தனிதனியாக ஓடாதே
என்னுடைய கணவன் ஜாக் 26 மைல்கள் தொடர் ஓட்டத்தின் 25வது மைலில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் இழந்து விட்டார். இதுதான் அவருடைய முதல் மாரத்தான். இவர் தனியாக ஒடுகின்றார். உதவும் நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக நின்றபின், முற்றிலும் வலுவிழந்தவராக உணர்ந்து அருகிலுள்ள புல் தரையில் உட்கார்ந்து விட்டார். நிமிடங்கள் கடந்தன. அவரால் எழும்ப முடியவில்லை. அவர் இந்த ஓட்டத்திலிருந்து விலக்கிவிட எண்ணிய போது, கென்ட்டக்கியைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய இரு பள்ளி ஆசிரியைகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் அறிமுகமில்லாதவர்களாயிருந்த போதிலும் ஜாக்கை கவனித்து, தங்களோடு ஓட விரும்புகிறீர்களா? எனக்கேட்டார்கள். உடனடியாக அவருடைய பெலன் புதுப்பிக்கப்பட்டது. ஜாக் எழுந்த அந்த இரு பெண்களின் துணையோடு தன் ஓட்டத்தை முடித்தார்.
ஜாக்கை ஊக்குவித்த அவ்விரு பெண்களும் மோசேயின் இரு நண்பர்களான ஆரோன், ஊர் என்பவர்களை எனக்கு நினைப்பூட்டுகிறது. இவ்விருவரும் இஸ்ரவேலரின் தலைவன் மோசேக்கு ஒரு முக்கிய கட்டத்தில் உதவினர் (யாத். 17:8-13). இஸ்ரவேலர் எதிரிகளால் தாக்கப்படுகின்றனர். அந்த போர்க்களத்தில் மோசே தன் கோலை உயர்த்தி பிடித்த போது (வச. 11) இஸ்ரவேலர் மேற்கொண்டனர். மோசேயின் கைகள் தளர்ந்து போகையில், ஆரோனும், ஊரும் மோசேயின் இருபுறமும் நின்று அவனுடைய புயங்களை சூரியன் மறையும் வரை தாங்கிப் பிடித்தனர் (வச. 12).
தேவனைப் பின்பற்றுவது என்பது ஒரு தனி முயற்சியல்ல. நம் வாழ்க்கை ஓட்டத்தை தனியாக ஓட அவர் நம்மை உருவாக்கவில்லை. தேவன் நம்மை அழைத்த காரியங்களைக் செய்ய முற்படும் போது நண்பர்கள் நமது கஷ்டங்களில் நமக்கு உதவியாக வந்து கஷ்டங்களைக் கடந்து செல்ல உதவுகின்றனர்.
கர்த்தாவே, நான் உம்மை தொடர்ந்து பின்பற்ற என்னை ஊக்குவிக்கின்ற உறவுகளுக்காக உமக்கு நன்றி சொல்லுகின்றேன். நானும் பிறரை பெலப்படுத்துகின்ற ஒருவனாக விளங்க எனக்கு உதவியருளும்.
சுத்தமாக்கப்பட்டோம்!
பாத்திரம் கழுவும் மெஷினை நான் திறந்தபோது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பளபளக்கும் பாத்திரங்களைக் காண்பதற்குப் பதிலாக, சாக்பீஸ் பொடி போன்ற ஒன்றால் மூடப்பட்ட பாத்திரங்களையும் கோப்பைகளையும் நான் அங்கிருந்து அகற்றினேன். எங்கள் பகுதியிலுள்ள கடின நீர் இப்படி கேடு விளைவித்தோ அல்லது அந்த இயந்திரம் பழுதாகி விட்டதா என திகைத்தேன்.
அந்தக் கெட்டுப்போன பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் போலல்லாது, தேவன் நமது அனைத்து அசுத்தங்களையும் சுத்திகரிக்கிறார். எசேக்கியேல் தேவனுடைய அன்பு மற்றும் மன்னிக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, தேவன் தமது மக்களைத் திரும்பவும் தம்மிடம் வரவழைப்பதை எசேக்கியேலின் புத்தகத்தில் காண்கிறோம். தங்களது ஐக்கியத்தை மற்ற தேவர்களோடும் பிற நாடுகளோடும் பிரகடனப்படுத்திய இஸ்ரவேலர் இப்படி தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். என்றபோதிலும், அவர்களைத் தம்மிடம் வரவழைப்பதில் தேவன் கிருபையாய் இருந்தார். அவர், “உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்தமாக்குவேன்” (36:25) என வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் உள்ளத்திலே அவர் தமது ஆவியானவரை வைத்தார் (வச. 27). அவர்களைப் பஞ்ச நாட்டிற்கல்ல, செழிப்பான தேசத்துக்கு அவர் கொண்டுவருவார் (வச. 30).
