ஒரு ஞாயிற்றுக்கிழமை வடக்கு லண்டன் பகுதியின் வழியாக சல, சல வென்று ஓசையோடு ஓடிக்கொண்டிருந்த ஓர் ஓடையின் அருகில் நான் நின்று கொண்டு, கட்டடங்களால் நிறைந்திருந்த எங்கள் பகுதிக்கு அந்த ஓடை எவ்வளவு அழகைக் கொண்டு வருகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தேன். அலை, அலையாய் விழும் அந்த ஓடை நீரை பார்த்தபொழுதும், பறவைகள் பாடல்களைக் கேட்ட பொழுதும் எனது சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றேன். நமது ஆத்துமாக்களுக்கு ஓய்வு கொடுக்க இப்படியாக நமக்கு உதவி செய்யும் தேவனுக்கு நான் நன்றி கூறினேன்.

ஆதிகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து வந்த அவருடைய ஜனங்களுக்கு ஓய்வு கொடுக்கவும், அதன்மூலம் அவர்கள் புது பெலன் அடையவும், ஓய்வு நாளை ஆசரிக்கும்படி தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஏனெனில், அவர்கள் செழிப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். யாத்திராகமத்தில் நாம் பார்ப்பதுபோல், அவர்களது வயல் வெளிகளில் ஆறு ஆண்டுகள் பயிரிடவும், ஏழாம் ஆண்டு ஓய்வு கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். அதுபோலவே ஜனங்கள் ஆறு நாட்கள் வேலை செய்யவும், ஏழாம் நாள் ஓய்ந்திருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். இந்த விதமாக தேவன் கட்டளையிட்ட வாழ்க்கை முறையினால் இஸ்ரவேல் மக்கள் மற்ற தேச மக்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்கள். அவரது சொந்த ஜனங்கள் மட்டுமல்லாது, அவர்களது மத்தியில் வசிக்கும் அந்நியரும், அடிமைகளும்கூட அதே வாழ்க்கை முறையைக் கையாள அனுமதிக்கப்பட்டார்கள்.

நமது ஓய்வு நாளை எதிர்பார்ப்போடும், செயல் திறமையோடும், நமது ஆத்துமாக்களை போஷிக்கத்தக்கதான காரியங்களைச் செய்து தேவனை ஆராதிப்பதற்கு நமக்கு கிடைக்கக் கூடிய தருணங்களை பயன்படுத்த ஆயத்தமாக இருப்போம். இவைகள் நமது விருப்பத்தைப் பொறுத்தது. சிலர் விளையாட விரும்புவார்கள். சிலர் தோட்ட வேலைகள் செய்ய விரும்புவார்கள். சிலர் அவர்களது சினேகிதரோடும், குடும்பத்தாரோடும் சேர்ந்து உணவு உண்டு மகிழ விரும்புவார்கள்.

நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட தருணங்கள் இல்லாதிருந்தால், ஓய்வெடுப்பதற்காக ஒர் நாளை ஒதுக்குவதினால் கிடைக்கக்கூடிய சிறப்பையும், மகிழ்ச்சியையும் நாம் எவ்வாறு மறுபடியும் பெற்று கொள்ள இயலும்?