எருசலேம் நகரத்தின் கிழக்குப் பக்கத்தில், இயற்கையில் அமைந்த ஒரு நீரூற்று உள்ளது. அந்தக் காலத்தில், அப்பட்டணத்திற்குத் தண்ணீர் தரக்கூடிய ஒரே ஊற்று அதுதான். ஆனால், அது பட்டணத்தின் அலங்கத்திற்கு வெளியே அமைந்துள்ளது. எருசலேம் நகரத்தைப் பிடிப்பதற்கு உகந்த இடம் இதுதான். ஊடுருவ முடியாத இப்பட்டணத்தை, எதிரிகள் வளைந்து கொண்டு, இந்த நீரூற்றை வேறு திசைக்குத் திருப்பவோ, அல்லது அதன் நீரைத் தடுத்து நிறுத்தவோ செய்தால், அப்பட்டணத்தாருக்குச் சரணடைவதை விட வேறு வழியில்லை.

இந்த பெலவீனத்தையறிந்த எசேக்கியா ராஜா, கடினமான மலை வழியே 1750 அடி நீளமுள்ள கால்வாயை வெட்டி, அதன் வழியே தண்ணீரை பட்டணத்துக்குள் உள்ள குளத்திற்குக் கொண்டு வந்தான் (2 இரா. 20:20, 2 நாளா. 32:2-4). இவை எல்லாவற்றிலும், அதைச் செய்தவரை, அவர் நோக்காமலும், அதை ஏற்படுத்தி, தூரத்திலிருந்து வரும்படி திட்டம் பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள், என்று எசேக்கியாவைக் குறித்து கூறுகின்றார் (ஏசா. 22:11) எதைத் திட்டம் பண்ணினார்?

எருசலேம் பட்டணத்திற்குத் தண்ணீர் தரும் ஊற்றை, பட்டணத்திற்கு வெளியே இருக்குமாறு திட்டமிட்டவர் தேவன் தாமே. அந்தப் பட்டணத்தினுள் வாசம் பண்ணுவோர், தங்களுடைய இரட்சிப்புக்கு தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருக்கும்படி அவர்களுக்கு தொடர்ந்து நினைப்பூட்டவே, அந்த  நீரூற்றை பட்டணத்திற்கு வெளியே அமைத்தார். 

இது நம்முடைய குறைபாடுகளும், நம்முடைய நலனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுலும், தனக்கிருந்த குறைகளைக் குறித்துக் கூறும் போது, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9) என்கின்றார். எனவே, நாமும் நமக்கிருக்கின்ற குறைகளை, தேவனுடைய பெலன் நம்மில் வெளிப்படும் படி, கொடுக்கப்பட்ட ஈவுகளாகக் கருதுவோமா?