தனிநபர்களை அல்லது குடும்பங்களை, உறவுமுறைகளை, நிறுவனங்களை மற்றும் அரசாங்கங்களைப் விவரிப்பதற்கு கூட செயல்பாடற்ற என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நன்றாகப் பயன்பாட்டில் இருக்கக்கூடியதை ‘செயல்படுகிற’ என்றும், தன்னுடைய வடிவமைப்புக்கு ஏற்றவாறு செயல்பட இயலாமல் பழுதாகி இருக்கிறதை ‘செயல்பாடற்றது’ என்றும் பொருள்படும்.
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமருக்கு எழுதின நிருபத்தில் ஆவிக்குரிய செயல்பாடற்ற மனித குலத்தைப் பற்றி விவரித்து தன் கடிதத்தை துவங்குகிறார் (ரோம. 1:18-32). “எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை... எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,” என்று அம்முரட்டாட்டமான கூட்டத்தில் நம் அனைவருக்கும் பங்குண்டு என்பதை பவுல் விவரித்துள்ளார் (3:12,23).
நற்செய்தி என்னவெனில், “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு.... விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறார்...” (வச. 24-25). நாம் கிறிஸ்துவை நம்முடைய வாழ்வில் வரவேற்று, தேவன் அளிக்கும் மன்னிப்பையும் புதிய வாழ்வையும் ஏற்றுக்கொண்டால், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி தேவன் நம்மை சிருஷ்டித்தாரோ, அப்பரிபூரணத்திற்கு நேராக நாம் கடந்து செல்வோம். உடனடியாக நாம் பரிபூரணமடைந்து விட மாட்டோம் என்றாலும், இனி ஒருபோதும் நாம் மனமுடைந்தவர்களாய் நொறுங்குண்டவர்களாய் செயலற்று இருக்கத் தேவையில்லை.
சொல்லாலும் செயலாலும் நாம் தேவனைக் கனப்படுத்தும்படி தினந்தோறும் பரிசுத்த ஆவியானவரின் மூலம் பெலன் பெற்று “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை (நாம்)களைந்துபோட்டு... (நம்முடைய)உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத் தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்(வோம்)” (எபே. 4:22-24).
பிள்ளையை ஆயத்தப்படுத்து!
“கடந்து செல்ல வேண்டிய பாதைக்கு ஏற்றவாறு பிள்ளையை ஆயத்தப்படுத்து, பாதையை அல்ல” என்னும் சொற்றொடரை அநேக குழந்தைவளர்ப்பு வலைத்தளங்களில் காணலாம். நம்முடைய பிள்ளைகள் செல்லும் பாதையில் உள்ள தடைகளை எல்லாம் நாம் அகற்றிவிட முனைவதைக்காட்டிலும் அப்பாதையில் உள்ள சிரமங்களை எல்லாம் அவர்கள் தைரியத்தோடு எதிர்கொண்டு முன்னேறிச்செல்ல அவர்களை நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.
“பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர்... வேதத்தை ஸ்தாபித்து, அவைகளை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்... பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு... தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படி...” என சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 78:4-6). “தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு,” (வச. 7) அவர்களை ஆயத்தப்படுத்துவதே அதன் நோக்கம்.
பிறர் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் நம்மீது ஏற்படுத்திய வல்லமையான ஆவிக்குரிய தாக்கத்தை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய உரையாடல்களும் செயல்களும் நம்முடைய கவனத்தை ஈர்த்து, கிறிஸ்துவை அவர்கள் பின்பற்றுவது போலவே நாமும் அவரை பின்பற்றும்படி நம்முடைய இருதயங்களை கொளுந்துவிட்டு எரியச்செய்தன. தேவனுடைய வார்த்தையையும் அவருடைய திட்டங்களையும் அடுத்த தலைமுறையினரோடு பகிர்ந்துகொள்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமும் கடமையுமாகும். அதன் மூலம் நாம் அநேக தலைமுறைகளை சந்திக்கக்கூடும். அவர்களுடைய வாழ்வில் அவர்கள் செல்லப்போகும் பாதையில் உள்ள அனைத்தையும் தேவ பெலத்தோடு அவர்கள் எதிர்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தி பெலப்படுத்த வேண்டும்.
