இரக்கம் நிறைந்த மனிதன்
ஏமாற்றத்தைத் தருகின்றது, நான் இன்னும் அதிக அர்த்தமுள்ள வாழ்வை வாழ விரும்புகின்றேன் என்று கூறி, நிதித்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த லியோன், தன் வேலையை ராஜினாமா செய்தான். ஒரு நாள், “இரக்கம் தான் சிறந்த மருந்து” என்ற ஒரு வாசகத்தைக் கையில் பிடித்தவனாக, வீடற்ற ஒருவன் தெரு முனையில் பிச்சைக் கேட்பதைப் பார்த்தான்.” இந்த வார்த்தைகள் என்னை நேரடியாகத் தாக்குகின்றன, இவை என்னை உணர்த்தும் வார்த்தைகள்” என்றான்.
இரக்கத்தைக் காட்டும் அகில நாடுகளின் நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம், லியோன் ஒரு புது வாழ்வைத் தொடங்கத் தீர்மானித்தார். அவர் பிறரைச் சார்ந்து வாழ்ந்து, அவர்கள் தரும் உணவையும், எரிபொருளையும், தங்கும் இடத்தையும் சார்ந்து கொண்டு, உலகம் முழுவதும் பயணம் செய்தார். பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்தின் மூலம், அநாதைகளுக்கு உணவளிப்பது, வசதியற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைக் கட்டுவித்தல் போன்ற நற்செயல்கள் மூலம் அவர்களை கெளரவித்தார். “இதனை சில வேளைகளில் மென்மையான குணம் கொண்டிருத்தல் என்பதாகப் பார்ப்பதுண்டு, ஆனால், இரக்கம் என்பது மிகவும் வலிமையானது” என்கின்றார்.
கிறிஸ்துவிடமிருந்து இயற்கையாகப் பொங்கி வரும் நன்மைசெய்யும் பண்பும், அவருடைய இரக்கமும், அவரை தேவனாகக் காண்பித்தது. ஒரு விதவையின் ஒரே மகனின் சரீரத்தை அடக்கம் செய்யும் படி சென்று கொண்டிருந்த கூட்டத்தை இயேசு சந்தித்த போது, (லூக்.7:11-17) அவர் காட்டிய இரக்கத்தின் கதை எனக்கு மிகவும் விருப்பமானது. அந்த கவலை தோய்ந்த விதவை, அந்த மகனையே சார்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். அங்கு, இதனைச் செய்யும்படி, இயேசுவை யாருமே கட்டாயப் படுத்தினதாக நாம் வாசிக்கவில்லை. முழுவதும் அவருடைய நற்பண்பினால் (வ.13), அவர் மனதுருகி, அவளுடைய மகனை உயிரோடு எழுப்பினார். ஜனங்கள், “தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்” என்று சொல்லி தேவனை மகிமைப் படுத்தினார்கள் (வ.16).
பரத்திலிருந்து கொடுக்கப்படும் ஞானமுள்ள பார்வை
1970 ஆம் ஆண்டு, பீட்டர் வெல்ச் என்பவர் இளைஞனாக இருந்த போது, உலோகத்தைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை பொழுது போக்காக பயன் படுத்தினார். 1990 ஆம் ஆண்டு முதல், உலோகங்களைக் கண்டிபிடிக்கும் நோக்கோடு, உலகெங்கிலும் இருந்து வரும் மக்களை அழைத்துச் செல்வார். அவர்கள்- வாள்கள், பழங்கால ஆபரணங்கள், நாணயங்கள் என ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர். “கூக்குள் எயர்த்” என்ற கணினி முறையின் மூலம் துணைக் கோள் படங்களை பயன் படுத்தி, ஐக்கிய அரசாட்சியில் இருந்த நிலப்பரப்பின் பண்ணை நிலங்களின் வரைபடங்களை கண்டிபிடித்தனர். அதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த சாலைகள், கட்டடங்கள், பிற கட்டுமானங்களை கண்டறிந்தனர். “பரத்திலிருந்து தேவன், நம் கண்களைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகையும் திறந்து காண்பிக்கின்றார்” என்கின்றார் பேதுரு.
