
தேவனில் அன்பைக் கண்டடைதல்
சிறுவயதில், “நீ பெரியவனாகி என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டாலே, முகில், "நான் மனோஜை போல இருக்க விரும்புகிறேன்" என்பான். முகிலின் மூத்த சகோதரன் தடகள வீரன், சகஜமாகப் பழகுபவன் மற்றும் மரியாதைக்குரிய மாணவன். மறுபக்கம் முகிலோ "நான் விளையாட்டில் மோசமானவன், பயந்தவன், கற்றல் குறைபாட்டுடன் போராடினேன். நான் எப்போதும் மனோஜுடன் நெருங்கிய உறவை விரும்பினேன், ஆனால் அவனோ விரும்பவில்லை. அவன் என்னை 'சலிப்பானவன்' என்று அழைத்தான்" என்றான்.
முகில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, தனது மூத்த சகோதரனின் அன்பைப் பெறுவதிலேயே வீணாகச் செலவிட்டான். மாறாக, முகில் இயேசுவைப் பின்பற்றுபவனாக ஆனபோதுதான், தன் இரட்சகரின் அன்பில் இளைப்பாறிடக் கற்றுக்கொண்டான்.
யாக்கோபின் முதல் மனைவியான லேயாள், தன் வாழ்நாளின் பெரும்பகுதியில் தன் கணவனின் அன்பை நாடினாள் (ஆதியாகமம் 29:32-35). இருப்பினும், யாக்கோபு ராகேலிடம் பட்சமாய் இருந்தார். ஆனால் தேவன் லேயாளின் அவல நிலையைக் கண்டு அவள் வாழ்வில் நிராகரிக்கப்பட்டதற்கு ஈடுசெய்தார். அவர் அவளை ஒரு தாயாக அனுக்கிரகம் செய்து ஆசீர்வதித்தார், அக்காலத்தில் அவளுடைய கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய கனம் (வ.31). தன் கணவனால் கண்டுகொள்ளப்படாதவளாக, செவிகொடுக்கப்படாதவளாக இருந்த லேயாள், தேவனில் அன்புடன் பார்க்கப்பட்டாள், கேட்கப்பட்டாள் (வ.32-33). அவள் ஒரு மகளையும் ஆறு மகன்களையும் பெற்றெடுத்தாள், அவர்களில் ஒருவர் யூதா, இயேசுவின் முன்னோர். அவள் அவனுடைய பிறப்பின்போது, " இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" (வ.35) என்று கூறினாள். லேயாள் கானானில் நீண்ட காலம் வாழ்ந்தாள், மேலும் யாக்கோபின் குடும்பத்துடன் கனத்துக்குரிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள் (49:29-32).
நாம் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, லேயாளின் கதையால் ஆறுதல் காண்போம். நாம் இழந்ததை ஈடுசெய்யும் தேவனின் அன்பில் நாம் இளைப்பாறலாம்.

போலியான மதிப்பீடுகள் அல்ல
ஒரு வாடகை பகிர்வு சவாரி வாடிக்கையாளர், ஒரு ஓட்டுநர் உலகின் மிக நாற்றமான பழத்தைச் சாப்பிடுவதையும், மற்றொரு ஓட்டுநர் காதலியுடன் சண்டையிடுவதையும், மற்றொருவர் அவரை ஒரு மோசடி திட்டத்தில் முதலீடு செய்யும்படி முயன்றதையும் சகித்துக்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மோசமான மதிப்பீட்டிற்குப் பதிலாக, அவர் ஓட்டுநர்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்தார். அவர், “அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்களாகத் தோன்றினர். எனது மோசமான மதிப்பீட்டின் காரணமாக அவர்கள் அந்த பயன்பாட்டுச் செயலியிலிருந்து வெளியேற்றப்படுவதை நான் விரும்பவில்லை" என்றும் விளக்கமளித்தார். அவர் போலியாக விமர்சித்திருந்தார். ஓட்டுநர்களிடம் இருந்தும், பிறரிடமிருந்தும் உண்மையை மறைத்தார்.
வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் பிறரிடமிருந்து உண்மையை மறைக்கலாம். ஆனால் எபேசுவின் விசுவாசிகள் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டிகளாக, ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார். இதற்கு "நீதி மற்றும் பரிசுத்தம்" (எபேசியர் 4:24) எனும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது அதாவது அவருக்காக பிரித்தெடுக்கப்பட்டதும் ,அவருடைய வழிகளைப் பிரதிபலிப்பதுமான ஒரு வாழ்க்கை. அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசுவதின் மூலம் பொய்யை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் பொய்கள் பிரித்துச் சீர்குலைக்கும், உண்மையோ நம்மை விசுவாசிகளாக இணைத்திடும். அவர், "அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்" (வ.25) என்று எழுதினார்.
மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியத்தைச் சீர்குலைக்கக்கூடிய பொய்களையும், ஒருவருக்கொருவர் "போலி மதிப்பீடுகளை" வழங்குவதையும் எதிர்த்து நிற்கும் தைரியத்தை இயேசு நமக்கு அளிக்கிறார். அவர் நம்மை வழிநடத்துவதற்கேற்ப அன்பான ஒரு வாழ்க்கை வாழ்வது, "தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து" (வ.32) உண்மையின் வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.