உற்ற நண்பனாய் இருத்தல்
“சாலையோரத்திலே உள்ள வீடு” என்னும் கவிதைத் தொகுப்பில், “சாலையோரத்திலே நான் வாழ்ந்து மனுஷருக்கு நண்பனாய் இருக்கவேண்டும்”, என கவிஞர் சாமுவேல் ஃபாஸ் (Samuel Foss) எழுதியுள்ளார். நானும் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதாவது மக்களின் நண்பனாக. சோர்ந்துபோன பயணிகளுக்காக சாலையோரத்திலே நான் காத்திருக்க விரும்புகிறேன். மற்றவர்களால் தீங்கு இழைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருதயத்தில் நொறுங்குண்டு, காயப்பட்டு, பாரத்தோடு கடந்து வருபவர்களை வார்த்தையினால் உற்சாகமூட்டி பெலப்படுத்தி அனுப்ப விரும்புகிறேன். அவர்களையோ அல்லது அவர்களுடைய பிரச்சினைகளையோ முழுமையாக என்னால் சரிசெய்ய இயலாதிருப்பினும் ஆசீர்வதித்து அவர்களை வழியனுப்பலாம்.
யுத்தம் முடிந்து களைப்போடு திரும்பிக்கொண்டிருந்த ஆபிரகாமை, சாலேமின் ராஜாவும் ஆசாரியனுமாகிய மெல்கிசேதேக்கு ஆசீர்வதித்தான் (ஆதி. 14). தும்மலின் போது அனிச்சையாக கூறும் வாய்மொழியல்ல “ஆசீர்வாதம்”. ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய தேவனிடத்தில் பிறரை அழைத்து வருவதே உண்மையான ஆசீர்வாதம். “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக”, என்று மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்தான் (வச. 9).
நாம் பிறரோடு சேர்ந்து ஜெபிக்கும்பொழுது அவர்களை ஆசீர்வதிக்கிறோம். ஏனெனில் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்கான ஒத்தாசையை பெற்றுக்கொள்ள கிருபையின் சிங்காசனத்தண்டை அவர்களை நாம் அழைத்துச்செல்லலாம் (எபி. 4:16) நம்மால் அவர்களுடைய சூழ்நிலைகளை மாற்றமுடியாமல் போகலாம், ஆனால் சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனை அவர்களுக்கு காண்பிக்கலாம். ஒரு உண்மையான நண்பன் செய்யும் காரியம் அதுவே.
நினைவுகள் செய்யும் ஊழியம்!
இழப்பும், ஏமாற்றமும் நம் வாழ்வில் ஏற்படும்பொழுது, கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் குழப்பத்தை அது நம்மிடம் விட்டுச்செல்கிறது. நம்முடைய தீர்மானங்களினால் சில கதவுகள் அடைபட்டுப்போயிருக்கலாம் அல்லது நம்முடைய தவறேதுமின்றி சூழ்நிலையால் துயரத்தை சந்தித்திருக்கலாம். எதுவாக இருப்பினும், அந்நினைவுகளின் முடிவில் சோகமே மிஞ்சியிருக்கும். “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தினால் உண்டான அளவிடமுடியாத சோகம்” என்று ஆஸ்வல்ட் சேம்பர்ஸ் (Oswald Chambers) அந்த நிலையை அழைக்கின்றார். அப்படிப்பட்ட வேதனையான நினைவுகளை நாம் மறக்க முயன்றும், முடியாமல் தவிக்கிறோம்.
அப்படிப்பட்ட நேரங்களில், தேவன் இன்றைக்கும் நம் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை சேம்பர்ஸ் நமக்கு நினைவுபடுத்துகிறார். “கடந்தகால நினைவுகளை தேவனே திரும்ப கொண்டுவரும் பொழுது பயப்படாதீர்கள். ஏனெனில் அது தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்து நம்மை கடிந்தும் திருத்தியும், துக்கத்தை ஏற்படுத்தியும் ஊழியம் செய்கிறது. அதன் மூலம் “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தை மாற்றி எதிர்காலத்தை சரியாக எதிர்கொள்ள, அதே இடத்தில்
நல்வளர்ச்சியை காணச்செய்வார். ஆகவே நினைவுகளை அதன் போக்கிலே விட்டுவிடுங்கள்” என்று கூறுகிறார்.
