மரணப்படுக்கையில் இருந்த என்னுடைய நண்பனின் சகோதரர் மரித்த காட்சியை என்னால் மறக்கமுடியாது. அவரது படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த சாதாரணமானவர்களை, அசாதாரணமான ஒருவர் சந்தித்தார். நாங்கள் மூவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ரிச்சர்டின் (Richard) சுவாசிக்கும் நிலை கடினமானது. நாங்கள் அவர் அருகே சென்று அவரைப் பார்த்தபடி ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவரது கடைசி மூச்சை அவர் உள் வாங்கிய பொழுது, அது ஓர் பரிசுத்த தருணமாகவே காணப்பட்டது. நாற்பது வயதில் மரித்துக் கொண்டிருந்த ஓர் அற்புதமான மனிதனின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்களை தேவனுடைய பிரசன்னம் சூழ்ந்து கொண்டது.

தேவன் உண்மையுள்ளவர் என்பதனை, அநேக பரிசுத்தவான்கள் மரிக்கும் தருவாயிலும் உணர்ந்தனர். உதாரணத்திற்கு, யாக்கோபு மரிப்பதற்கு முன்னர் “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்” (ஆதி. 49:29-33) என்று அவரது பிள்ளைகளிடம் கூறினார். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் அவரது மரணத்தை குறித்து தன் சகோதரரிடம், “நான் மரணமடையப் போகிறேன்” என அறிவித்து, அவர்களது விசுவாசத்தில் நிலைத்து நிற்கும்படியாக அறிவுறுத்தினார். மரிக்கும் தருவாயிலும் அவர் சமாதானத்தோடிருந்தார். அவரது சகோதரர் தேவனையே சார்ந்து ஜீவிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் (50:24).

நாம் எப்போது நம்முடைய கடைசி மூச்சை இழப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்ற உறுதியுடன் இருக்க நமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்கலாம். தமது பிதாவின் வீட்டில் நமக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்று வாக்களித்த இயேசுவின் வார்த்தையை நாம் நம்பி உறுதியுடன் ஜீவிக்கலாம்.