“அநேக ஆண்டுகளுக்கு முன்பு, உனக்காக ஜெபிக்கும் படி, நான் அடிக்கடி தூண்டப்பட்டேன். ஏன் என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டேன்.” இந்தச் செய்தியின் வார்த்தைகள், என்னுடைய ஒரு பழைய சிநேகிதியிடமிருந்து வ ந்தது. அத்தோடு, அவளுடைய வேதாகமத்தில் வைத்துள்ள ஒருஜெபக்குறிப்பின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தாள். “ஜேம்ஸ்ஸுக்காக ஜெபி, அவனுடைய மனது, எண்ணங்கள், வார்த்தைகளுக்காக ஜெபி.” என்றிருந்தது. என்னுடைய பெயருக்கு அருகில், அவள் மூன்று தனித் தனியான வருடங்களைக் குறிப்பிட்டிருந்தாள்.

நான் அந்த வருடங்களைப் பார்த்த போது, திகைத்துப் போனேன். நான் மீண்டும் அவளிடம், எந்த மாதத்திலிருந்து ஜெபிக்கத் துவங்கினாள் எனக் கேட்டேன். அவள், “ஏறத்தாள ஜுலை மாதத்திலிருந்து,” என பதிலளித்தாள்.

அந்த மாதத்திலிருந்து தான், நான் உயர் கல்விக்காக, வெளிநாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அங்கு, நான் அறிமுகமில்லாத கலாச்சாரத்தையும், மொழியையும் சந்திக்க வேண்டும். எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, என்னுடைய விசுவாசத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். நான் அந்த ஜெபக் குறிப்பை பார்த்தபோது, விலையேறப்பெற்ற ஈவாகிய ஜெபத்தைப் பெற்றுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

என்னுடைய சிநேகிதியின் கரிசனை, மற்றும் ஒருவர் ஜெபிக்கத் “தூண்டுவதை,” எனக்கு நினைப்பூட்டியது. இளம் ஊழியரும் நண்பருமான தீமோத்தேயுவுக்கு பவுல் ஆலோசனை கூறும் போது,” நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனின், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும்,வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.”(1 தீமோ 2:1).இதில் “பிரதானமாய்” என்ற சொல், மிக முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியும் அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.”(வ.4) என பவுல் இயேசுவைக் குறித்து விளக்குவதால், நம்முடைய ஜெபங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிகின்றது.

விசுவாசமுள்ள ஜெபத்தின் மூலம், தேவன் எண்ணற்ற வழிகளில் பிறரைச் சந்தித்து, உற்சாகப்படுத்தி, அவர்களைத் தம்மண்டை இழுத்துக்கொள்கின்றார். சிலரைக் குறித்து நினைவு வரும் போது, அவர்கள் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம், ஆனால் தேவன் அறிவார். நாம் அவர்களுக்காக ஜெபிக்கும் போது, தேவன் அந்த நபருக்கு உதவி செய்வார்!