ஏசாயா காலத்தில் இருந்த ஜனங்களுக்கும் “பரத்திலிருந்து பார்க்கக் கூடிய ஒரு கண்ணோட்டம்” தேவை. அவர்கள் தேவனுடைய ஜனங்கள் என்பதால், அவர்கள் தங்களைக் குறித்த பெருமையைக் கொண்டிருந்தனர், ஆனாலும் கீழ்ப்படியாதவர்களாய், தங்களின் விக்கிரங்களைத் தங்களை விட்டு அகற்றவில்லை. தேவன் வேறொரு கண்ணோட்டத்துடன் அவர்களைப் பார்த்தார், அவர்கள் தனக்கு எதிராகச் செயல்பட்டாலும், தேவன் அவர்களை பாபிலோனியரின் சிறையிருப்பிலிருந்து மீட்டார். ஏன்? “என்னிமித்தம், என்னிமித்தமே……………….என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடேன்” ஏசா.48:11) என்கின்றார். தேவன் நம்மைப் பார்க்கும் கண்ணோட்டம் என்னவெனின், நம்முடைய வாழ்வின் நோக்கம் நம்முடையதல்ல, நம்முடைய வாழ்வு அவருடைய மகிமைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கவனம் அவரையும், அவருடைய திட்டத்தையும் நோக்கி இருக்க வேண்டும், நம்முடைய வாழ்வு பிறரை தேவனைத் துதிக்கும் படித் திருப்ப வேண்டும்.
தேவனை மகிமைப் படுத்துவதே நம் வாழ்வின் முக்கிய கண்ணோட்டமாக இருப்பின், அது ஒரு புதிய உலகை நமக்குத் திறக்கின்றது, அவரைப் பற்றி நாம் கண்டுபிடிப்பதையும், அவர் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தையும் அவர் ஒருவரே அறிவார், நமக்கு எது நல்லது என்பதை அவர் கற்றுத் தருவார், நாம் போகவேண்டிய பாதையில் அவர் நம்மை நடத்துவார் (வ.17).
விரித்த கரங்கள்
சாமுவேலும் அவனுடைய குடும்பத்தினரும், “விரிந்த கரங்கள், திறந்த வீடு” என்ற தத்துவத்தைக் கைக் கொண்டனர். அவர்களின் வீடு அனைவரையும் வரவேற்கிறது, “சிறப்பாக, வருத்தத்தில் இருப்போருக்கு” என்று அவர் கூறுகின்றார். லைபீரியாவில் ஒன்பது உடன்பிறந்தோரோடு, அப்படிப்பட்ட ஒரு வீட்டில் அவன் வளர்க்கப் பட்டான். அவனுடைய பெற்றோர் எப்பொழுதும் அவர்கள் வீட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்பார்கள். அவன், “நாங்கள் ஒரு சமுதாயமாக வளர்ந்தோம், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம், ஒவ்வொருவரும் மற்றவரின் பொறுப்பை ஏற்றோம், என்னுடைய தந்தை ஒருவரை ஒருவர் நேசிக்கவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுத்தார்” என்று கூறினான்.
தாவீது ராஜா தேவையில் இருந்த போது, இத்தகைய அன்பின் பாதுகாப்பை தேவனிடம் பெற்றார்.
2 சாமுவேல் 22 (சங்.18) ல் தாவீதின் துதி பாடல் எழுதப்பட்டுள்ளது. தேவன் அவனுடைய வாழ்நாள் முழுவதும் அடைக்கலமாக இருக்கின்றார். அவன், “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று” (2 சாமு. 22:7) என்கின்றான். தேவன் அவனை அவனுடைய எதிரிகளிடமிருந்து விடுவித்தார், சவுல் அரசனிடமிருந்து பல முறை பாதுகாத்தார். கர்த்தர் அவருக்கு கன்மலையும், கோட்டையும்,உயர்ந்த அடைக்கலமும், புகலிடமும், ரட்சகருமாயிருக்கிறார், என்று பாடுகின்றார் (வச. 2-3).
தாவீதின் துயரங்களைப் பார்க்கும் போது நம்முடைய துயரங்கள் சிறியது தான். தேவன் நம்மையும் அவரிடம் ஓடி வரும்படி அழைக்கின்றார், நாம் தேடுகின்ற பாதுகாப்பான இடத்தை அவர் தருகின்றார், அவருடைய கரங்கள் எப்பொழுதும் விரிந்தே இருக்கின்றன, எனவே நாமும் “அவருடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவோம்” (வ.50).
