என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபொழுது, எங்களுடைய தோட்டத்தில் விளையாடும் சமயம், கொஞ்ச நேரத்திலேயே சேறும் மண்ணும் அவர்கள்மீது ஒட்டிக்கொள்ளும். ஆகவே அவர்கள் விளையாடிவிட்டு வீட்டுக்குள் வரும்பொழுது, வாசலில் வைத்து அவர்களுடைய ஆடைகளைக் கழற்றிவிட்டு ஒரு துண்டைச் சுற்றி குளியலறைக்கு அவர்களை கொண்டு சென்று விடுவேன். இல்லையென்றால் தரையெல்லாம் அழுக்காகிவிடும். சிறிது நேரத்திலேயே, தண்ணீர் மற்றும் சோப்பின் உதவியோடு அழுக்கெல்லாம் நீங்கி அவர்கள் சுத்தமாகி விடுவார்கள். 

பாவத்தையும் தப்பிதங்களையும் குறிக்கும் அழுக்கான ஆடையைப் பிரதான ஆசாரியனாகிய யோசுவா உடுத்தியிருப்பதை ஒரு தரிசனத்தில் சகரியா கண்டான் (சக. 3:3). ஆனால், தேவன் அவனை சுத்திகரித்து, அவனுடைய அழுக்கான வஸ்திரங்ககளை களைந்து சிறந்த வஸ்திரங்களினால் அவனை உடுத்துவித்தார் (3:5). தேவன் அவனுடைய பாவத்தை எல்லாம் நீக்கி விட்டார் என்பதையே அவனுடைய புதிய தலைப்பாகையும் ஆடையும் பறைசாற்றியது.

அதைப்போலவே சிலுவையின் மூலம் இயேசு நமக்களித்த இரட்சிப்பினால் நம்முடைய பாவம் கழுவப்பட்டு நாமும் விடுதலை பெறலாம். அவருடைய சிலுவை மரணத்தின் மூலம், நம்மை பற்றிக்கொண்டிருக்கும் பாவக்கறைகளெல்லாம் நீங்கி தேவனுடைய குமாரர் குமாரத்திகள் என்ற ஆடையை தரித்து கொள்கிறோம். இனி ஒருபோதும் நாம் செய்த பாவங்களினால் (பொய், திருட்டு, புறங்கூறுதல், இச்சை மற்றும் இதர பாவங்கள்) எண்ணப்படாமல், தேவன் தான் நேசிப்பவர்களுக்கு கொடுத்த நாமங்களினால் அறியப்படுவோம். அதாவது இனி நாம் மீட்கப்பட்டவர்கள், மறுரூபமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், விடுதலையானவர்கள் என அழைக்கப்படுவோம். 

நீங்கள் உங்களுக்கென்று தேவன் வைத்துள்ள ஆடையை அணிந்துகொள்ளும்படி, உங்களுடைய அழுக்கான ஆடையை களைந்து விடும்படி தேவனிடம் கேளுங்கள்.