அறுபத்து ஐந்து மில்லியன். இன்றைய உலகில், சண்டைகள் மற்றும் உபத்திரவங்களினால் தங்களது வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை அது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதாகும். ஒவ்வொரு பிள்ளையும் கல்வி வாய்ப்பைப் பெறும்படியாகவும், ஒவ்வொரு பெரியவரும் அர்த்தமுள்ள ஒரு வேலையில் அமரும்படியாகவும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீட்டில் வாழும்படியாகவும் அகதிகளாக்கப்பட்டவர்களை ஏற்று உதவ வழிமுறைகளை இயற்றுமாறு உலகத் தலைவர்களை ஐக்கிய நாடுகள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அசிரிய அகதிகளுக்காக வீடுகளை உருவாக்கும் கனவுத்திட்டத்தை நான் யோசிக்கையில், பலம் படைத்த இராணுவம் யூதா தேசத்தாரை வீடுகளை விட்டு பயமுறுத்தும்போது தேவன் அளித்த வாக்குறுதியை நான் நினைவுகூருகிறேன். தீர்க்கதரிசியாகிய மீகாவை அனுப்பிய தேவன், ஜனங்கள் தங்களது ஆலயத்தையும் அன்பான எருசலேம் நகரத்தையும் இடிக்கப்போகிறார்களென எச்சரித்தார். ஆயினும் இழப்பிற்கு அப்பால் ஒரு அழகான எதிர்காலத்தை தேவன் வாக்குத்தத்தம் செய்தார்.

ஒரு நாள் வரும் அப்போது உலக மக்கள் அனைவரையும் தேவன் தம்மிடம் அழைப்பாரென்று மீகா கூறினார். யுத்த ஆயுதங்கள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும் தேவ சத்தத்தைக் கேட்கும் எவனும், அவரது இராஜ்யத்தில் ஒரு சமாதானமான குடும்ப வாழ்வையும் பயனுள்ள வாழ்க்கையையும் கண்டடைவான் (4:3-4).

இன்று உலகிலுள்ள பலருக்கு, ஒருவேளை உங்களுக்கும், சமாதானமிக்க ஒரு குடும்பமென்பது ஒரு தூரத்துக் கனவாக இருக்கலாம். அனைத்து தேசத்தாருக்கும் ஒரு வீடு உண்டென்னும் அந்த பண்டைய தேவ வாக்குறுதியை நாம் சார்ந்துகொள்ளும்போது, அதற்காக காத்திருந்து அதற்காக உழைத்து அதற்காக ஜெபிக்கும்போது அது ஒரு நடைமுறையாக மாறுவதை நாம் காணக்கூடும்.