Archives: ஜூலை 2024

நான் சேர்ந்தவனா?

நடிகை சாலி ஃபீல்ட், இறுதியாக நாம் அனைவரும் விரும்புவதை உணர்ந்தார். 1985இல் அவர் இரண்டாவது ஆஸ்கார் விருதை வென்றபோது, அவர் தனது ஏற்பு உரையில், “உங்கள் மரியாதையைப் பெற நான் எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்பினேன். முதல் முறையாக நான் அதை உணரவில்லை. ஆனால் இந்த முறை நான் அதை உணர்கிறேன். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது, இப்போதே, அதை நான் நம்புகிறேன்” என்று சொன்னார். 

ஒரு எத்தியோப்பியன் மந்திரியும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து வியப்படைந்தார். ஒரு புறஜாதியும், அண்ணகருமான அவர், ஆலயத்தின் உள் பிரகாரங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார் (எபேசியர் 2:11-12; உபாகமம் 23:1 ஐப் பார்க்கவும்). ஆனாலும் சேர்த்துக்கொள்ளப்பட ஆசைப்பட்டார். அவர் எருசலேமுக்கு மற்றொரு திருப்தியற்ற யாத்திரையிலிருந்து திரும்பி வருவதை பிலிப்பு கண்டார் (அப்போஸ்தலர் 8:27).

எத்தியோப்பிய மனிதன் ஏசாயா புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். அதில் தேவனுடைய உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர், “நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்... இடத்தையும்... என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்” (ஏசாயா 56:4-5) என்று சொல்லுகிறார். இது எப்படி சாத்தியமாகும்? அப்போது பிலிப்பு, “இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.” அதற்கு அந்த மனிதன், “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்” (அப்போஸ்தலர் 8:35-36).

அவன், நான் இதற்குள் அனுமதிக்கப்படுவேனா? நான் இதற்கு பாத்திரனா? என்று கேட்கிறான். அவனுக்கு இருந்த தடைகள் எல்லாவற்றையும் இயேசு அகற்றிவிட்டார் என்பதற்கு அடையாளமாய் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார் (எபேசியர் 2:14). பாவத்திலிருந்து விலகி, தம்மீது நம்பிக்கை வைக்கும் அனைவரையும் இயேசு அரவணைத்து, ஒன்றிணைக்கிறார். அந்த மனிதன் “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (அப்போஸ்தலர் 8:39). அவர் இறுதியாகவும் முழுமையாகவும் தேவனண்டை சேர்த்துக்கொள்ளப்பட்டார். 

 

இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

1800 களின் முற்பகுதியில், எலிசபெத் ஃப்ரை, லண்டன் பெண்கள் சிறையில் இருந்த நிலைமைகளைக் கண்டு திகைத்தார். பெண்களும் அவர்களது குழந்தைகளும் ஒன்று கூடி குளிர்ந்த கல் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு படுக்கை வழங்கப்படவில்லை என்றாலும், ஒரு குழாய் மூலம் அவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர் பிரயாசப்பட்டு, அவர்களுக்கு உடைகளை வழங்குவதின் மூலமும், பிள்ளைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியை திறப்பதின் மூலமும், வேதாகமத்தை அவர்களுக்கு போதிப்பதின் மூலமும் அங்ஙனம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் அவர்களுடன் இருக்கும்போதும், அங்கிருந்த அனைவரும் அவரை நம்பிக்கையின் ஆதாரமாய் பார்த்தனர். 

தேவையில் உள்ளவர்களுக்கு நன்மை செய்யும்படியான இயேசுவின் போதனையை அவள் செயல்படுது;தினாள். உதாரணத்திற்கு, இயேசு ஒலிவ மலையில் பிரசங்கிக்கும்போது, உலகத்தின் முடிவைக் குறித்து பல உவமைகளை போதித்தார். அதில் குறிப்பாய், “நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்” (மத்தேயு 25:46) என்று போதிக்கிறார். இந்த சம்பவத்தில் ராஜா, “பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்” (வச. 35-36) என்று சொல்லுகிறார். அவர்கள் அவ்வாறு செய்வதை நினைவுபடுத்த முடியாதபோது, ராஜா பதிலளிக்கிறார்: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று அவர்களுக்கு இயேசு வலியுறுத்துகிறார். 