பழைய ஏற்பாட்டின் காலத்தில், இஸ்ரவேல் ஜனம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுச் சென்றபோது மீண்டும் அவர்களை தேவன் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் வரை, அந்நிய தேசத்தில் அவரை சேவித்து, விசுவாசத்தில் வளரும்படியாக அவர்களிடம் கூறினார். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே’’ என்று கர்த்தர் கூறினார் (எரே. 29:11).
கடந்த கால சம்பவங்களை எண்ணி தங்களையே வருத்திக்கொள்ளவும் வேண்டாம், அல்லது அதை அசட்டை செய்துவிடவும் வேண்டாம் என்று தேவன் அறிவுறுத்துகிறார். மாறாக, அவர்மேல் நம்பிக்கை வைத்து, முன்னோக்கிச் செல்லச் சொல்கிறார். தேவனுடைய மன்னிப்பு நம்முடைய துக்கமான நினைவுகளை மாற்றி, அவரது நிலையான அன்பில் உறுதியுடன் நிலைத்து நிற்க உதவி செய்கிறது.
மன தைரியத்தை விட்டு விடாதீர்கள்
50 வருடங்களுக்கும் மேலாக எனது நண்பரும் வழிகாட்டியுமாகவிருந்த பாப் போஸ்டர் (Bob Foster) என் மீதுள்ள நம்பிக்கையை தளர்த்தவேயில்லை. என் வாழ்வின் இருண்ட காலக்கட்டத்தில், அவரது மாறாத நட்பும், ஊக்குவித்தலும்தான் என்னை பலப்படுத்தியது.
அதிகமான தேவையுடன் இருக்கும் சிலரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யவேண்டும் என்ற திடமான எண்ணத்துடன் நாம் உதவிக் கரத்தை நீட்டுவோம். ஆனால் உடனடியாக எந்த மாற்றத்தையும் நாம் காணாதபோது, நமது தீர்க்கமான எண்ணம் சற்றே தளர்வடைய ஆரம்பிக்கும், பின்னர் அந்த எண்ணத்தை கைவிட்டுவிடுவோம். உடனடியான மாற்றத்தை எதிர்பார்த்த நமக்கு அது ஓர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்முறை என்பது அப்போதுதான் விளங்க ஆரம்பிக்கும்.
வாழ்வின் தடுமாற்றங்களையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கும்போது பொறுமையுடன் உடன் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்று அபோஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா. 6:2) என்று பவுல் கூறும்பொழுது விதை விதைத்து, வேலைசெய்து, அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயியுடன் நமது வாழ்வை ஒப்பிடுகிறார்.
எவ்வளவு நாள்தான் நாம் இவ்வாறு ஜெபித்து நேசக்கரத்தை நீடிக்கொண்டிருப்பது? “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம் (கலா: 6:9). எத்தனை தரம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா. 6:10).
பிறருக்காக ஜெபித்து, அவர்களிடம் உண்மையுள்ளவர்களாயிருந்து, நம்பிக்கையை விட்டு விடாமலிருக்க அவர் மீது நம்பிக்கை வைக்குமாறு தேவன் நம்மை இன்றைக்கு உற்சாகப் படுத்துகிறார்.
புரிந்துகொண்டு தேற்றுபவர்
நவீன சமூகத்தின் பிரச்சனைகளுக்கு அறியாமையும் அக்கறையின்மையும்தான் காரணமா என்று ஒருவரிடம் கேட்டபொழுது, “எனக்குத் தெரியாது, எனக்கு அதைப் பற்றி அக்கறையும் கிடையாது” என்று அவர் விளையாட்டாகக் கூறினார்.
உலகத்தையும் அதன் போக்கையும் பார்க்கும்பொழுது அநேகர் இப்படித்தான் சோர்ந்து போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நம்முடைய வாழ்வில் ஏற்படும் மனக் கலக்கத்தையும் குழப்பத்தையும் பற்றி இயேசு நன்கு அறிந்திருக்கிறார். அறிந்ததினால்தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து ஏசாயா 53ஆம் அதிகாரத்தை படிக்கும்பொழுது இயேசு நமக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதை மேலோட்டமாக அறிந்துகொள்ளலாம். “அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டுமிருந்தார்.. தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்” (வச. 7). “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்” (வச. 8). “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரணப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக்கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (வச. 10).
