இழப்பும், ஏமாற்றமும் நம் வாழ்வில் ஏற்படும்பொழுது, கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் குழப்பத்தை அது நம்மிடம் விட்டுச்செல்கிறது. நம்முடைய தீர்மானங்களினால் சில கதவுகள் அடைபட்டுப்போயிருக்கலாம் அல்லது நம்முடைய தவறேதுமின்றி சூழ்நிலையால் துயரத்தை சந்தித்திருக்கலாம். எதுவாக இருப்பினும், அந்நினைவுகளின் முடிவில் சோகமே மிஞ்சியிருக்கும். “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தினால் உண்டான அளவிடமுடியாத சோகம்” என்று ஆஸ்வல்ட் சேம்பர்ஸ் (Oswald Chambers) அந்த நிலையை அழைக்கின்றார். அப்படிப்பட்ட வேதனையான நினைவுகளை நாம் மறக்க முயன்றும், முடியாமல் தவிக்கிறோம். 

அப்படிப்பட்ட நேரங்களில், தேவன் இன்றைக்கும் நம் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை சேம்பர்ஸ் நமக்கு நினைவுபடுத்துகிறார். “கடந்தகால நினைவுகளை தேவனே திரும்ப கொண்டுவரும் பொழுது பயப்படாதீர்கள். ஏனெனில் அது தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்து நம்மை கடிந்தும் திருத்தியும், துக்கத்தை ஏற்படுத்தியும் ஊழியம் செய்கிறது. அதன் மூலம் “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தை மாற்றி எதிர்காலத்தை சரியாக எதிர்கொள்ள, அதே இடத்தில்
நல்வளர்ச்சியை காணச்செய்வார். ஆகவே நினைவுகளை அதன் போக்கிலே விட்டுவிடுங்கள்” என்று கூறுகிறார்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், இஸ்ரவேல் ஜனம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுச் சென்றபோது மீண்டும் அவர்களை தேவன் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் வரை, அந்நிய தேசத்தில் அவரை சேவித்து, விசுவாசத்தில் வளரும்படியாக அவர்களிடம் கூறினார். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே’’ என்று கர்த்தர் கூறினார் (எரே. 29:11). 

கடந்த கால சம்பவங்களை எண்ணி தங்களையே வருத்திக்கொள்ளவும் வேண்டாம், அல்லது அதை அசட்டை செய்துவிடவும் வேண்டாம் என்று தேவன் அறிவுறுத்துகிறார். மாறாக, அவர்மேல் நம்பிக்கை வைத்து, முன்னோக்கிச் செல்லச் சொல்கிறார். தேவனுடைய மன்னிப்பு நம்முடைய துக்கமான நினைவுகளை மாற்றி, அவரது நிலையான அன்பில் உறுதியுடன் நிலைத்து நிற்க உதவி செய்கிறது.