சமீபத்தில், மின்னஞ்சலில் பல அழைப்பிதழ்களைப் பெற்றேன். ரியல் எஸ்டேட், ஆயுள் காப்பீடு, பணி ஓய்வு சம்பந்தப்பட்ட “இலவச” கருத்தரங்குகளில் பங்குபெறுமாறு சில அழைப்பிதழ்கள் இருந்தன. ஆனால் ஒரு அழைப்பிதழ் என் நீண்டகால நண்பர் சம்பந்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அது. ஆகவே “கண்டிப்பாக நான் வருகிறேன்” என்று உடனடியாக அதற்கு பதில் அனுப்பினேன். அழைப்பு + ஆசை = சம்மதம்

வேதாகமத்தில் இருக்கும் மிகச்சிறந்த அழைப்புகளில் ஒன்றைத் தான் ஏசாயா 55:1ல் காண்கிறோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த மக்களிடம் தேவன் இவ்வாறு பேசுகின்றார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” இது தேவனின் ஓர் ஒப்பற்ற அழைப்பு. உள்ளான மனிதனுக்கு தேவையான சத்துவத்தையும், நிறைவான ஆவிக்குரிய திருப்தியையும், நித்திய ஜீவனையும் இந்த அழைப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம் (வச. 2-3). வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசுவினுடைய அழைப்பு மீண்டும் இடம் பெற்றிருப்பதை காணலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).

நாம் இறந்த பின்புதான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கும் என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில், நாம் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே அது தொடங்கிவிடுகிறது.

அவருக்குள் நித்திய ஜீவனை கண்டடையும்படியாக நம்மை அழைக்கும் தேவனது அழைப்புதான், மகத்தான அழைப்பு! அழைப்பு + ஆசை = சம்மதம்