ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள லார்ட் ஹோவே தீவு வெண்மை நிறமணலும் தெளிந்த தண்ணீரும் உள்ள ஒரு சிறிய அழகிய இடம். அத்தீவின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. இத்தீவில் மிகவும் சாதாரணமாக நீங்கள் கடல் ஆமைகளோடும் மீன்களோடும் பயமின்றி நீந்தலாம். உங்களருகே பெரிய எலும்பையுடைய மூன் இராஸே மீன்கள் தங்களது ஒளிரும் வண்ணங்களை வெளிப்படுத்தி விளம்பரப் பலகைகளை போலத் தோற்றமளிக்கும். அந்தக் கடலில் காயல் பகுதிகளில் பவளப்பாறைகளை நான் கண்டுபிடித்தேன். அங்கே சிவப்பு நிற க்ளவுன் மீன்களையும் மஞ்சள் கட்டங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி மீன்களையும் என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவ்வாறான இயற்கை மேன்மையினால் உள்ளம் கிளர்ந்தெழுந்து தேவனை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை.

எனது இவ்வித உணர்ச்சியின் எழுச்சிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் காரணம் கூறுகிறார். மிகவும் உன்னதமான படைப்புகள் தேவனுடைய சுபாவத்தை சற்று நமக்கு வெளிப்படுத்துகின்றன (ரோம. 1:20) லார்ட் ஹோவே தீவின் அற்புதங்கள் தேவனுடைய வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தின.

தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தேவனை தரிசித்தபோது, நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தில் மகிமையான வண்ணங்களால் சூழப்பட்ட ஒருவர் அவருக்குக் காணப்பட்டார் (எசே. 1:25-28). அப்போஸ்தலனாகிய யோவான் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். மரகதம் போன்ற வானவில்லால் சூழப்பட்ட விலையேறப் பெற்ற கற்களைப் போல ஜொலிக்கும் தேவனை அவர் கண்டார் (வெளி. 4:2-3). தேவன் தம்மை வெளிப்படுத்தும்போது அவர் நல்லவராகவும் வல்லமை மிக்கவராகவும் மட்டுமல்ல, அழகானவராகவும் வெளிப்படுகிறார். ஒரு சிற்பமானது அதை செய்தவரை பிரதிபலிப்பதைப்போல, சிருஷ்டியானது தேவனின் இந்த அழகை எடுத்துரைக்கிறது.      

தேவனுக்குப் பதிலாக இயற்கையை பல இடங்களில் மனிதர் தொழுதுகொள்ளுகிறார்கள் (ரோம. 1:25). இது மிகவும் துக்ககரமானது! பூமியின் தெளிவான தண்ணீர்களும் மினுமினுக்கும் உயிரினங்களும் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடவுளை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும்விட அதிக வல்லமையுள்ளவர், அதிக அழகுள்ளவர் அவர் மட்டுமே!