நமது பாவங்களையும் குற்றங்களையும் சிலுவையில் இயேசு மனமுவந்து சுமந்துதீர்த்தார். நம்முடைய தேவன் அனுபவித்த பாடுகளைப்போல் வேறொருவரும் நமக்காக பாடுபட்ட தில்லை. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்க செலுத்தப்படவேண்டிய விலைக்கிரயத்தை அவர் நன்கறிந்ததினால், விலையேறப்பெற்ற அன்பினால், அவரே அதை செலுத்தினார் (வச. 4-6).
மரணத்தை வென்று இயேசு உயிர்த்தெழுந்ததினால், அவர் இன்றும் நம் மத்தியில் உயிருடன் இருக்கின்றார். ஆகவே நாம் இப்பொழுது என்ன சூழ்நிலையில் இருந்தாலும், இயேசு அதை நன்கு அறிந்திருக்கிறார். நம்மீது அக்கறை கொண்டபடியால், அவரது அன்பினால் சுமந்து செல்வார்.
நம்பிக்கை பயணம்
1880ஆம் ஆண்டு வெளிவந்த லியூ வாலஸ்ஸின் (Lew Wallace) பென் ஹர்: எ டேல் ஆப் கிறைஸ்ட் (Ben-Hur: A tale of Christ) என்ற கிறிஸ்துவைப் பற்றிய நாவல் இன்று வரை பிரசுரத் திலுள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ புத்தகமாகக் கருதப்படுகிறது. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றோடு பின்னிப் பிணைக்கப்பட்ட யூதா பென் ஹர் (Judah Ben Hur) என்னும் யூதகுலப் பிரபுவின் கதை இன்றும் அனேக வாசகர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
அப்புத்தகத்தை எழுதியபொழுது தன் வாழ்கையே மாற்றமடைந்ததாக அப்புத்தகத்தின் ஆசிரியர் கூறியதாக ஹியுமனிட்டீஸ் (Humanities) என்னும் பத்திரிக்கையில் எமி லிஃப்சன் (Amy Lifson) தெரிவித்துள்ளார்: “இயேசு கிறிஸ்துவின் சிலுவைக்காட்சிகளின் ஊடாய் வாசகர்களை பென்-ஹர் வழிநடத்தியது போல, இயேசுவை விசுவாசிக்கும்படியாக லியூ வாலஸ்சையும் அவரண்டை நடத்திச்சென்றுள்ளான்.” வாலஸ் தாமே, “நான் நசரேனாகிய இயேசுவைக் கண்டேன்... வேறெந்த சாதாரண மனுஷனும் நடப்பிக்க முடியாத கிரியைகளை அவர் நடப்பிக்க கண்டேன்,” எனக் கூறியுள்ளார்.
சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வாழ்க்கை, அவருடனேகூட நாம் நடந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் அவருடைய அற்புதங்களைக் காணவும் நமக்கு உதவுகிறது. தான் எழுதிய சுவிசேஷ புத்தகத்தின் முடிவில், “இந்தப் புத்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாக செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்படிருக்கிறது” என யோவான் எழுதியுள்ளார் (யோவா. 20:30-31).
லியூ வாலஸ் வேதாகமத்தை வாசித்து, ஆய்வு செய்து எழுதியதின் மூலம் இயேசுவை விசுவாசித்தது போலவே, அவருக்குள்ளும் அவரின் மூலமும் நாம் நித்திய வாழ்வை சுதந்தரித்துக்கொள்ளும் பொருட்டு அவருடைய வார்த்தை நம்முடைய மனதையும் இருதயத்தையும் மறுரூபமாக்குகிறது.