பாதுகாக்கப்படுகிறோம்
வீட்டைச் சுத்தப்படுத்தும் சேவை மையத்தின் முதலாளியான டெபி, தன்னுடைய தொழிலை விரிவாக்கும் நோக்குடன் அதிக வாடிக்கையாளர்களைத் தேடிக் கொண்டிருப்பாள். அவளுக்கு ஓர் அழைப்பு வந்த போது, ஒரு பெண் அவளோடு தொடர்பு கொண்டாள். அவள், “என்னால் இதற்காகும் தொகையை இப்பொழுது கொடுக்க முடியாது; நான் தற்சமயம் புற்று நோய் சிகிச்சையில் இருக்கின்றேன்” என்றாள். அதிலிருந்து டெபி, “புற்று நோய் சிகிச்சையில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை, அவர்களுக்கு இலவசமாக சுத்தப்படுத்தும் சேவை செய்யப்படும்” என்று தீர்மானித்தாள். எனவே, 2005 ஆம் ஆண்டு, அவள் ஒரு லாப நோக்கமில்லாத, வீடு சுத்தப்படுத்தும் சேவையை ஆரம்பித்தாள், இதன் வழியாக நிறுவனங்கள் தங்கள் நன்கொடைகள் மூலம் புற்று நோயால் அவதியுறும் பெண்களுக்கு இலவசமாக சுத்தப்படுத்தும் சேவையை வழங்கினர். இத்தகைய சேவையைப் பெற்ற ஒரு பெண், சுத்தமாக்கப்பட்ட தன் வீட்டிற்குத் திரும்பிய போது, தனக்குள் ஒரு பெரிய தன்நம்பிக்கையைப் பெற்றாள். அவள், “முதல் முறையாக, நான் புற்று நோயையும் விரட்ட முடியும் என்று நம்ப ஆரம்பித்தேன்” என்றாள்.
நாம் பாதுகாக்கப்படுகின்றோம், ஆதரவளிக்கப் படுகின்றோம் என்ற உணர்வு, நாம் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள உதவியாயிருக்கும். தேவனுடைய பிரசன்னமும், ஆதரவும் நமக்குண்டு என்ற எண்ணம், நமது ஆவியில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றது. சோதனைகளின் வழியாகக் கடந்து செல்லும் அநேகரின் விருப்பமான சங்கீதம் 46 நமக்குச் சொல்வது, “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்”, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்;……பூமியிலே உயர்ந்திருப்பேன். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 1,10-11).
தேவன் தரும் வாக்குத்தத்தங்களை நினைவுகூர்வதும், அவருடைய பிரசன்னம் நம்மோடிருந்து, நமக்கு உதவியாயிருக்கின்றது என்ற எண்ணமும் நம் இருதயங்களை புதுப்பிக்கின்றன, கடினமான வேளைகளைக் கடந்து செல்வதற்கு ஊக்கமும் நம்பிக்கையையும் தருகின்றன.
முழு மன திருப்தி
அது எப்படி இருக்கும் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஓர் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கட்டணத்தொகை பில்கள் வந்த வண்ணம் இருந்தன – மயக்க மருந்து மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், ஆய்வு கூடம், மற்றும் தங்கும் வசதி என பில்கள் வந்தன. அவசர அறுவை சிகிச்சை முடித்துக் கொண்ட ரோகனின் அநுபவம் இது. “நாங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இன்சுரன்ஸ் கம்பெனிக்கு கட்ட வேண்டியிருந்தது. இந்த பில்களையெல்லாம் கட்டிய பின்னர் தான், எங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க முடியும், எனக்கும் திருப்தியாக இருக்கும். சில வேளைகளில், நான், என்னைத் தாக்கும் அநேக கிரிக்கெட் பந்துகளையெல்லாம் அடித்து வெளியே தள்ளுவதைப் போன்று உணர்கின்றேன்” என்று கூறினான்.