தேவனில் ஞானமான கட்டுப்பாடு
1863 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் தெற்குப் படைகளின் பேரழிவுகரமான இழப்பைத் தொடர்ந்து, தோற்கடிக்கப்பட்ட தளபதி ராபர்ட் ஈ. லீ தனது தாக்கப்பட்ட துருப்புக்களை அவர்களின் சொந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தளபதி ஜார்ஜ் மீட் தலைமையிலான தனது படைகளைத் தாக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அவரது ஆட்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு, மாறாக மீட் தனது படைகளுக்கு ஓய்வளித்தார்.
அவரது வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்று கோபமடைந்த லிங்கன், தனது இறகு மைக்கோலை எடுத்து, தனது நியாயமான கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, ஒரு குறிப்பை எழுதினார். மாற்றாக, அதின் உறையின் மேலும் அவர்: "தளபதி மீட் அவர்களுக்கு, ஒருபோதும் அனுப்பப்படவும் இல்லை அல்லது கையொப்பம் இடப்படவுமில்லை" என்றெழுதினார், உண்மையாகவே, அது ஒருபோதும் பெறப்படவில்லை.
லிங்கனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மற்றொரு சிறந்த தலைவர் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார். எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், கோபம் என்பது ஆபத்தான ஆற்றல் வாய்ந்தது. சாலொமோன் ராஜா, "தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்" (நீதிமொழிகள் 29:20) என்றார். சாலொமோன் "நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்" (வ.4) என்பதை அறிந்திருந்தார். "மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்" (வ.11) என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
இறுதியில், அந்த கடிதத்தை அனுப்பாதது, லிங்கனை அவரது உயர்மட்ட தளபதியை மனச்சோர்வடைய செய்வதிலிருந்து தடுத்தது, தேவையான போரை வெல்ல உதவியது மற்றும் ஒரு தேசத்தின் குணமாகுதலுக்கும் பங்களித்தது. அவருடைய கனமான கட்டுப்பாடு போன்ற உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது நமக்கும் நல்லது.

தேவனின் இரக்கத்தைப் பிரதிபலித்தல்
ரஷ்யாவுடனான மூன்று மாத குளிர்காலப் போரில் (1939-1940) பின்லாந்தைச் சேர்ந்த ஒரு வீரர் போர்க்களத்தில் காயமடைந்து கிடந்தார். ஒரு ரஷ்ய வீரர் தனது துப்பாக்கியை அவருக்கு நேரே நீட்டியபடியே அவர் அருகே சென்றார். காயமடைந்தவர், தான் மரிக்கப்போவதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், ரஷ்யர் ஒரு மருத்துவப் பொருட்கள் கொண்ட பெட்டியை அவரிடம் கொடுத்தார், அது அவரது உயிரைக் காப்பாற்றியது. ஆச்சரியப்படும்படி, முன்னர் காயமடைந்த இந்த வீரர் பின்னர் இதேபோன்ற சூழ்நிலையில் தன்னைக் கண்டார், கதாபாத்திரங்கள் மட்டுமே தலைகீழாக மாறி இருந்தது; ஒரு ரஷ்ய வீரர் காயமடைந்து உதவியற்ற நிலையில் போர்க்களத்தில் கிடக்க. இப்போது காயமடைந்த எதிரிக்கு உதவ இவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தது.
இயேசுவானவர் நம் வாழ்க்கைக்கு மையமானதும் வழிகாட்டுவதுமான ஒரு நியமத்தைக் கொடுத்தார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12). விசுவாசிகள் இந்த ஒரு எளிய கொள்கையைக் கடைப்பிடித்தால், நம் உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ? நாம் அனைவரும் இயேசுவின் ஞான ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தால் எவ்வளவு அடக்குமுறை முடிவுக்கு வரும் என்று கணிக்க முடிகிறதா? அவர் நம்மை வழிநடத்தினால் மாத்திரமே, நாம் பெறுவோம் என்று நம்புகிற அதே இரக்கத்தையும் கருணையையும் நாம் பிறருக்கும் கொடுப்போம். நாம் பிறருக்கு "நல்ல ஈவுகளை" கொடுக்கும்போது, தாம் நேசிக்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கும் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவின் (வ.11) இருதயத்தையே பிரதிபலிக்கிறோம்.
பிறரை வெறும் சத்துருக்களாகவோ அல்லது அந்நியர்களாகவோ அல்லது உடைமைகளுக்காகவும் வாய்ப்புகளுக்காக நாம் போட்டியிடும் நபர்களாகவோ பார்க்காமல் இருப்பது அவசியம். மாறாக, நம்மைப்போன்றே அவர்களுக்கும் வேண்டிய கருணை மற்றும் இரக்கத்தின் தேவையை நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நமது அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாறும். பின்னர், தேவன் வழங்குவதற்கேற்ப அவர் நமக்கு இலவசமாக அருளிய அன்பை நாம் அவர்களுக்கும் இலவசமாக அருள முடியும்.
