மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.

இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”  என்பதாக விளக்குகின்றார் (வச. 15).

நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.