சில வேளைகளில், நம் வாழ்க்கையும் இதேப் போன்று உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்து விளக்குகின்றார். அவர், தேவையிலிருப்பது என்ன என்பதை நான் அறிவேன், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்” (பிலி. 4”11) என்கின்றார். அதன் ரகசியம் என்ன? “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13) என்பதே. நான் ஒரு திருப்தியற்ற வேளையைக் கடந்து சென்ற போது, “அது இங்கே இல்லையென்றால், அது எங்கேயிருக்கிறது?” என்ற வாசகத்தை ஒரு வாழ்த்து அட்டையில் படித்தேன். இந்த வாசகம் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. நான் இங்கே, இப்பொழுது திருப்பதியாக வாழவில்லையெனின், வேறெந்த சூழலில் நான் திருப்தியாக வாழ முடியும் என நினைக்கிறேன்?
இயேசுவைச் சார்ந்து வாழ நாம் எப்படி கற்றுக் கொள்வது? நம்முடைய கவனத்தை அவர் மீது வைப்பதன் மூலமாக. நன்மையானவற்றை அநுபவிப்பதோடு, நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். உண்மையுள்ள பரமத் தந்தையைப் பற்றி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும், நம்பிக்கையிலும் பொறுமையிலும் இன்னும் வளர வேண்டும். நம்மைக் குறித்து அல்ல, தேவனைக் குறித்து அறிந்து கொள்வதே வாழ்க்கை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும், கிறிஸ்துவுக்குள் திருப்தியோடு வாழ கற்றுத் தரும்படி அவரிடம் கேட்க வேண்டும்.
தனக்குச் சொந்தமான இடம்
தங்களுடைய வாழ்க்கைத் துணையை இழந்த, சோகமான நிகழ்வுக்குச் சில ஆண்டுகளுக்குப் பின், ராபியும், சபரினாவும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொண்டதன் மூலம் இரு குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்தனர். அவர்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டி, அதற்கு ஹாவிலா என்று பெயரிட்டனர் (எபிரேய மொழியிலே வேதனையில் உழன்று இதனைப் பெற்றேன் என்று அர்த்தம்). அழகிய ஒன்றினை வேதனையின் வழியாக உருவாக்குவதை இது காட்டுகிறது. எங்களுடைய பழைய வாழ்வை மறப்பதற்காக இவ்வீட்டைக் கட்டவில்லை, மாறாக, “சாம்பலில் இருந்து வாழ்வைப் பெற்றோம் என்ற நம்பிக்கையை கொண்டாடவே” இதைக் கட்டினோம் என்றனர் அந்த தம்பதியினர். “இது சொந்தம் கொண்டாடும் ஒரு இடம், வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு இடம், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை பற்றிக் கொள்ளும் ஒரு இடம்” என்று அவர்கள் கூறினர்.
இது இயேசு கிறிஸ்துவிற்குள் நம் வாழ்வை அழகாகச் சித்தரிக்கின்றது. அவர் நம்மை சாம்பலிலிருந்து தூக்கி எடுத்து, அவருக்குச் சொந்தமான இடமாக்குகின்றார். நாம் அவரை ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நம்முடைய இருதயங்களில் தங்குவார் (எபே. 3:17). இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மை அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்கின்றார் (1:5-6), எனவே நாம் அவருக்குச் சொந்தமானவர்களாகிறோம். நாம் அனைவருமே வேதனைகளின் வழியாகக் கடந்து வந்துள்ளோம், தேவன் அவற்றை, நம் வாழ்வில் நன்மையாக மாற்றித் தருவார்.
ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய அன்பினை உணர்ந்து, அவர் நமக்குத் தந்துள்ளவற்றைக் கொண்டாடும் போது, தேவனை அறிந்துகொள்வதில் வளருவதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுகிறோம். அவர் நம்மோடு இருக்கும் போது தான் நான் வாழ்வின் முழுமையைப் பெற்றுக் கொள்கின்றோம், அவரின்றி நம் வாழ்வு பரிபூரணமடைய முடியாது (வச. 19). அவரோடு நாம் பெற்றுக் கொள்கின்ற இந்த உறவு என்றும் நிலைத்திருக்கும் உறவு என்று அவர் வாக்களிக்கின்றார். இயேசுவே நமக்குச் சொந்தமான இடம், நம் வாழ்வைக் கொண்டாட காரணமானவர் இயேசுவே, இப்பொழுதும், எப்பொழுதும் நம் நம்பிக்கையாக இருப்பவரும் இயேசுவே.