எசேக்கியேலின் காலத்தைப் போலவே, நாம் வழி தப்பிப் போயிருப்போமானால் நம்மைத் திரும்பவும் தம்மண்டைக்கு அவர் வரவேற்கிறார். அவரது வழிகளுக்கும் அவரது சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நமது பாவங்களிலிருந்து நம்மை அவர் கழுவி நம்மை மறுரூபப்படுத்துகிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் மூலம், ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்ற அவர் நமக்கு உதவி செய்கிறார்.
அறுவடைக்குத் தயாராக உள்ளது!
கோடை கால முடிவில் இங்கிலாந்தின் நியூ ஃபாரெஸ்ட் பகுதியில் நடந்து சென்றோம். காட்டில் வளர்ந்திருந்த கருப்பு பெர்ரி பழங்களை பிடுங்கிக்கொண்டே பக்கத்தில் துள்ளிக் குதித்த குதிரைகளை ரசித்தவாறு நடந்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பாக மற்றவர்களால் பயிரிடப்பட்ட திரளான இனிய கனிகளை நான் சுவைத்தபோது, இயேசுவானவர் தமது சீஷருக்குச் சொன்ன வார்த்தைகளை நினைத்தேன், “நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன் (யோவா. 4:38).
இவ்வசனங்கள் பிரதிபலிக்கும் தேவ இராஜியத்தின் தாராளத் தன்மையை நான் நேசிக்கிறேன். மற்றவரது கடின உழைப்பின் பலனை நாம் அனுபவிக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார். இது, இரட்சிக்கப்படாத ஒருத்தியின் பெற்றோர் உறவினர் அவளது இரட்சிப்பிற்காய் பல ஆண்டுகள் ஜெபித்திருக்க, நாம் சென்று அவளுடன் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து அவளை இரட்சிப்பிற்குள்ளாய் நடத்துவதைப் போன்றது. இயேசுவானவரின் வார்த்தைகளில் பொதிந்துள்ள எல்லை கட்டுப்பாட்டையும் நான் நேசிக்கிறேன். நாம் ஒருபோதும் பலனை அனுபவிக்க முடியாதென்றாலும், நாம் விதைகளை விதைக்கலாம், இன்னொருவர் அதை அறுவடை செய்யலாம். ஆனபடியால், பலன்களுக்கு நாம்தான் காரணமென பெருமையாய் நினைக்காமல் நம் முன் உள்ள வேலைகளைச் செய்வதில் நாம் மும்முரமாய் ஈடுபடலாம். தேவனுடைய பணி நம்மை நம்பி நடப்பதன்று. ஒரு மகத்தான அறுவடைக்கான எல்லா ஆதாரங்களையும் தேவன் வைத்திருக்கிறார். அதில் ஒரு பங்காக நாம் மாறுவது நமது பாக்கியமாகும்.
எந்த வயல்கள் அறுவடைக்கு ஆயத்தமாகி உங்கள் முன் இருக்கின்றன? எனக்கு முன் இருக்கின்றன? இயேசுவின் அன்பான அறிவுரையை நாம் கேட்போமாக: “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்தும் பாருங்கள்” (யோவா. 4:35).
பயமல்ல விசுவாசமே!
“எனது கணவர் பதவி உயர்வு பெற்று இன்னொரு நாட்டிற்கு அனுப்பப்படவிருந்தார். ஆனால் எனக்கு வீட்டை விட்டுச் செல்ல பயம். எனவே அவர் மிகுந்த தயக்கத்துடன் அந்த வாய்ப்பை வேண்டாமெனக் கூறிவிட்டார்” என்று என் தோழி என்னிடம் கூறினாள். ஒரு பெரிய மாற்றத்திற்காக பயமடைந்து ஒரு புதிய புத்துணர்வளிக்கும் வாய்ப்பை தான் தவறவிட்டதையும், வாழ்க்கையில் தான் இவ்வாறு இழந்ததை எண்ணி வருந்தியதையும் அவள் என்னோடு பகிர்ந்துகொண்டாள்.
“பாலும் தேனும் ஓடுகிற” (எண். 33;3) ஒரு வளமிக்க பசுமையான நாட்டை சுதந்தரிக்க அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களது பயமிக்க நினைவுகள் செயலிழக்க வைத்தன. பெரிய நகரங்களில் பெலமிக்க மக்கள் வாழ்வதாகக் கேள்விப்பட்டபோது அவர்களது பயம் பெருகியது (வச. 27) தேசத்தினுள் நுழையும் அழைப்பை பெரும்பாலான இஸ்ரவேலர்கள் நிராகரித்தனர்.