பரிசுத்த ஆவியின் உதவியால் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, இயேசுவைச் சேவிப்பது என்ன ஆச்சரியம்! எலிசபெத் ஃப்ரையின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம், மேலும் வீட்டில் இருந்தபடியே பரிந்துபேசுதல் அல்லது ஊக்கமளிக்கும் செய்திகளை அனுப்புதல் போன்றவற்றின் மூலம் சேவை செய்யலாம். நம்முடைய ஆவிக்குரிய வரங்களையும் திறமைகளையும் மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்தும்போது, அவரை நேசிக்க இயேசு நம்மை வரவேற்கிறார்.

 

சாக்லேட்டில் சிக்கியது

பென்சில்வேனியாவில் உள்ள மார்ஸ் மிட்டாய் தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்கள் ஒரு பெரிய சாக்லேட்டு கலவையில் விழுந்தனர். இது பார்ப்பதற்கு ஒரு நகைச்சுவையாக தெரியலாம். சாக்லேட் விரும்பிகளுக்கு இது சங்கடமாய் தெரியலாம். ஆனால் அதில் விழுந்த நபர்களுக்கு பெரிதளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இடுப்பு அளவு சாக்லேட் கலவையில் சிக்கியிருந்ததால், அவர்களால் வெளியே வர முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் இறுதியில் அவர்களை வெளியே கொண்டுவருவதற்கு, பக்கவாட்டில் ஒரு துளையை ஏற்படுத்த வேண்டியிருந்தது. 

எரேமியா தீர்க்கதரிசி சேறு நிரம்பிய தொட்டியின் அடியில் தன்னைக் கண்டபோது, கதை இனிமையாக இருந்தது. எருசலேமில் உள்ள தேவ ஜனத்திற்கு ஒரு தீர்க்கதரிசியாக, அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசரத்தை அவர் அறிவித்தார். ஏனெனில் அது விரைவில் “பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்” (எரேமியா 38:2). எரேமியா மக்களின் “கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்” (வச. 4) என்று குற்றஞ்சுமத்தி, சிதேக்கியா ராஜாவின் அதிகாரிகள் சிலர் எரேமியா “கொல்லப்பட உத்தரவாகவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். ராஜா ஒப்புக்கொண்டான். அவர்கள் “எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்” (வச. 6).

ராஜாவின் அதிகாரிகளில் ஒருவன் அவனுக்கு காரியத்தை வெளிப்படுத்தியபோது, ராஜா தான் செய்த தப்பிதத்தை உணார்ந்து, ஏபெத்மெலெக்கிற்கு உத்திரவிட்டு, எரேமியாவை துரவிலிருந்து வெளியேறச்செய்தான் (வச. 9-10). 

எரேமியாவைப் போல நாம் சரியானதைச் செய்யும்போது கூட, சில சமயங்களில் நாம் சேற்றில் சிக்கிக்கொண்டது போல் உணரலாம். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் அவருடைய உதவிக்காகக் காத்திருக்கையில், நம் ஆவிகளை உயர்த்தும்படி தேவனிடத்தில் விண்ணப்பிப்போம்.

 

கிறிஸ்துவில் நம் போராயுதங்கள்

பாஸ்டர் பெய்லியின் புதிய நண்பர், அவரது வாழ்க்கையில் சந்தித்த துஷ்பிரயோகங்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கதையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞன் இயேசுவின் விசுவாசியாக இருந்தபோதிலும், சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டவனாயிருந்ததினால், அவனுடைய வயதிற்கு மிஞ்சிய பிரச்சனைகளை அந்த பருவத்தில் அவன் சந்திக்க நேரிட்டது. அவனுடைய அந்த இக்கட்டான வாழ்க்கை தருணத்தில் அந்த போதகர் அவனுக்கு உதவிசெய்தார். 

கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகளுடன் போரிடுகிறோம் (2 கொரிந்தியர் 10:3-6). ஆனால் நமது ஆவிக்குரிய யுத்தங்களை போராடுவதற்கு நமக்கு யுத்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை உலகத்தின் ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவைகள் “அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (வச. 4). அதற்கு என்ன பொருள்? "பலம்" என்பது நன்கு கட்டப்பட்ட, பாதுகாப்பான இடங்கள். நமது தேவன் கொடுத்த ஆயுதங்களில், “நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருக்கிறதிலும்” (6:7) நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போம். எபேசியர் 6:13-18, வேதம், விசுவாசம், இரட்சிப்பு, ஜெபம் மற்றும் பிற விசுவாசிகளின் ஆதரவு உட்பட நம்மைப் பாதுகாக்க உதவும் காரியங்களின் பட்டியலை விரிவுபடுத்துகிறது. நம்மை விட பெரிய மற்றும் வலிமையான சக்திகளை எதிர்கொள்ளும்போது, இந்த ஆவிக்குரிய ஆயுதங்களை கையகப்படுத்துவது, நிற்பதற்கும் தடுமாறுவதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

தனியாகச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய சக்திகளுடன் போராடுபவர்களுக்கு உதவ தேவன் ஆலோசகர்களையும், பல நிபுணர்களையும் பயன்படுத்துகிறார். நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவின் மூலமாக நாம் போராடும் போது, நாம் முடங்கிப்போக அவசியமில்லை. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் நம்மிடத்தில் இருக்கிறது! 

 

தேவனோடு போராடுதல்

என் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு நீண்டகால நண்பர் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்: “(ஆலன்) ... தேவனுடன் போராடுபவர். அவர் ஒரு உண்மையான யாக்கோபு. மேலும் நான் இன்று ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு அவர் ஒரு வலுவான காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. ஆலனின் போராட்டங்களை முற்பிதாவான யாக்கோபுடன் ஒப்பிட நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால் அது சரியாய் பொருந்துகிறது. தனது வாழ்நாள் முழுவதும், ஆலன் சுயத்துடனும் பதில்களுக்காக தேவனுடனும் போராடினார்;. அவர் தேவனை நேசித்தார்; ஆனால் தேவன் அவரை நேசிக்கிறார், மன்னிக்கிறார் மற்றும் அவருடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்னும் சத்தியங்களை விளங்கிக்கொள்ள முடியாமல் சிலவேளைகளில் போராடினார். ஆயினும்கூட, அவரது வாழ்க்கை அதன் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தது. அவர் பலரை நேர்மறையாய் ஊக்கப்படுத்தினார். 

யாக்கோபின் வாழ்க்கையானது போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவன் தன் சகோதரன் ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற தீர்மானித்தான். அவன் வீட்டை விட்டு ஓடிப்போய், தனது உறவினர் மற்றும் மாமனாருமான லாபானுடன் பல ஆண்டுகளாக போராடினான். பிறகு லாபானை விட்டு தப்பி ஓடினான். அவன் தனிமையில் ஏசாவை சந்திக்க பயந்தான். ஆயினும்கூட, அவனுக்கு பரலோக தரிசனம் கிடைத்தது. “தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (ஆதியாகமம் 32:1). இது ஒருவேளை தேவனிடமிருந்து அவர் பெற்ற முந்தைய தரிசனத்தின் நினைவூட்டலாக இருக்கலாம் (28:10-22). இப்போது யாக்கோபு வேறொரு தெய்வீக நபரை சந்திக்கிறார்: இரவு முழுவதும் அவர் ஒரு “மனிதனுடன்” போராடினார். மனித உருவில் இருந்த தேவனுடைய பிரதிநிதியான அந்த தெய்வீக நபர், “தேவனோடும் மனிதரோடும் போராடி” (32:28) மேற்கொண்டான் என்பதினால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்கிறார். இவையெல்லாவற்றிலும் தேவன் யாக்கோபோடு இருந்து அவனை நேசித்தார். 

நம் அனைவருக்கும் போராட்டங்கள் உள்ளன. ஆனால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு சோதனையிலும் தேவன் நம்முடன் இருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மன்னிக்கப்படுகிறார்கள், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கின்றனர் (யோவான் 3:16). நாம் அவரைப் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.