“கடந்து செல்ல வேண்டிய பாதைக்கு ஏற்றவாறு பிள்ளையை ஆயத்தப்படுத்து, பாதையை அல்ல” என்னும் சொற்றொடரை அநேக குழந்தைவளர்ப்பு வலைத்தளங்களில் காணலாம். நம்முடைய பிள்ளைகள் செல்லும் பாதையில் உள்ள தடைகளை எல்லாம் நாம் அகற்றிவிட முனைவதைக்காட்டிலும் அப்பாதையில் உள்ள சிரமங்களை எல்லாம் அவர்கள் தைரியத்தோடு எதிர்கொண்டு முன்னேறிச்செல்ல அவர்களை நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். 

“பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர்… வேதத்தை ஸ்தாபித்து, அவைகளை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்… பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு… தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படி…” என சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 78:4-6). “தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு,” (வச. 7) அவர்களை ஆயத்தப்படுத்துவதே அதன் நோக்கம். 

பிறர் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் நம்மீது ஏற்படுத்திய வல்லமையான ஆவிக்குரிய தாக்கத்தை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய உரையாடல்களும் செயல்களும் நம்முடைய கவனத்தை ஈர்த்து, கிறிஸ்துவை அவர்கள் பின்பற்றுவது போலவே நாமும் அவரை பின்பற்றும்படி நம்முடைய இருதயங்களை கொளுந்துவிட்டு எரியச்செய்தன. தேவனுடைய வார்த்தையையும் அவருடைய திட்டங்களையும் அடுத்த தலைமுறையினரோடு பகிர்ந்துகொள்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமும் கடமையுமாகும். அதன் மூலம் நாம் அநேக தலைமுறைகளை சந்திக்கக்கூடும். அவர்களுடைய வாழ்வில் அவர்கள் செல்லப்போகும் பாதையில் உள்ள அனைத்தையும் தேவ பெலத்தோடு அவர்கள் எதிர்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தி பெலப்படுத்த வேண்டும்.