அவருடைய வார்த்தையே முடிவான வார்த்தை
20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு வல்லமையான கிறிஸ்தவ தலைவரும், வேதவசனத்தை மனனம் செய்யும் நேவிகேட்டர்ஸ் (The Navigators) என்னும் முறைமையின் நிறுவனருமான திரு. டாசன் திராட்மான் (Dawson Trotman), ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் வேதத்திற்கு இருக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் குறித்து வலியுறுத்தினார். ஒவ்வொரு நாளையும் “அவருடைய வார்த்தையே இறுதியான வார்த்தை” என்னும் செயல்முறையோடு நிறைவுசெய்யும் வழக்கத்தை அவர்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன்பு தான் மனனம் செய்த வசனத்தையோ அல்லது ஓர் பகுதியையோ தியானம் செய்து, தன் வாழ்வில் அவ்வார்த்தைக்குரிய மதிப்பையும் தாக்கத்தையும் குறித்து ஜெபித்துவிட்டு உறங்குவார். ஒவ்வொரு நாளும் தான் நினைக்கும் இறுதியான வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளாகவே இருக்கவேண்டும் என அவர் விரும்பினார்.
“என் படுக்கையின் மேல் நான் உம்மை நினைக்கும்பொழுது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்கு துணையாய் இருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்,” என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதியுள்ளான் (63:6-7). நாம் மிகப்பெரிய கஷ்டத்தில் இருந்தாலும் சரி, சமாதானமான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் தேவனுடைய வார்த்தையை தியானிப் போமானால், நம்முடைய மனம் ஆறுதலடைந்து இளைப்பாறுதளுக்குள் களிகூரும். அதுவே, மறுநாள் நாம் நல்ல மனநிலையோடு கண்விழிக்க உதவிடும்.
என்னுடைய நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய நான்கு பிள்ளைகளோடு சேர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு வேதாகமப்பகுதி மற்றும் அனுதின தியானப்பகுதி ஒன்றையும் சத்தமாக வாசித்துவிட்டுதான் உறங்கச்செல்வார்கள். அதுமட்டுமன்றி, அவ்வேளை தங்கள் பிள்ளைகள் கேள்விகள் கேட்கவும், கருத்துகளைப் பரிமாறவும் ஊக்குவித்து, வீட்டிலும் பள்ளியிலும் கிருஸ்துவைப் பின்பற்றுவதைக் குறித்தும் பேசுவார்கள். இது ஒவ்வொரு நாளுக்குமுரிய அவர்களுடைய “அவர் வார்த்தையே இறுதியான வார்த்தை” முறையாகும். இது நம்முடைய நாளை நிறைவு செய்ய எவ்வளவு சிறந்த ஒரு முறை!
மகத்தான அழைப்பு
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஏசாயா 55:1
சமீபத்தில், மின்னஞ்சலில் பல அழைப்பிதழ்களைப் பெற்றேன். ரியல் எஸ்டேட், ஆயுள் காப்பீடு, பணி ஓய்வு சம்பந்தப்பட்ட “இலவச” கருத்தரங்குகளில் பங்குபெறுமாறு சில அழைப்பிதழ்கள் இருந்தன. ஆனால் ஒரு அழைப்பிதழ் என் நீண்டகால நண்பர் சம்பந்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அது. ஆகவே “கண்டிப்பாக நான் வருகிறேன்” என்று உடனடியாக அதற்கு பதில் அனுப்பினேன். அழைப்பு + ஆசை = சம்மதம்
வேதாகமத்தில் இருக்கும் மிகச்சிறந்த அழைப்புகளில் ஒன்றைத் தான் ஏசாயா 55:1ல் காண்கிறோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த மக்களிடம் தேவன் இவ்வாறு பேசுகின்றார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” இது தேவனின் ஓர் ஒப்பற்ற அழைப்பு. உள்ளான மனிதனுக்கு தேவையான சத்துவத்தையும், நிறைவான ஆவிக்குரிய திருப்தியையும், நித்திய ஜீவனையும் இந்த அழைப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம் (வச. 2-3). வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசுவினுடைய அழைப்பு மீண்டும் இடம் பெற்றிருப்பதை காணலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).
நாம் இறந்த பின்புதான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கும் என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில், நாம் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே அது தொடங்கிவிடுகிறது.
அவருக்குள் நித்திய ஜீவனை கண்டடையும்படியாக நம்மை அழைக்கும் தேவனது அழைப்புதான், மகத்தான அழைப்பு! அழைப்பு + ஆசை = சம்மதம்