நாங்கள் நியூயார்க் செல்லும் வழியில் ஒமகசே என்ற ஜப்பானிய உணவகத்திற்குச் சென்றிருந்த போது, நாட்டே, ஷெர்லின் ஆகிய இருவரும் அதனை மிகவும் ரசித்தனர். ஒமகசே என்பதற்கு ” உன்னுடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் “என்று அர்த்தம். இவ்வகை உணவகங்களுக்கு வருபவர்களின் உணவை சமையற்காரரே தீர்மானிப்பார். இந்த வகை உணவகத்திற்கு முதல் முறையாக வந்திருந்த போதிலும், இதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருந்த போதிலும், அந்த சமையற்காரர் தேர்ந்தெடுத்து தயாரித்த உணவை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டனர்.

இந்த கருத்தினைப் போன்று, நாம் தேவனிடம் எடுத்துச் செல்லும் ஜெபங்களை “நான் உம்முடைய விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று கூறுவது சிறந்ததாகும். இயேசு அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிப்பதைக் கண்ட சீடர்கள் (லூக். 5:16) இயேசுவிடம் தங்களுக்கும் ஜெபிக்க கற்றுத் தருமாறு கேட்கின்றனர். இயேசு, அவர்களின் அனுதின தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், சோதனையில் விழாதபடி காக்கவும் ஜெபிக்க கற்பிக்கின்றார். இந்த ஜெபத்தின் மற்றொரு பகுதி நம்மை முற்றிலுமாக தேவனுக்கு அர்ப்பணிக்கும் படி கூறுகிறது. “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும் படி கற்பித்தார்.

நம்முடைய தேவைகளை நாம் ஜெபத்தில் தேவனிடம் ஊற்றிவிட வேண்டும். அவர் நம்முடைய இருதயத்தின் விருப்பங்களைக் கேட்க விரும்புகின்றார், அவற்றைக் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றார். ஆனால் நாம் குறைவுள்ள மனிதர்கள், நமக்கு எது நல்லது என்பது தெரியாது எனவே, தாழ்மையான சிந்தையோடு, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே சாலச் சிறந்தது. அவர் நம்பத்தகுந்தவர், அவர் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நமக்கு தருவார் என்ற நம்பிக்கையோடு, ஜெபத்திற்கான பதிலையும் அவரிடமே விட்டு விடுவோம்.