யோசுவாவும் காலேபும் தேவனை நம்பும்படி அவர்களிடம் கெஞ்சினார்கள், “அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 9) அங்கிருந்த ஜனங்கள் உருவத்தில் பெரியவர்களாயிருந்த போதிலும், தேவன் தங்களோடு இருப்பதை இஸ்ரவேலர் நம்பவேண்டும்.
வேறொரு தேசத்திற்கு செல்லும்படி, இஸ்ரவேலரைப் போல எனது தோழிக்கு யாரும் கட்டளை இடவில்லை. எனினும் பயத்தினால் அவ்வாய்ப்பை அவள் நழுவ விட்டாள். நீங்கள் எப்படி? ஒரு பயமிக்க சூழ்நிலையை சந்திக்கிறீர்களா? அப்படியானால், தேவன் உங்களோடிருக்கிறார். அவர் உங்களை வழிநடத்துவார் என்பதை நம்புங்கள். அவரது ஒருபோதும் கைவிடாத அன்பைப் பெற்று, விசுவாசத்தில் நாம் முன்னேறலாம்.
அனைத்திற்கும் ஒரு காலம்
சமீபகாலத்தில் நான் விமானப் பயணத்தை மேற்கொண்டபொழுது நான் இருந்த வரிசைக்கு சில வரிசைகளுக்கு முன்பாக, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த ஒரு தாயாரைப் பார்த்தேன். தளிர் நடை நடக்கும் சிறுவன் மன திருப்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தாயோ அண்மையில் பிறந்த அவளது குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து, அதன் கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை ஆச்சரியம் நிறைந்த கண்களால் தன் தாயாரைப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட நான் கடந்த காலத்தில் அந்தப் பருவத்திலிருந்த எனது குழந்தைகளை எண்ணிப் பார்த்து எவ்வளவாக காலம் கடந்து விட்டது என்பது பற்றி சற்று ஏக்கத்துடன் கூடிய மகிழ்ச்சியடைந்தேன்.
பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் ராஜா கூறிய வார்த்தைகளை எண்ணிப்பார்த்தேன். “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” (வச. 1). அதைத் தொடர்ந்து பல எதிர் மறைக் காரியங்களைக் கூறி “ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” என்று கூறியுள்ளார். “பிறக்க ஒருகாலமுண்டு; இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு” என்று எழுதியுள்ளார் (வச. 2). சாலொமோன் ராஜா, இவ்வுலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களையும் கண்டு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது என்று கருதி, அவரது நம்பிக்கையற்ற நிலைமையை ஒருவேளை இவ்வசனங்களில் விளக்கியிருக்கலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்து, குடித்து தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது, தேவனுடைய அனுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்” (வச. 13,14) என்று கூறி ஒவ்வொரு சமயத்திலும் தேவன் இடைபடுவதை அறிக்கை செய்துள்ளார்.
எனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்ததை நான் ஏக்கத்துடன் நினைத்துப் பார்த்ததுபோல நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் கடந்து சென்ற சில நிகழ்ச்சிகளை ஏக்கத்துடன் நினைவு கூருவோம். நமது வாழ்க்கையின் எந்த காலக்கட்டத்திலும் கர்த்தர் நம்முடன் கூட இருப்பதாக வாக்குப்பண்ணியுள்ளார் (ஏசா. 41;10). நமது வாழ்க்கையின் நோக்கம் அவரது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக அவரோடு சேர்ந்து நடப்பதாகும்.
நேருக்கு நேராக (முகமுகமாய்)
முன் ஒரு பொழுதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது உலகம் மின்னணுவியல் தொழில் நுட்பத்தால் இணைக்கப்பட்டிருந்தாலும், மனிதர்கள் கூடிவரும்பொழுது ஏற்படும் உணர்வை எதினாலும் ஈடுகட்ட இயலாது. நாம் ஒருவரொடொருவர் சிரித்து மகிழும்பொழுது நம்மை அறியாமலேயே மற்ற மனிதரின் முகத்தில் தோன்றும் அசைவுகள்மூலம் அவரது உள் உணர்வுகளை உணர்ந்து கொள்ளுகிறோம். ஒருவரையொருவர் நேசிக்கும் குடும்ப அங்கதினர்களோ அல்லது சினேதிதர்களோ யாராக இருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்துத் தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.
