பாத்திரம் கழுவும் மெஷினை நான் திறந்தபோது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பளபளக்கும் பாத்திரங்களைக் காண்பதற்குப் பதிலாக, சாக்பீஸ் பொடி போன்ற ஒன்றால் மூடப்பட்ட பாத்திரங்களையும் கோப்பைகளையும் நான் அங்கிருந்து அகற்றினேன். எங்கள் பகுதியிலுள்ள கடின நீர் இப்படி கேடு விளைவித்தோ அல்லது அந்த இயந்திரம் பழுதாகி விட்டதா என திகைத்தேன்.

அந்தக் கெட்டுப்போன பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் போலல்லாது, தேவன் நமது அனைத்து அசுத்தங்களையும் சுத்திகரிக்கிறார். எசேக்கியேல் தேவனுடைய அன்பு மற்றும் மன்னிக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, தேவன் தமது மக்களைத் திரும்பவும் தம்மிடம் வரவழைப்பதை எசேக்கியேலின் புத்தகத்தில் காண்கிறோம். தங்களது ஐக்கியத்தை மற்ற தேவர்களோடும் பிற நாடுகளோடும் பிரகடனப்படுத்திய இஸ்ரவேலர் இப்படி தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். என்றபோதிலும், அவர்களைத் தம்மிடம் வரவழைப்பதில் தேவன் கிருபையாய் இருந்தார். அவர், “உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்தமாக்குவேன்” (36:25) என வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் உள்ளத்திலே அவர் தமது ஆவியானவரை வைத்தார் (வச. 27). அவர்களைப் பஞ்ச நாட்டிற்கல்ல, செழிப்பான தேசத்துக்கு அவர் கொண்டுவருவார் (வச. 30).

எசேக்கியேலின் காலத்தைப் போலவே, நாம் வழி தப்பிப் போயிருப்போமானால் நம்மைத் திரும்பவும் தம்மண்டைக்கு அவர் வரவேற்கிறார். அவரது வழிகளுக்கும் அவரது சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நமது பாவங்களிலிருந்து நம்மை அவர் கழுவி நம்மை மறுரூபப்படுத்துகிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் மூலம், ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்ற அவர் நமக்கு உதவி செய்கிறார்.