கடந்த குளிர்காலத்தில் கொலராடோவில் (Colorado) இருந்த ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்த பொழுது, ஆஸ்பென் மரத்தை (காட்டரசுமரம்) பற்றி சில குறிப்பிடத்தக்க உண்மைகளை நான் கற்றுக்கொண்டேன். ஒரே ஒரு விதைக்கு, மெல்லிய தண்டுடைய ஆஸ்பென் மரத்தோப்பை உருவாக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. அனைத்து வேர்களும் அந்த ஒருவிதையிலிருந்து கிளம்பும். இந்த வேர் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலத்தடியில் மந்தமான நிலையில், எந்த ஒரு மரத்தையும் உற்பத்தி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்க முடியும். வெள்ளம், நெருப்பு அல்லது பனிச்சரிவின் வரவினால் காட்டில் ஏற்படும் வெற்றிடத்திற்காக அவை காத்துக்கொண்டிருக்கும். ஓர் இயற்கைப் பேரழிவினால் நிலம் அகற்றப் பட்டவுடன், மரத்தின் வேர்கள் சூரியனின் வெப்பத்தை உணர ஆரம்பிக்கும். பிறகு அவ்வேர்கள் கன்றுகளை அனுப்பத் தொடங்கும், அவை மரங்களாக வளர ஆரம்பிக்கும்.

பேரழிவின் மூலம் ஆஸ்பென் மரங்களின் வாழ்வில் ஓர் புதிய வளர்ச்சி சாத்தியமானதை நாம் காணலாம். கஷ்டங்கள் மத்தியில் நமது விசுவாசமும் இப்படித்தான் வளர்கின்றது என்று யாக்கோபு கூறுகின்றார். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:2-4).

சோதனையைச் சந்திக்கும்போதும், அக்கினியில் நடக்கும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம் தான். ஆனால் இப்படிப்பட்டதான கஷ்டமான சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்தி, நம்மை முதிர்ந்த மற்றும் முழுமையான நிலைக்கு கொண்டு வருவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆஸ்பென் மரங்களைப்போல், சோதனைகளை சந்திக்கும் காலம், விசுவாசத்தில் நாம் வளரும் தருணமாக மாறலாம். பிரச்சனைகள் நம் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உண்டு பண்ணும்போது தேவனின் வெளிச்சம் நமக்குள் பிரவேசித்து நம்மை தொடும் தருணங்களாக மாறும்.