“எனது கணவர் பதவி உயர்வு பெற்று இன்னொரு நாட்டிற்கு அனுப்பப்படவிருந்தார். ஆனால் எனக்கு வீட்டை விட்டுச் செல்ல பயம். எனவே அவர் மிகுந்த தயக்கத்துடன் அந்த வாய்ப்பை வேண்டாமெனக் கூறிவிட்டார்” என்று என் தோழி என்னிடம் கூறினாள். ஒரு பெரிய மாற்றத்திற்காக பயமடைந்து ஒரு புதிய புத்துணர்வளிக்கும் வாய்ப்பை தான் தவறவிட்டதையும், வாழ்க்கையில் தான் இவ்வாறு இழந்ததை எண்ணி வருந்தியதையும் அவள் என்னோடு பகிர்ந்துகொண்டாள்.

“பாலும் தேனும் ஓடுகிற” (எண். 33;3) ஒரு வளமிக்க பசுமையான நாட்டை சுதந்தரிக்க அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களது பயமிக்க நினைவுகள் செயலிழக்க வைத்தன. பெரிய நகரங்களில் பெலமிக்க மக்கள் வாழ்வதாகக் கேள்விப்பட்டபோது அவர்களது பயம் பெருகியது (வச. 27) தேசத்தினுள் நுழையும் அழைப்பை பெரும்பாலான இஸ்ரவேலர்கள் நிராகரித்தனர்.

யோசுவாவும் காலேபும் தேவனை நம்பும்படி அவர்களிடம் கெஞ்சினார்கள், “அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 9) அங்கிருந்த ஜனங்கள் உருவத்தில் பெரியவர்களாயிருந்த போதிலும், தேவன் தங்களோடு இருப்பதை இஸ்ரவேலர் நம்பவேண்டும்.

வேறொரு தேசத்திற்கு செல்லும்படி, இஸ்ரவேலரைப் போல எனது தோழிக்கு யாரும் கட்டளை இடவில்லை. எனினும் பயத்தினால் அவ்வாய்ப்பை அவள் நழுவ விட்டாள். நீங்கள் எப்படி? ஒரு பயமிக்க சூழ்நிலையை சந்திக்கிறீர்களா? அப்படியானால், தேவன் உங்களோடிருக்கிறார். அவர் உங்களை வழிநடத்துவார் என்பதை நம்புங்கள். அவரது ஒருபோதும் கைவிடாத அன்பைப் பெற்று, விசுவாசத்தில் நாம் முன்னேறலாம்.