ஒரு நாள் என் தோழி காரை ஓட்டிக்கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அப்பொழுது சாலை ஓரத்திலே நடந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவள் கண்டபோது, காரை நிறுத்தி அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆகவே அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டாள். பிறகு, அவளுடைய நிலைமையை கேட்டறிந்தபோது என் தோழிக்கு மிகுந்த துக்கமாயிற்று. ஏனென்றால் அப்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், பல மைல் தூரத்திலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு இவ்வுஷ்ணமான வேளையிலும் நடந்து சென்றுகொண்டிருந்தாள். அதுமட்டுமின்றி காலையிலே வேலைக்கு வருவதற்கும் அதிகாலை 4 மணிக்கே வீட்டைவிட்டு பல மணிநேரம் நடந்தே வந்துள்ளாள்.

அப்பெண்ணை காரிலே அழைத்து சென்றதின் மூலம், கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய விசுவாசத்தை கிரியைகளிலே காண்பிக்க வேண்டும் என்னும் யாக்கோபின் அறிவுரைகளை, என் தோழி இந்நவீன காலக்கட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளால். “விசுவாசம் கிரியை களில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்,” என யாக்கோபு கூறியுள்ளார் (2:17). சபையானது விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் காக்க வேண்டுமென்றார் (1:27). மேலும், வீண்வார்த்தைகளை சாராமல், அன்பின் கிரியைகளினாலே விசுவாசத்தை செயல் படுத்தி காட்டும்படி ஏவினார்.

நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம்; கிரியைகளினாலல்ல. ஆனால், தேவைகளோடு இருப்பவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது, நம்முடைய விசுவாசத்திலே நாம் ஜீவிக்கவும் செயல்படவும் செய்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்திலே நாம் இணைந்து பயணிக்கும்போது, நம் கண்களை எப்பொழுதும் திறந்துவைத்து, காரில் அழைத்துச் சென்ற என் தோழியைப்போல, தேவையோடு இருப்பவர்களைக் கண்டு உதவிடுவோமாக.