மிகச் சிறந்த கலைஞராகிய மைக்கெலேஞ்ச (Michelangelo) இறந்தபொழது, அநேக நிறைவு பெறாத பணிகளை விட்டுச்சென்றார். ஆயினும், அவற்றில் நான்கு சிற்பங்கள் நிறைவு செய்யும் நோக்கத்தில் செதுக்கப்படவில்லை. ‘த பியர்டட் ஸ்லேவ்’ (The Bearded Slave – தாடி வைத்த அடிமை), ‘த அட்லஸ் ஸ்லேவ்’ (The Atlas Slave – பூமியை தோளில் சுமக்கும் அடிமை), ‘த அவேக்கனிங் ஸ்லேவ்’ (The Awakening Slave – விழித்தெழ முயலும் அடிமை), மற்றும் ‘த யங் ஸ்லேவ்’ (The Young Slave – இளம் அடிமை) ஆகிய சிற்பங்கள் நிறைவுபெறாதது போல காட்சியளித்தாலும், அவை அப்படிதான் இருக்கவேண்டுமென மைக்கெலேஞ்ச எண்ணினார். ஏனெனில் என்றென்றும் அடிமைப்பட்டிருப்பவனின் உணர்வுகளை அவர் வெளிக்காட்ட விரும்பினார்.

சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது போன்ற உருவங்களை செதுக்குவதற்கு பதில், பளிங்கு கற்களில் வெளிவர முடியாதபடி பதிந்து மாட்டிக்கொண்டிருக்கும் உருவங்களை செதுக்கினார். அப்பாறைகளிளிருந்து உடல்கள் வெளிவர முயல்வது போலவும், ஆனால் முழுமையாக வர இயலாதது போலவும் அவை செதுக்கப்பட்டுள்ளது. தசைகளெல்லாம் வளைந்தும் நெளிந்தும் மடங்கியும் காணப்பட்டாலும் அவ்வுருவங்களால் தங்களைத் தாங்களே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாது.

அந்த ‘அடிமைச்’ சிற்பங்களை கண்டபோது, அவற்றின் மீது எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஏனெனில், பாவத்தோடு எனக்கிருக்கும் போராட்டத்திற்கும், அவர்களுடைய அவலநிலைக்கும் எவ்வித வித்தியாசமில்லை. அச்சிற்பங்களைப் போலவே என்னை நானே விடுவித்துக்கொள்ள முடியாதபடி மாட்டிக்கொண்டுள்ளேன். அதாவது, “என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு [நான்] சிறையா[கினேன்]” (ரோ. 7:23). நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னால் என்னை மாற்ற இயலவில்லை. ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஏனெனில் நீங்களும் நானும் ஒருபோதும் முற்றுப்பெறாத கிரியை போல இருக்க மாட்டோம். நாம் பரலோகம் செல்லும் வரை முழுமையடையாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரை வரவேற்போமாக. ஏனென்றால் அவர் நம்மை மாற்றுவார். நம்மில் நற்கிரியை தொடங்கின தேவன் தாமே அதை செய்து முடிப்பாரென அவரே வாக்குப்பண்ணியுள்ளார் (பிலி. 1:5).