தேவன் அவரது ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திசெல்வதெற்கென்று தெரிந்தெடுத்த மோசேக்கும் அவருக்கும் இடையே இந்த நேருக்கு நேரான உறவை காணலாம். அநேக ஆண்டுகளாக மோசே தேவனை பின்பற்றுவதில் மிகவும் உறுதியோடும், நம்பிக்கையோடும் இருந்தான். அவன் வழி நடத்தி வந்த ஜனங்கள் விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டு, அவனுக்கு விரோதமாக எழும்பின பொழுதும்கூட அவன் தொடர்ந்து தேவனைப் பின்பற்றினான். தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னிலான ஒரு கன்றுக்குட்டியை ஆராதனை செய்தபொழுது (யாத். 32) தேவனை சந்திக்க பாளயத்திற்கு வெளியே மோசே ஒரு கூடாரத்தைப் போட்டான். ஜனங்களோ தூரத்திலிருந்து அக்காட்சியைக் காண வேண்டும் (யாத். 33:7-11). தேவ பிரசன்னத்தின் அடையாளமாக கூடாரத்தின் மேல் அக்கினி ஸ்தம்பம் இறங்கின பொழுது, மோசே ஜனங்கள் சார்பில் தேவனோடு பேசினான். தேவனது பிரசன்னம் அவர்களோடு செல்லும் என்று தேவன் வாக்குப் பண்ணினார் (வச. 14).
இயேசுவின் சிலுவை மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும், இப்போது நமக்காக தேவனோடு பேச மோசேயைப் போன்ற ஆட்கள் நமக்கு தேவை இல்லை. பதிலாக சீஷர்களோடு இயேசு கொண்டிருந்த உறவைப்போல நாமும் கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு அன்பான உறவு கொள்ளலாம் (யோவா. 15:16). இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒருவன் அவனது சினேகிதனோடு பேசுவது போல நாமும் தேவனோடு பேசலாம்.
ஒய்வெடுக்க ஒருநாள்
ஒரு ஞாயிற்றுக்கிழமை வடக்கு லண்டன் பகுதியின் வழியாக சல, சல வென்று ஓசையோடு ஓடிக்கொண்டிருந்த ஓர் ஓடையின் அருகில் நான் நின்று கொண்டு, கட்டடங்களால் நிறைந்திருந்த எங்கள் பகுதிக்கு அந்த ஓடை எவ்வளவு அழகைக் கொண்டு வருகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தேன். அலை, அலையாய் விழும் அந்த ஓடை நீரை பார்த்தபொழுதும், பறவைகள் பாடல்களைக் கேட்ட பொழுதும் எனது சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றேன். நமது ஆத்துமாக்களுக்கு ஓய்வு கொடுக்க இப்படியாக நமக்கு உதவி செய்யும் தேவனுக்கு நான் நன்றி கூறினேன்.
ஆதிகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து வந்த அவருடைய ஜனங்களுக்கு ஓய்வு கொடுக்கவும், அதன்மூலம் அவர்கள் புது பெலன் அடையவும், ஓய்வு நாளை ஆசரிக்கும்படி தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஏனெனில், அவர்கள் செழிப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். யாத்திராகமத்தில் நாம் பார்ப்பதுபோல், அவர்களது வயல் வெளிகளில் ஆறு ஆண்டுகள் பயிரிடவும், ஏழாம் ஆண்டு ஓய்வு கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். அதுபோலவே ஜனங்கள் ஆறு நாட்கள் வேலை செய்யவும், ஏழாம் நாள் ஓய்ந்திருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். இந்த விதமாக தேவன் கட்டளையிட்ட வாழ்க்கை முறையினால் இஸ்ரவேல் மக்கள் மற்ற தேச மக்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்கள். அவரது சொந்த ஜனங்கள் மட்டுமல்லாது, அவர்களது மத்தியில் வசிக்கும் அந்நியரும், அடிமைகளும்கூட அதே வாழ்க்கை முறையைக் கையாள அனுமதிக்கப்பட்டார்கள்.
நமது ஓய்வு நாளை எதிர்பார்ப்போடும், செயல் திறமையோடும், நமது ஆத்துமாக்களை போஷிக்கத்தக்கதான காரியங்களைச் செய்து தேவனை ஆராதிப்பதற்கு நமக்கு கிடைக்கக் கூடிய தருணங்களை பயன்படுத்த ஆயத்தமாக இருப்போம். இவைகள் நமது விருப்பத்தைப் பொறுத்தது. சிலர் விளையாட விரும்புவார்கள். சிலர் தோட்ட வேலைகள் செய்ய விரும்புவார்கள். சிலர் அவர்களது சினேகிதரோடும், குடும்பத்தாரோடும் சேர்ந்து உணவு உண்டு மகிழ விரும்புவார்கள்.
நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட தருணங்கள் இல்லாதிருந்தால், ஓய்வெடுப்பதற்காக ஒர் நாளை ஒதுக்குவதினால் கிடைக்கக்கூடிய சிறப்பையும், மகிழ்ச்சியையும் நாம் எவ்வாறு மறுபடியும் பெற்று கொள்ள இயலும்?
செயல்படும் விசுவாசம்
ஒரு நாள் என் தோழி காரை ஓட்டிக்கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அப்பொழுது சாலை ஓரத்திலே நடந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவள் கண்டபோது, காரை நிறுத்தி அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆகவே அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டாள். பிறகு, அவளுடைய நிலைமையை கேட்டறிந்தபோது என் தோழிக்கு மிகுந்த துக்கமாயிற்று. ஏனென்றால் அப்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், பல மைல் தூரத்திலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு இவ்வுஷ்ணமான வேளையிலும் நடந்து சென்றுகொண்டிருந்தாள். அதுமட்டுமின்றி காலையிலே வேலைக்கு வருவதற்கும் அதிகாலை 4 மணிக்கே வீட்டைவிட்டு பல மணிநேரம் நடந்தே வந்துள்ளாள்.
அப்பெண்ணை காரிலே அழைத்து சென்றதின் மூலம், கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய விசுவாசத்தை கிரியைகளிலே காண்பிக்க வேண்டும் என்னும் யாக்கோபின் அறிவுரைகளை, என் தோழி இந்நவீன காலக்கட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளால். “விசுவாசம் கிரியை களில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்,” என யாக்கோபு கூறியுள்ளார் (2:17). சபையானது விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் காக்க வேண்டுமென்றார் (1:27). மேலும், வீண்வார்த்தைகளை சாராமல், அன்பின் கிரியைகளினாலே விசுவாசத்தை செயல் படுத்தி காட்டும்படி ஏவினார்.
நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம்; கிரியைகளினாலல்ல. ஆனால், தேவைகளோடு இருப்பவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது, நம்முடைய விசுவாசத்திலே நாம் ஜீவிக்கவும் செயல்படவும் செய்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்திலே நாம் இணைந்து பயணிக்கும்போது, நம் கண்களை எப்பொழுதும் திறந்துவைத்து, காரில் அழைத்துச் சென்ற என் தோழியைப்போல, தேவையோடு இருப்பவர்களைக் கண்டு உதவிடுவோமாக.
சமாதான பிணைப்பு!
ஒரு விஷயத்திலே, எனக்கும் என் தோழிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக்குறித்து மின்னஞ்சல்(e-mail) மூலம் நான் வெளிப்படையாக அவளிடம் பேசிய பிறகு அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. ஒருவேளை நான் அப்படி பேசியிருக்கக்கூடாதோ என எண்ணத் தோன்றியது. அவளை கேள்விகள் கேட்டு பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் அவள் வெளிநாட்டிற்கு பிரயாணப்படுமுன் இப்பிரச்சனையை தீர்த்துவிட எண்ணினேன். இதற்குமேல் என்ன செய்வது என தெரியாமல், என் மனதிலே அவள் தோன்றும் பொழுதெல்லாம் அவளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். பின்பு ஒரு நாள், காலை வேளையில் அருகில் உள்ள பூங்காவிற்கு நான் சென்ற போது, அவளை அங்கு கண்டேன். அவள் என்னை பார்த்த மாத்திரத்தில், அவளுடைய முகத்தில் வலி படர்ந்ததையும் கண்டேன். ஆனால், “தேவனே, இன்று அவளோடு பேச எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நன்றி,” என்று தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, புன்னகையோடு அவளை அணுகினேன். பின்பு நாங்கள் இருவரும் மனந்திறந்து பேசி பிரச்சனையை சரிசெய்து கொண்டோம்.
சில சமயங்களில், நம்முடைய உறவுகளில் வேதனையோ மவுனமோ நுழைந்துவிட்டால் பிரச்சனையை சரிசெய்வது மிகக் கடினமாகிவிடுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளது போல, நம்முடைய உறவுகளில் தேவசுகம் உண்டாகும் பொருட்டு, சாந்தகுணத்தையும், தாழ்மையையும் பொறுமையையும் அணிந்துகொண்டு, சமாதானமும் ஐக்கியமும் உண்டாக நாம் செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என தேவன் ஏங்குகிறார். பூங்காவிலே எதிர்பாராத சந்திப்பினால் சமாதானத்தை ஏற்படுத்திய தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய ஜனத்தை ஒன்றிணைப்பார்.