ஒரே ராஜா
ஐந்து வயதான எலியா இயேசு பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார் என்று போதகர் கூறியதை கவனித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவர் ஜெபிக்கும் போது, நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் எனக் கூறி, நன்றி செலுத்திய போது, அவன், திணறியவனாய், “ஓ, இல்லை! அவர் மரித்துவிட்டாரா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
இவ்வுலகில், இயேசு கிறிஸ்து தன் வாழ்வைத் துவங்கிய நாளிலிருந்து, அநேகர் அவர் மரிக்க வேண்டுமென விரும்பினர். ஏரோது அரசனின் ஆட்சி காலத்தில், ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” என்றார்கள். (மத்.2:2) அரசன் இதைக் கேட்ட போது, ஒரு நாள், தன்னுடைய அரசாட்சியை இயேசுவிடம் இழக்க நேரிடும் என்று பயந்தான். எனவே அவன், தன் படை வீரர்களை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப் புறங்களிலுள்ள அனைத்து இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளையும் கொன்று போட்டான். ஆனால் தேவன், அவருடைய மகனைப் பாதுகாக்க, ஒரு தூதனை அனுப்பி, அவருடைய பெற்றோரை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி, குழந்தையைக் காப்பாற்றினார்கள். (வ.13-18)
இயேசு, தன்னுடைய ஊழியக் காலத்தை நிறைவு செய்த போது, உலக மக்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார். அவரைக் கேலி செய்யும் படியாக, பிலாத்து அவருடைய சிலுவைக்கு மேலாக, “இவர் இயேசு, யூதருக்கு ராஜா” என்று எழுதி வைத்தான் (27:37). ஆனால் மூன்று நாளைக்குப் பின், அவர் வெற்றியாக, கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக உட்கார்ந்தார். (பிலி. 2:8-11)
இந்த ராஜா, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்- உன்னுடைய ,என்னுடைய, மற்றும் எலியாவின் பாவங்களுக்காக மரித்தார். நம்முடைய இருதயங்களை அவர் ஆட்சி செய்யும் படி, அவரிடம் கொடுப்போம்.
அழகிய கனி
மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.
இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.” என்பதாக விளக்குகின்றார் (வச. 15).
நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.
தேவனுடைய விருப்பதின் படியே ஆகட்டும்
நாங்கள் நியூயார்க் செல்லும் வழியில் ஒமகசே என்ற ஜப்பானிய உணவகத்திற்குச் சென்றிருந்த போது, நாட்டே, ஷெர்லின் ஆகிய இருவரும் அதனை மிகவும் ரசித்தனர். ஒமகசே என்பதற்கு ” உன்னுடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் “என்று அர்த்தம். இவ்வகை உணவகங்களுக்கு வருபவர்களின் உணவை சமையற்காரரே தீர்மானிப்பார். இந்த வகை உணவகத்திற்கு முதல் முறையாக வந்திருந்த போதிலும், இதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருந்த போதிலும், அந்த சமையற்காரர் தேர்ந்தெடுத்து தயாரித்த உணவை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர்.
இந்த கருத்தினைப் போன்று, நாம் தேவனிடம் எடுத்துச் செல்லும் ஜெபங்களை “நான் உம்முடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று கூறுவது சிறந்ததாகும். இயேசு அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிப்பதைக் கண்ட சீடர்கள் (லூக். 5:16) இயேசுவிடம் தங்களுக்கும் ஜெபிக்க கற்றுத் தருமாறு கேட்கின்றனர். இயேசு, அவர்களின் அனுதின தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், சோதனையில் விழாதபடி காக்கவும் ஜெபிக்க கற்பிக்கின்றார். இந்த ஜெபத்தின் மற்றொரு பகுதி நம்மை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கும் படி கூறுகிறது. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும் படி கற்பித்தார்.
நம்முடைய தேவைகளை நாம் ஜெபத்தில் தேவனிடம் ஊற்றிவிட வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் விருப்பங்களைக் கேட்க விரும்புகின்றார், அவற்றைக் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றார். ஆனால் நாம் குறைவுள்ள மனிதர்கள், நமக்கு எது நல்லது என்பது தெரியாது எனவே, தாழ்மையான சிந்தையோடு, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. அவர் நம்பத்தகுந்தவர், அவர் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நமக்கு தருவார் என்ற நம்பிக்கையோடு, ஜெபத்திற்கான பதிலையும் அவரிடமே விட்டு விடுவோம்.